கேப்டன் மார்க்ரம், விக்கெட் கீப்பர் க்ளாஸன், ஆல்ரவுண்டர் யான்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியதிலிருந்தே ஐதராபாத் ரசிகர்கள் குஷி மோடுக்குச் சென்றார்கள். மூவரும் சேர்ந்து ஏதோ மூவேந்தர் மோதிரம் அணிந்து, எதிரணி முகத்தில் மார்க் போடப் போகிறார்கள் என ஆருடம் சொன்னார்கள். ஆனால், அது யாருடன் என்றுதான் சொல்லவில்லை. ஒருவேளை, மார்க்ரம் தலைமையிலான அணியிடன் முதல் மார்க் வாங்கப் போவது லக்னோவாக இருக்குமோ என்ற ஆவலுடன் ஐ.பி.எல் பார்க்க அமர்ந்தார்கள் ரசிகர்கள்.
லக்னோவில் நடைபெற்ற, நடப்பு ஐ.பி.எல் தொடரின் பத்தாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும், சன்ரைஸர்ஸ் ஐதரபாத்தும் பலபரீட்சை செய்தன. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கரிசல் மண்ணில் பிட்ச் உருவாக்கி, பேட்டிங் ஆர்டரில் விரிசல் உண்டாக்கும் திட்டத்தோடு இருந்த லக்னோ, மகிழ்ச்சியாக தலையாட்டியது.
மயங்க் அகர்வாலும், அன்மோல்ப்ரீத் சிங்கும் துவக்க வீரர்களாக களமிறங்க, முதல் ஓவரை வீசவந்தார் மேயர்ஸ். அட்டகாசமான ஓவரின் முடிவில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 2வது ஓவர் வீசவந்தார் உனத்கட். ஓவரின் கடைசிப்பந்தை ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு பறக்கவிட்டார் அன்மோல். ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. பவுன்ஸும், வேகமும் குறைவாகவே இருந்த கரிசல் மண் பிட்சில், 3வது ஓவரை வீச குர்ணாலை அழைத்தார் கே.எல். ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அகர்வாலை, ஐந்தாவது பந்தில் பெவிலியனுக்கு அனுப்பினார் குர்ணால். மீண்டும் வந்தார் உனத்கட். அவர் ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. லக்னோ ரசிகர்களுக்கே ஆச்சரியம் தாளவில்லை.
5வது ஓவரை வீசவந்தார் குர்னால். ஓவரின் ஐந்து மற்றும் ஆறாவது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் அன்மோல்ப்ரீத். எரிச்சலடைந்த குர்னால், ஓவரின் இடைவெளியில் பர்னால் தேடினார். யாஷ் தாக்கூர் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில், த்ரிப்பாதி ஒரு பவுண்டரியும், அன்மோல்ப்ரீத் ஒரு பவுண்டரியும் விளாசினார்கள். எதிரணியின் முகத்தில் மார்க் போடுவார்கள் என எதிர்பார்த்த சன்ரைசர்ஸ், பவர்ப்ளேயின் முடிவில் 43/1 என ஒரு மார்கமாக ஆடிக்கொண்டிருந்தது.
7வது ஓவரை வீசிய பிஷ்னோய், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் 8வது ஓவரை வீச வந்தார் குர்னால். ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார் அன்மோல்ப்ரீத். சன்ரைசர்ஸ் ரசிகர்களின் கண்கள் சிவந்தது. `காட்டு விலங்கு எல்லாம் இரண்டு அடி பின்னால வெச்சா புலி வருதுனு அர்த்தம். அந்த புலியே இரண்டு அடி பின்னால வெச்சா மார்க்ரம் வரார்னு அர்த்தம்' என தாடையை புறங்கையால் தடவினார்கள் சன்ரைசர்கள். கடைசியில், முதல் பந்து ஸ்டெம்ப்பை தடவி சாய்த்தது. தங்க முட்டை ஒன்றைப் பெற்றுக்கொண்டு வந்த வழியில் சென்றார் மார்க்ரம்.
ஐதராபாத் ரசிகர்கள் அப்போதும் அடங்கவில்லை. `மேஜிக் வித்தைக்கு ஒரு ஹாரிபாட்டர்னா, பேட்டிங் வித்தைக்கு ஹாரி ப்ரூக்டா' என பன்ச் பேசினார்கள். அடுத்த ஓவரிலேயே அவரையும் டின்ச் செய்து அனுப்பினார் பிஷ்னோய். ஹூடாவை `வாடா' என அழைத்து பத்தாவது ஓவரை வீச சொன்னார் கேப்டன் ராகுல். கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரியை அடித்தார் த்ரிப்பாதி. பத்து ஓவர் முடிவில், 63/4 என மெல்ல அஸ்தனமனமாகத் தொடங்கியது சன்ரைசர்ஸ்.
அடுத்து வாஷிங்டன் சுந்தரும், ராகுல் த்ரிபாதியும் ஜோடி போட்டார்கள். இருவரும் ஆடிய ஆட்டத்தில் இம்முறை மைதானத்தில் பூச்சிகள் தொல்லையே இல்லை. ஆமாம், எல்லாம் உறங்கச் சென்றுவிட்டன. பிஷ்னோய் வீசிய 11வது ஓவரில் 2 ரன்கள். யாஷ் தாக்கூர் வீசிய 12வது ஓவரில் 4 ரன்கள். மிஸ்ரா வீசிய 13வது ஒவரில் 3 ரன்கள். பிஷ்னோய் வீசிய 14வது ஓவரில் 4 ரன்கள் என கடைசியாக ஒரு பவுண்டரி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. வாஷியும் த்ரிப்பாதியும் இன்னும் நான்கு நாள் ஆட்டம் இருக்கிறது என்ற நினைப்பில் ஆடிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக, லக்னோ அணியின் லாலேட்டன் மிஸ்ரா வீசிய 15வது ஓவரில் கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரியை அடித்தார் த்ரிபாதி.
த்ரிபாதி வந்தால் திருப்பம் என நினைத்தார்கள். ஆனால், லக்னோவின் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தைத் திருப்பியதில் எல்லாம் பொய்த்துப்போனது. 16வது ஓவரை வீசிய குர்னால், 1 ரன் மட்டுமே கொடுத்தார். மிஸ்ரா வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் த்ரிபாதி. கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கைத் தந்த அவரும், 18வது ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட்டாகி கிளம்பினார். யாஷ் தாக்கூர், அவுட் சைட் ஆஃப் திசையில் வீசிய அரைக்குழி பந்தை அப்பர்கட் அடிக்கிறேன் என தட்டிவிட, அதை புலிமுருகன் லாலேட்டனைப் போல் டைவ் அடித்து பிடித்தார் மிஸ்ரா. அடுத்ததாக அப்துல் சமாத் உள்ளே வந்தார். முதல் பந்தே பவுண்டரி. அந்த நொடிதான் ரசிகர்களுக்கு மீண்டும் தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது டி20 போட்டி என்பதே நினைவுக்கு வந்தது.
இன்னொரு பக்கம், ஆடும் லெவனில் மூன்று அயலக வீரர்களையே களமிறக்கியிருந்த சன்ரைசர்ஸ், நான்காவது வீரராக இம்பாக்ட் விதியின் மூலம் க்ளாஸனை களமிறக்குவார்கள் என எதிர்பார்த்தார்கள். அதுவும் கடைசி வரை நடக்கவில்லை. மிஸ்ரா வீசிய 19வது ஓவரில், 28 பந்துகள் பிடித்து 16 ரன்கள் மட்டுமே அடித்து எல்லோரையுமே அழ வைத்த வாஷிங்டன் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அடில் ரஷீத், ஒரு பவுண்டரியை அடித்து நம் கண்களை துடைத்துவிட்டார். கடைசியில், அவரும் கடைசிப்பந்தில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். உனத்கட் கடைசி ஓவரை வீசினார். பேட்ஸ்மேன்கள் தடுமாறிக் கொண்டிருந்த இந்த உயிரில்லாத பிட்சிலும், ஒரு ஓவரில் 2 சிக்ஸர்களைத் தூக்கிக் கொடுத்து தான் ஒரு உயர்ந்த உள்ளம் என்பதை நிரூபித்தார். இறுதியில், உனத்கட்டின் உன்னத முயற்சியால் 20 ஓவர்களின் முடிவில், 121/8 என பந்தை விட ஒரு ரன் அதிகம் எடுத்து இன்னிங்ஸை முடித்தது சன்ரைசர்ஸ். இந்த இன்னிங்ஸ் முழுவதுமே சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களைப் பார்த்த, `முழிச்சுக்கோ. சன்ரைசர்ஸ் கொஞ்சமாவது அடிச்சுக்கோ' என கதறியழுதனர் ரசிகர்கள். கொடுமை!
பவுன்ஸும், வேகமும் இல்லாத பிட்ச். அடிக்க வேண்டியது பந்துகளை விட ஒரே ஒரு ரன் அதிகம். `இதுக்குதான் காத்துகினு இருந்தேன்' என வலது தோள்பட்டையை ஒரு சுழற்று சுழற்றி உள்ளே இறங்கினார் கேப்டன் கே.எல்.ஆர். அவருக்கு ஜோடியாக அதிரடி மேயர்ஸும் களமிறங்க, முதல் ஓவரை வீசவந்தார் புவனேஷ்வர் குமார். லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடிய விக்கெட் வேட்டையைப் பார்த்த மைதானத்தின் வாட்ச்மேனும், இம்பாக்ட் வீரராக ஒரு சுழற்பந்து வீச்சாளரைத்தான் உள்ளே கொண்டு வருவார். ஆனால், எய்டன் மாக்ரமோ லெக் ஸ்பின்னர் மயங்க் மார்கண்டேவுக்கு பதிலாக வேகபந்து வீச்சாளர் ஃபரூக்கியை இறக்கினார்.
