கோலி, க்ளென் மேக்ஸி , ஃபாஃப் ஆகிய மூன்று பேர் சேர்ந்த கே.ஜி.எஃப் எனும் மூன்றெழுத்து கூட்டணியைத் தவிர, ஆர்.சி.பி. எனும் மூன்றெழுத்து அணியில் ஒருவர் கூட மூன்று இலக்கு ரன்களை இத்தொடரில் எட்டவில்லை. நான்காவது அதிகபட்ச ஸ்கோரே நாற்பத்தி ஏழுதான். ஃபீல்டிங் செய்ய 11 பேர் வேண்டும் என்பதால் வேறு வழியே இல்லாமல் 11 பேரை தேர்வு செய்து ஆடிக்கொண்டிருக்கிறது ஆர்.சி.பி. கொடுமையிலும் கொடுமையாக, நேற்று பச்சை சட்டை அணிந்து வேறு விளையாடினார்கள் ஈ சாலாக்கள். பச்சை சட்டையின் விதியை மாற்றி எழுதுவார்களா, மூவரைத் தவிர வேறு யாரேனும் பேட்டிங்கில் ரன் அடிப்பார்களா என பல கேள்விகளுடன் தொடங்கியது போட்டி. சின்னசாமி மைதானத்தில் நேற்று மதியம் நடந்தப் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.
கோலியும் டூப்ளெஸ்ஸியும் ஓபனிங் இறங்க, `முதல் ஓவர் முத்துப்பாண்டி' போல்ட் முதல் ஓவரை வீசினார். விரலை சுழற்றி பந்தை எறிந்ததில், முதல் பந்தே கேப்டன் கோலி, எல்.பி.டபிள்யு! பெங்களூர் ரசிகர்கள் அரண்டு போனார்கள். சிலர், வெறியாகி ஹல்க் ஹோகனைப் போல் அணிந்திருக்கும் பச்சை டி-ஷர்ட்டை கிழித்து எரிந்தார்கள். சந்தீப் சர்மா, 2வது ஓவரை வீசினார். இரண்டு பவுண்டரிகள் அடித்தார் டூப்ளெஸ்ஸி. போல்ட் வீசிய 3வது ஓவரில், முதல் பந்திலேயே மீண்டும் ஒரு விக்கெட். சபாஷ் அகமது காலி! ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேக்ஸ்வெல் உள்ளே வந்தார். சந்தித்த முதல் பந்திலேயே, பவுண்டரி. `பச்சை சட்டை போட்ட நாங்க, வெட்ட வெட்ட வளருவோம்' என ஆர்.சி.பியன்களின் கண்கள் சிவந்தது. அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார் மேக்ஸ்வெல்.
சந்தீப் சர்மாவின் 4வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், மற்றுமொரு பவுண்டரி என பறக்கவிட்டார் டூப்ளெஸ்ஸி. 5வது ஓவர் வீசிய போல்ட்டை, முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் மேக்ஸ்வெல். ஓவரின் 4வது பந்தில் இன்னொரு பவுண்டரி. ரவி அஸ்வின் வீசிய 6வது ஓவரில், திக் இன்சைடு எட்ஜாகி ஒரு பவுண்டரி கிடைத்தது மேக்ஸ்வெல்லுக்கு. பிறகு வீசிய கேரம் பந்தையும் சிக்ஸரில் பாக்கெட் செய்தார். பவர்ப்ளேயின் முடிவில் 62/2 என விக்கெட்கள் போனாலும் விறைப்பாக ஆடிக்கொண்டிருந்தது.
சின்னசாமி மைதானத்தின் பவுலிங் படை அரசன் சஹலின் 7வது ஓவரில், சிக்ஸர் ஒன்றைப் பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். ஹோல்டர் வீசிய 8வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 9வது ஓவரை வீசிய சஹலும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஹோல்டரின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் டூப்ளெஸ்ஸி. ஒரு சிக்ஸர் அடித்தது தனது அரைசதத்தை நிறைவு செய்தார் மேக்ஸ்வெல்! அதே ஓவரில், மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் டூப்ளெஸ்ஸி. 10 ஓவர் முடிவில், 101/2 என பசுமையாக ஆடிக்கொண்டிருந்தது ஆர்.சி.பி.
