ராகுல், கோயங்கா pt web
T20

ராகுலுக்கு விருந்தளித்த கோயங்கா; முடிவுக்கு வந்ததா மைதானத்தில் வெடித்த சர்ச்சை! வைரலாகும் புகைப்படம்

ஹைதராபாத் உடனான போட்டியில் தோல்வி அடைந்த பின் லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா அணியின் கேப்டன் ராகுலுடன் நடத்திய வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராகுலுக்கு விருந்தளித்துள்ளார் கோயங்கா.

Angeshwar G

லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 166 ரன்கள் என்ற இலக்கை வெறும் 9.4 ஓவரில் எட்டி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. 16 பந்துகளில் அரைசதம், 19 பந்துகளில் அரைசதம் என துவம்சம் செய்த SRH தொடக்கவீரர்களுக்கு எதிராக, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலின் எந்த திட்டமும் பலனளிக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் எலிமினேட்டர் வரை முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவே ஜொலித்தது. ஆனால் அவர்களின் முக்கிய வீரர்களான மயங்க் யாதவின் காயம், டி-காக்கின் ஃபார்ம் அவுட் காரணமாக சரியான பிளேயிங் லெவனை எடுத்துவர முடியாமல் கடைசி 4 போட்டிகளில் மூன்றில் தோற்று தடுமாறி வருகிறது.

இதனால் போட்டியின் தோல்விக்கு பிறகு கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையான வாக்குவாதம் நடத்திய அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரசிகர்களை முகம்சுளிக்க செய்தார். கோயங்கா கோவமாக எல்லை மீறி பேசினாலும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்ட ராகுல் வாடிய முகத்துடன் திரும்பினார்.

சஞ்சீவ் கோயங்காவின் மோசமான அணுகுமுறையை பார்த்த ரசிகர்கள், கேஎல் ராகுலுக்கு ஆதரவாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ராகுலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

அதேவேளையில் அடுத்த சீசனில் ராகுல் எடுக்கப்படாமல் போகலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் அணியின் பயிற்சியாளர் க்ளூசெனர். அவர் கூறுகையில், “இரு கிரிக்கெட் காதலர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சஞ்சீவ் கோயங்கா நேற்றிரவு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராகுலுக்கு சிறப்பு விருந்தளித்தார். சந்திப்பின்போது சஞ்சீவ் கோயங்கா ராகுலை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதுவரை லக்னோ அணி 6 வெற்றி 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.