2024 டி20 உலகக்கோப்பையில் இதுவரை 3 லீக் போட்டிகளில் இந்திய அணி விளையாடியிருக்கும் நிலையில், மூன்று போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆட்டநாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அந்தவகையில் அயர்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவும், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்கும் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுகப்பட்டனர்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித், சூர்யாகுமார் இருவரும் தலா ஒரு அரைசதமும், ரிஷப் பண்ட் 36 மற்றும் 42 ரன்கள் என மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே சோபித்துள்ளனர். எப்போதும் மூன்றாவது வீரராக ஜொலிக்கும் விராட் கோலி, தொடக்க வீரராக மூன்று போட்டிகளிலும் 1, 4, 0 என ஓரிலக்க ரன்களில் வெளியேறி சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பை மாற்றவேண்டும் எனவும், விராட் கோலி எப்போதும் போல 3வது வீரராகவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்
இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் குறித்து பேசியிருக்கும் மைக்கேல் வாகன், “யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர், அதனால் அவரை இந்தியா ஆடும் அணியில் எடுத்துவர வேண்டும். வழக்கம்போல கோலி 3வது இடத்தில் ஆடவேண்டும், ரிஷப் பண்ட் மற்றும் ஷிவம் துபே என இரண்டு இடதுகை வீரர்கள் மிடில் ஆர்டரில் இருப்பதால் இந்தியாவிற்கு அது பெரிய பாதகமாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
ஜெய்ஸ்வால் குறித்து பேசியிருக்கும் வாகன், “எனக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மிகவும் பிடிக்கும், அவர் சூப்பர் 9 போட்டிகளில் இந்தியாவின் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என விரும்புகிறேன். விராட் கோலி நம்பர் 3-க்கு செல்லவேண்டும், ரிஷப் பண்ட் மற்றும் ஷிவம் துபே மிடில் ஆர்டரில் இருப்பதால் ஒரு வலது கை ஆட்டக்காரர் நம்பர் 3-க்கு செல்வதில் எந்த கவலையும் இந்தியாவிற்கு இருக்காது. மேலும் கரீபியன் ஆடுகளங்களில் யஷஸ்வி ஒரு சிறந்த வீரர். ஆகவே அவர் முதலில் விளையாட நான் விரும்புகிறேன்" என்று வாகன் கிரிக்பஸ் உடன் கூறினார்.
இதற்கு முன்பு இந்திய அணியில் இடது கை வீரர்கள் இல்லாதது பாதகமாக இருந்தது என்று கூறிய அவர், “இம்முறை இந்திய அணி இடது கை வீரர்களுடன் சென்றிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கடந்த காலத்தில் இந்திய அணியில் போதிய இடது கை வீரர்கள் இல்லாத பாதகமாக அமைந்தது. அதனால் அவர்களின் இடதுகை வீரரின் தேவையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த இடத்தில் இருந்தே ஜெய்ஸ்வால் அணியில் விளையாட நான் விரும்பினேன்" என்றும் கூறியிருக்கிறார்.