11வது ஓவரை வீசவந்தார் அஸ்வின். 2வது பந்து, சிக்ஸருக்கு பறந்தது. போல்ட் வீசிய 12வது ஓவரில், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது, ஒரு பவுண்டரியோடு டூப்ளெஸ்ஸியின் அரைசதமும் வந்தது. அஸ்வினின் 13வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சந்தீப் வீசிய 14வது ஓவரில், முதல் பந்து பவுண்டரிக்கு தட்டினார் டூப்ளெஸ்ஸி. அடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவரில் தட்டிவிட்டு ஓட முயற்சிக்க, பந்தை எடுத்து மின்னல் வேகத்தில் ஸ்டெம்பில் எறிந்தார் ஜெய்ஸ்வால்! டூப்ளெஸ்ஸி 39 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட். ஆர்.சி.பி. ரசிகர்கள் மனதை விட்டார்கள். அஸ்வினின் 15வது ஒவரில், லோம்ரோர் ஒரு பவுண்டரி அடித்தார். ஓவரின் கடைசிப்பந்தில், ஸ்விட்ச் ஹிட் ஆடுகிறேன் என ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்தார் மேக்ஸ்வெல். சின்னசாமி மைதானத்தில் மின்சாரம் தாக்கியது. 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அமைதியாக கிளம்பினார் மேக்ஸ்வெல். தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார்.
களத்தில் லோம்ரோரும் தினேஷ் கார்த்திக்கும்! `ஒர்க் ஃப்ரம் ஸ்டேடியம்' என பாதி ரசிகர்கள் தங்களது வேலையைப் பார்க்க அமர்ந்தார்கள். சிலர் ரீல்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர், போனில் போன மேட்ச்களின் ஹைலட்களைப் பார்க்கத் துவங்கினார்கள். ஹோல்டர் வீசிய 16வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சஹலின் 17வது ஓவரில், லோம்ரோர் விக்கெட் காலி. படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்துவிட்டு, பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து வந்த பிரபுதேசாயும் ரன் அவுட். ஆர்.சி.பி ரசிகர்களுக்கு இதெல்லாம் நடக்கும் என முன்கூட்டியே தெரிந்திருந்ததால், வேறு வேலையைப் பார்க்கத் துவங்கியிருந்தார்கள். மைதானாமே மயான அமைதியுடன் இருந்தது. ஹோல்டரின் 18வது ஓவரில், தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி அடித்தார். சஹலின் 19வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில், ஹசரங்காவை ரன் அவுட் அடித்தார் சாம்சன். கார்த்திக் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு, அடுத்த பந்திலேயே பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பந்தில், வைசாக் விஜய்குமாரும் அவுட். 5வது பந்தில், வில்லி ஒரு பவுண்டரி அடிக்க 189/9 என கொடூரமாக இன்னிங்ஸை முடித்தது ஆர்.சி.பி. 220 ரன்களுக்கு மேல் வந்திருக்க வேண்டிய ஸ்கோரை, ராயல்ஸ் பவுலர்களுடன் இணைந்து இழுத்துப் பிடித்தது ஆர்.சி.பி-யின் மிடில் ஆர்டர்.
ஃபாஃபுக்கு பதில் ஹர்ஷல் படேல், இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். ஜெய்ஸ்வாலும் பட்லரும் ராயல்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் சிராஜ். ஓவரின், 4வது பந்து ஸ்டெம்ப் தெறித்தது. பட்லருக்கு ஒரு அவித்த முட்டையை கொடுத்து அனுப்பினார் சிராஜ். படிக்கல் உள்ளே வந்தார். வில்லி வீசிய 2வது ஓவரில், ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி அடித்தார். சிராஜின் 3வது ஓவரில், முதல் இரண்டு பந்துகளை பவுன்டரிக்கு விரட்டினார் படிக்கல். வில்லியின் 4வது ஓவரில், ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி அறைந்தார். வைசாக் விஜய்க்குமார் வீசிய முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய படிக்கல், ஒரு பந்து இடைவெளி விட்டு 4வது பந்தையும் பவுண்ட்ரிக்கு விரட்டினார். 5வது ஓவரை வீசவந்தார் மேக்ஸ்வெல். பவுண்டரியுடன் வரவேற்றார் படிக்கல். 4வது பந்தில் பெரிய சிக்ஸர் ஒன்றை அடித்தார் ஜெய்ஸ்வால்! பவர்ப்ளேயின் முடிவில் 47/1 என விக்கெட் விழுந்தாலும் கொஞ்சம் நிமிர்ந்து நின்றது ராயல்ஸ்.
