2024 ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பான போட்டிகளை விருந்தாக படைத்துவருகிறது. ஐபிஎல் வரலற்றில் 277 ரன்கள் டோட்டல், 16 பந்துகளில் அரைசதம், ரிஷப்பண்ட்டின் கம்பேக் அரைசதம் மற்றும் தோனியின் ஃபினிசிங் ஆட்டம் என இரண்டு சுற்று போட்டிகளிலேயே ஐபிஎல் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 272 ரன்களை குவித்து மிரட்டியுள்ளது கொல்கத்தா அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிலிப் சால்ட் பவுண்டரிகளாக விரட்ட, அவரை ஒருமுனையில் நிறுத்திவிட்டு மறுமுனையில் சிக்சர்களாக பறக்கவிட்ட சுனில் நரைன் டெல்லி பவுலர்களுக்கு பயம்காட்டினார்.
சால்ட் 18 ரன்களில் வெளியேற, களத்தில் இருந்த சுனில் நரைன் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என கிரவுண்டின் அனைத்து பக்கமும் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். அவர் தான் ஒருபுறம் அடிக்கிறார் என்றால், தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கிய ரகுவன்சி என்ற 18 வயது இளம் வீரர் பேட்டிங்கில் மிரட்டிவிட்டார்.
5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு முதல் போட்டியிலேயே அரைசதமடித்த ரகுவன்சி 54 ரன்களில் வெளியேற, 39 பந்துகளில் 7 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என துவம்செய்த சுனில் நரைன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 85 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
13 ஓவர்களுக்கு 170 ரன்களை குவித்து நரைன் மற்றும் ரகுவன்சி வெளியேற, களத்திற்கு வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கில் மிரட்டிவிட்டார். வந்ததிலிருந்தே 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ரஸ்ஸல், டெல்லி கேபிடல்ஸ் அணியை சிதறடித்தார். உடன் ஸ்ரேயாஸ் ஐயரும் 2 சிச்கர்களை பறக்கவிட, 17 ஓவரில் 230 ரன்களை எட்டிய கொல்கத்தா அணி மிகப்பெரிய டோட்டலை நோக்கி நகர்ந்தது.
ஒருபுறம் ரஸ்ஸல் மிரட்ட மறுமுனையில் 8 பந்துகளுக்கு 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என வானவேடிக்கை காட்டிய ரிங்குசிங் மிரட்டிவிட்டார். 19 ஓவர் முடிவில் 264 ரன்களை கொல்கத்தா அணி எட்ட, 277 ரன்கள் சாதனையை உடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் 20வது ஓவரின் முதல்பந்தையே ஒரு அற்புதமான யார்க்கராக வீசிய இஷாந்த் சர்மா ரஸ்ஸலின் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். உடன் கடைசி ஓவரில் வெறும் 8 ரன்களை விட்டுக்கொடுத்த இஷாந்த் சர்மா 277 ரன்கள் சாதனைக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டார். 20 ஓவர் முடிவில் 272 ரன்களை எட்டிய கொல்கத்தா அணி கலக்கிப்போட்டது. 263 ரன்கள் எடுத்த பெங்களூரு அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது கொல்கத்தா அணி. இதனையடுத்து 273 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது.