virat kohli - Mahesh Bhupathi web
T20

RCB-ஐ வேறு ஓனருக்கு விற்கவேண்டும்.. அதுதான் IPL-க்கு நல்லது! BCCI-க்கு டென்னிஸ் ஜாம்பவான் கோரிக்கை!

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை விட்டுகொடுத்த மோசமான அணியாக ஆர்சிபி அணி மாறியபிறகு, அவர்களின் அணி கட்டமைப்பு கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரில் நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ஆர்சிபி அணி, எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை பாதுகாக்க முடியாத அளவிலேயேதான் பந்துவீச்சை வைத்திருக்கிறது. 16 வருட ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்கு இருந்த பெரிய பிரச்னையான பந்துவீச்சு கவலை என்பது, நடப்பு ஐபிஎல் வருடத்தில் உச்சத்திற்கே சென்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 287 ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்சிபி அணி, ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவுசெய்த அணியாக மாறியது. அதேபோல பவர்பிளே என கூறப்படும் முதல் 6 ஓவர்களில் 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கும் ஆர்சிபி அணி, 11 ரன்ரேட்டை வாரிவழங்கும் ஒரு அணியாக இருந்துவருகிறது. அதனாலேயே ஆர்சிபி அணிக்கு எதிராக ஒவ்வொரு அணிகளும் அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து வருகின்றன.

RCB

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற இரண்டு ஜாம்பவான் அணிகளுக்கு பிறகு ஐபிஎல்லில் மூன்றாவது பெரிய அணியாக இருக்கும் RCB, 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நீடிக்கிறது. இதனால் ஆர்சிபி அணியின் கோப்பை கனவானது நடப்பு ஐபிஎல் தொடரிலும் கேள்விக்குரியாக மாறியுள்ளது.

RCB விற்பனையை BCCI அமல்படுத்த வேண்டும்..

SRH அணிக்கு எதிராக 287 ரன்களை ஆர்சிபி அணி விட்டுக்கொடுத்தற்கு பிறகு, ஆர்சிபி அணியின் எதிர்காலம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணிகுறித்து பேசியிருக்கும் 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி, கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லின் நலனிற்காக ஆர்சிபி அணியின் ஐபிஎல் உரிமையை வேறு உரிமையாளருக்கு விற்பனை செய்ய பிசிசிஐ முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Mahesh Bhupathi

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மகேஷ் பூபதி, “விளையாட்டு, ஐபிஎல், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் நலனுக்காக, பிசிசிஐ ஆர்சிபி அணியின் விற்பனையை புதிய உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புதிய உரிமையாளர்கள் பொறுப்பேற்றால் அவர்கள் மற்ற அணிகளின் உரிமையாளர்களை போல, ஆர்சிபி அணியின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள்” என்று எழுதியுள்ளார்.

ஆர்சிபி அணியின் உரிமையாளராக 2008 முதல் 2016 வரை விஜய் மல்லையா பணியாற்றிய பிறகு, தற்போதைய உரிமையாளராக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இருந்துவருகின்றனர்.