டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்படினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
பேட்டிங்கை தேர்வுசெய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நிம்மதியில்லாத இரவை கொடுக்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு சிஎஸ்கே பவுலர்களுக்கு எதிராகவும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி, 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 9 ஓவர்களுக்கு 90 ரன்களை எடுத்துவந்து அசத்தியது.
டேவிட் வார்னர் 52 ரன்னிலும், பிரித்வி ஷா 43 ரன்னிலும் வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 31 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். ஆனால் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு யார்க்கர் டெலிவரி வீசிய பதிரானா, மிட்செல் மார்ஸ் மற்றும் ஸ்டப்ஸ் இருவரின் ஸ்டம்புகளை தகர்த்தெரிந்தார். மற்ற பேட்டர்கள் யாரும் சோபிக்காத நிலையில் 200 ரன்களை நோக்கி சென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பதிரானாவின் அசத்தலான பவுலிங்கால் 191 ரன்களை மட்டுமே பதிவுசெய்தது.
9 ஓவர்களுக்கு 90 ரன்களை கடந்து விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 200 ரன்கள் டோட்டலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. முதல் விக்கெட்டையே எடுக்கமுடியாமல் சென்னை பவுலர்கள் தடுமாறிவந்தனர்.
அப்போது தான் 10வது ஓவரை வீசிய முஸ்தஃபிசூர் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஷாட் ஆடிய டேவிட் வார்னர் பந்தை தூக்கி அடிக்க, ஸ்லிப் திசையில் 3வது மேன் பொசிசனில் இருந்த மதீஷா பதிரானா காற்றில் பறந்து ஒரு நம்பமுடியாத கேட்ச்சை எடுத்தார். அவருக்கே பந்தை பிடித்துவிட்டோமா இல்லையா என்ற குழப்பம் நீடித்தது, பதிரானாவின் கேட்ச்சை பார்த்த விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி நம்பமுடியாத ஒரு ரியாக்சனை கொடுத்தார்.
பதிரானாவின் இந்த கேட்ச்சை பகிர்ந்துவரும் ரசிகர்கள் "what a catch" என பாராட்டி வருகின்றனர்.
192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்கத்திலேயே 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. 7 ஓவர் முடிவில் 38 ரன்களுடன் விளையாடிவருகிறது.