CSK - LSG PTI
T20

CSKvsLSG | லக்னோ - சென்னை அணிகள் மோதும் போட்டி ஒருநாள் முன்னதாக மாற்றம்! காரணம் இதுதான்!

லக்னோ - சென்னை அணிகள் மோதும் போட்டி மே 4-ம் தேதியிலிருந்து மே 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சங்கீதா

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வார நாட்களில் ஒரு போட்டியும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 2 போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில் ஒரு போட்டியில் தோல்வியும் 4 போட்டிகளில் வெற்றியும் பெற்ற ராஜஸ்தான் அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 3 போட்டிகளில் வெற்றி மற்றும் 2 போட்டிகளில் தோல்வி பெற்ற லக்னோ அணி 2-வது இடத்திலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மாநகராட்சித் தேர்தல் மே மாதம் 4-ம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அங்கு திட்டமிடப்பட்டிருந்த லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதும் 46-வது லீக் போட்டி, ஒருநாள் முன்னதாக அதாவது மே 3-ம் தேதி புதன்கிழமை மதியம் 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக மே 4-ம் தேதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு இவ்விரு அணிகள் மோதும் போட்டி, பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

தேதி மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்றும், நேரம் மாற்றப்படவில்லை என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய மாறுதலின்படி, மே மாதம் 3-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு சென்னை - லக்னோ அணிகளுக்கிடையேயான 45-வது லீக் போட்டியும் (லக்னோவில்), இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதும் 46-வது லீக் போட்டியும் (மொஹாலியில்) நடைபெறுவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 4-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான 47-வது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில், லக்னோ அணியை சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றுடன் லக்னோ மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மே 4-ம் தேதி மாநகராட்சித் தேர்தலும், வரும் மே மாதம் 13-ம் தேதி அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.