ரோகித் சர்மா - மிட்செல் ஸ்டார்க் web
T20

’ரோகித்திடம் இருந்து அதை எதிர்பார்க்கல!’ - 29 ரன்கள் விளாசப்பட்ட ஓவர் குறித்து ஸ்டார்க் ஓபன் டாக்!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒருவரின் ஆக்ரோசமான பேட்டிங்கிடம் மட்டுமே ஆஸ்திரேலியா அணி வீழ்ந்தது.

காற்றின் எதிர்திசையில் விராட் கோலி அடித்த பந்து கேட்ச்சாக மாறி 0 ரன்னில் வெளியேறினாலும், விக்கெட் விழுந்த தடமே தெரியாமல் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் காற்றின் திசையை பயன்படுத்தி 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அடித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவின் மகிழ்ச்சியை தட்டிப்பறித்தார்.

rohit

41 பந்தில் 7 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஹிட்மேன் 92 ரன்கள் குவித்து இந்திய அணியை 205 ரன்களுக்கு அழைத்துச்சென்றார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

29 ரன்கள் ஓவர் குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க்..

போட்காஸ்ட் ஒன்றில் கலந்து பேசிய மிட்செல் ஸ்டார்க் தனக்கெதிராக ரோகித் சர்மா அடித்த அடியை பற்றியும் ஓப்பனாக பேசினார்.

29 ரன்கள் ஓவர் குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க், “நான் இதற்கு முன்பும் அவருக்கு எதிராக அதிகம் விளையாடியிருக்கிறேன். அவர் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறந்த பேட்டிங்கை வைத்திருந்தார், எங்கள் போட்டியிலும் அது வெளிப்பட்டது. ஆடுகளத்தில் இருந்த காற்றின் திசையை பயன்படுத்தி அவர் அடித்தார் என நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், ஒவ்வொரு முடிவிலிருந்தும் பாருங்கள் என்னுடைய அனைத்து பந்துகளும் ஒன்றிற்கு ஒன்று இன்னும் தூரமாக அவரால் அடிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக நான் அந்த திசையில் இருந்து 5 மோசமான பந்துகளை வீசினேன், அதை அனைத்தையும் அவர் தண்டித்து சிக்சருக்கு அனுப்பினார்” என்று பேசியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான தோல்வியால் 2021 டி20 உலகக்கோப்பையின் சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா தொடரிலிருந்தே வெளியேறியது.