முதல் ஓவரின் 3வது பந்து, கவர் பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு சிதறடித்தார் ராகுல். அடுத்த பந்து, அகலப்பந்தாகி பவுண்டரியில் சென்று விழுந்தது. 2வது ஓவர் வீசவந்த வாஷிங்டன் சுந்தரை, பவுண்டரியுடன் வரவேற்றார் கே.எல்.ஆர். மேயர்ஸும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை விளாசினார். விக்கெட் கீப்பர் க்ளவஸோடு நின்றுகொண்டிருந்த அன்மோல்ப்ரீத், பந்தை ஒருமுறையாவது பிடித்து விட வேண்டுமென முயற்சி செய்துகொண்டிருந்தார். ஃபரூக்கி வீசிய 3வது ஓவரில், டீப் தர்ட் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார் மேயர்ஸ். அடுத்து, கேப்டன் மார்க்ரமே பந்து வீச வந்தார். எதிரணி கேப்டன் கே.எல், பெடல் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார். 5வது ஓவரை வீசிய ஃபரூக்கி, மேயர்ஸ் எனும் பிரம்மாண்ட விக்கெட்டை கழட்டினார். சன்ரைசர்ஸ் ரசிகர்கள், ஆட்டத்தை தூக்கம் விழித்துப் பார்க்கவேண்டி காபியை கலக்கினார்கள். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசினார் புவி. முதல் பந்து சிக்ஸருக்கு பறந்தது. பாவத்த! எப்படியோ போராடி கடைசிப்பந்தில் அவரது விக்கெட்டையும் கழட்டினார் புவனேஷ். அவரே பந்து வீசி, அவரே கேட்சும் பிடித்தார். அட்டகாசமான கேட்ச்!
7வது ஓவரை வீசவந்தார் அடீல் ரஷீத். 2வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ராகுல். மார்க்ரம் வீசிய 8வது ஓவரில், அதே திசையில் குர்ணால் ஒரு பவுண்டரியை விரட்டினார். ரஷீத் வீசிய 9வது ஓவர் கடைசிப்பந்தில், சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார் குர்னால். யார்க்கர் கிங் நட்டு உள்ளே வந்தார். குர்ணாலுக்கு ஒரு பவுண்டரியை பரிசளித்தார். 10 ஓவர் முடிவில் 82/2 என ஆட்டத்தை கிட்டதட்ட முடித்திருந்தது லக்னோ. `எங்களுக்குதான் லக் நோ' என தேம்பினார்கள் ஐதராபாத் ரசிகர்கள்.
உம்ரான் வீசிய 11வது ஓவரில், மீண்டும் ஒரு அகலபந்தை கோட்டைவிட்டு 2 ரன்களை வாரிக்கொடுத்தார் கீப்பர் அன்மோல். அடுத்த பந்தே, மிட் ஆன் திசையில் பவுண்டரிக்கு செருகினார் குர்னால். நட்டு வீசிய 12வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே. உம்ரான் மாலிக், 13வது ஓவரை வீசவந்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய குர்னால், அடுத்த பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பந்தைப் பிடித்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்தார் அன்மோல். பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய குர்ணாலுக்கு, ஒருநாள் அந்த திருநாளாக நேற்றைய நாள் அமைந்தது.
ஸ்டாய்னிஸ் களத்திற்கு வந்தார். முதல் பந்தே, அகலப்பந்து. மீண்டும் கீப்பரைத் தாண்டி பவுண்டரிக்கு சென்று விழுந்தது. வெறும், 121 ரன்களை அடித்துவிட்டு, எக்ஸ்ராவே 17 ரன்கள் கொடுப்பதெல்லாம் அவனவன் செய்த வினை. அடுத்து, ஸ்டாய்னிஸ் அவரே அடித்து ஒரு பவுண்டரியை எடுத்தார். 42 பந்துகளில் 13 ரன்கள் தேவை எனும் நிலை. ஃபரூக்கி வீசிய பந்தில் ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரியை அடித்தார். 15வது ஓவரை வீசவந்தார் ரஷீத். இன்னும் 8 ரன்கள் தேவை. முதல் பந்தில் ராகுலையும், இரண்டாவது பந்தில் ரொமாரியோ ஷெஃபர்டையும் எல்.பி.டபுள்யு முறையில் அவுட்டாகி அனுப்பிவைத்தார். கண் கெட்ட பிறகு எதற்கு சூர்யா படம் என்பதுபோல, இப்போது விக்கெட் எடுத்து என்ன பிரயோஜனம். ரன் ரேட்டில் ஏதேனும் நன்மைகள் நடக்கலாம். அவ்வளவே! அடுத்து களமிறங்கிய பூரன், 15வது ஓவரில் பவுண்டரி, 16வது ஓவரில் ஒரு சிக்ஸர் என ஆட்டத்தை முடித்துவிட்டு கிளம்பினார். 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது சூப்பர் ஜெயன்ட்ஸ். கடைசி இடத்தில் அஸ்திவாரத்தை பலப்படுத்தியது சன்ரைசர்ஸ். குர்னால் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.