ajit - kohli - michael web
T20

“தேவையில்லை என நினைத்தால் கோலியை கூட நீக்குங்கள்!” - அஜித் அகர்கரிடம் கூறிய மைக்கேல் வாகன்!

"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் கோப்பையை வெல்லக்கூடிய அணியை தைரியமாக தேர்ந்தெடுங்கள்" என்று அஜித் அகர்கரிடம் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் இந்தியாவின் இளம் வீரர்கள் தொடங்கி மூத்தவீரர்களுக்கும் முக்கியமான தொடராக இது அமைந்துள்ளது.

இதற்கு மத்தியில், விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டுமா என்று கேள்வியே தற்போது அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

virat kohli

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி இடம்பிடிக்க மாட்டார் என்றும், ஒருவேளை அவர் இடம்பிடிக்க வேண்டுமென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவேண்டும் என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விராட் கோலியின் இடம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Ajit Agarkar

இந்நிலையில் பல முன்னாள் வீரர்கள் விராட் கோலி டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறவேண்டும் என்று கூறிவரும் நிலையில், “விராட் கோலி அல்லது கேஎல் ராகுல் இடம்பெறாமலே இந்திய அணியால் கோப்பை வெல்ல முடியும் என்று நீங்கள் நம்பினால் அந்த முடிவை தைரியமாக எடுங்கள்” என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

தேவையில்லை என நினைத்தால் கோலியை கூட நீக்குங்கள்!

கிறிக்பஸ் உடன் இதுபற்றி பேசியிருக்கும் மைக்கேல் வாகன், “நான் அஜித் அகர்கரிடம் என்ன சொல்வேன் என்றால், தைரியமாக இருக்க பயப்பட வேண்டாம். விராட் கோலி அல்லது கே.எல் ராகுல் இல்லாமல் இந்திய டி20 அணி சிறப்பாக இருக்கும் என்று உறுதியாக நம்பினால், நீங்கள் அணியை அப்படியே வழங்கலாம்” என்று கூறியுள்ளார்.

மைக்கேல் வாகன்

மேலும், “உங்களிடம் பெரிய வீரர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரையும் தேர்வு செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர்கள் கோப்பைகளை வெல்லவில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதையெல்லாம் தாண்டி கடந்த டி20 உலகக்கோப்பை தோல்வி, 2023 உலகக்கோப்பை தோல்வி எல்லாவற்றையும் கடந்து ஒரு புத்துணர்ச்சியான அணியை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். உங்களிடம் 30 பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தால், பவுலர் - பேட்டர் - ஸ்பின்னர் என ஒவ்வொரு பெயராக நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், ஒவ்வொரு முறையும் உங்களுக்கு பெரிய சவால் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Virat Kohli

இவை எல்லாவற்றையும் தாண்டி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் விராட் கோலி, 17 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 203 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார்.