ஹர்ஷல் வீசிய 7வது ஓவரின் முதல் பந்து, லாங் ஆஃபில் ஒரு சிக்ஸரை கடாசினார் படிக்கல். மேக்ஸ்வெல் வீசிய 8வது ஓவரின் முதல் பந்தும், சிக்ஸருக்கு பறந்தது. இம்முறை ஜெய்ஸ்வால்! கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரியும் தட்டினார். ஹசரங்காவின் 9வது ஓவரில், ஒரு பவண்டரியை விரட்டினார் படிக்கல். வைசாக் விஜய்க்குமார் வந்தார். வழக்கம்போல் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை படிக்கல்லிடம் வாங்கிக் கட்டினார். 10 ஓவர் முடிவில், 92/1 என விரட்டி வந்தது ராயல்ஸ். 60 பந்துகளில் 98 ரன்கள் தேவை.
ஹசரங்காவின் 11வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் படிக்கல். வில்லியின் 12வது ஓவரில், பெரிய ஷாட்டுக்கு போக முயன்று லாங் ஆனில் கோலியிடம் கேட்ச் ஆனார் படிக்கல். கேப்டன் சஞ்சு உள்ளே வந்தார். ஹசரங்கா வீசிய 13வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே. ஹர்ஷல் படேலின் 14வது ஓவரில், மீண்டும் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஜெய்ஸ்வால். கேட்ச் பிடித்த கோலி, சின்னசாமி ரசிகர்களுக்கு முத்தங்களைப் பறக்கவிட்டார். ஹசரங்காவின் 15வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பயமுறுத்தினார் கேப்டன் சாம்சன். கடைசியில், அவரும் அடுத்த ஓவரிலேயே, சபாஷ் அகமதின் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஃபீல்டரின் இரு பக்கங்களில் ஏதோ ஒரு பக்கம் ஒரு அடிதூரம் பந்து விலகி சென்றிருந்தாலும் மற்றுமொரு பவுண்டரி. இது நேராக, கையில் சிக்கிக்கொண்டது. 16 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் எடுத்திருந்தது ராயல்ஸ் அணி. 24 பந்துகளில் 61 ரன்கள் தேவை. சிராஜின் 17வது ஓவரில், ஒரு பவுண்டரியைத் தட்டினார் ஜுரேல். அதே ஓவரில், இன்னொரு பவுண்டரியும் கிடைத்தது. வில்லி வீசிய 18வது ஓவரின் முதல் பந்திலேயே, சிக்ஸரைப் பறக்கவிட்டார் வில்லி. ஆனால், ஓவரின் 5வது பந்தில் ஹெட்மயர் ரன் அவுட் ஆனார். ஆர்.சி.பிக்கு ஜெய்ஸ்வால் செய்ததை, ராயல்ஸுக்கு திருப்பி செய்தார் பிரபுதேசாய்!
12 பந்துகளில் 33 ரன்கள் தேவை. ஹோல்டரை இறக்கிவிடுவார்கள் எனப் பார்த்தால் அஸ்வினை இறக்கியிருந்தார் சஞ்சு. சிராஜின் 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் ஜுரேல். 6 பந்துகளில் 20 ரன்கள் தேவை. முதல் பந்தில், அஸ்வின் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து, டபுள்ஸ். மூன்றாவது பந்து மீண்டும் அஸ்வின். 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை. பிரபுதேசாயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹோல்டரை இறக்குவார்கள் எனப் பார்த்தால், இம்பாக்ட் வீரராக அப்துல் பாசித்தை இறக்கினார்கள். இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள் மட்டுமே வந்தது. 20 ஓவர் முடிவில் 182/6 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பேட்டிங்கில் கலக்கிய மேக்ஸ்வெல், ஆட்டநாயகன் விருது பெற்றார்.