கொல்கத்தா அணி cricinfo
T20

முதுகெலும்பாக இருக்கும் கம்பீர்.. 3வது கோப்பை நோக்கி செல்லும் KKR! 272 ரன்கள் குவித்து வரலாறு!

டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது கொல்கத்தா அணி.

Rishan Vengai

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்றுகொடுத்த கவுதம் கம்பீர், மீண்டும் KKR அணிக்கு ஆலோசகராக வந்திருப்பது கொல்கத்தா அணிக்கு அசுர பலமாக மாறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான் அணிகளுக்கு இடையே இரண்டுமுறை ஐபிஎல் கோப்பை வென்றதெல்லாம், கவுதம் கம்பீரின் பெயரில் தனிப்பெருமையாக எழுதப்படவேண்டிய ஒன்று.

KKR 2012 IPL Final

சிறந்த கிரிக்கெட் மூளையுடைய கவுதம் கம்பீரின் சிறந்த செயலுக்கு எடுத்துக்காட்டாக சென்னை அணிக்கு எதிரான 2012 ஐபிஎல் இறுதிப்போட்டியை கூறலாம். 191 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய போட்டியில், அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லமை வெளியில் அமரவைத்துவிட்டு இந்திய வீரர் மன்விந்தர் பிஸ்லாவை அணிக்குள் எடுத்துச்சென்றார்.

எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த முடிவு, கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்தது. பிஸ்லா 48 பந்தில் 89 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை கோப்பைக்கு அழைத்துச்செல்வார். அதைத்தொடர்ந்து சுனில் நரைனை தொடக்கவீரராக களமிறக்கிய அவருடைய மூவ், இன்றுவரை கொல்கத்தா அணிக்கு பெரிய பலமாக இருந்துவருகிறது.

bisla

பொதுவாக இந்தியாவின் இளம் வீரர்களுக்கு முதலில் வாய்ப்பு கொடுக்கும் ஒரு கேப்டனாக கவுதம் கம்பீரே திகழ்ந்தார். அவருடைய பட்டரையில்தான் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், முகமது ஷமி, மனிஷ் பாண்டே முதலிய வீரர்கள் பட்டைத்தீட்டப்பட்டனர். அந்தவகையில் நேற்று களமிறக்கப்பட்ட 18 வயது வீரர் ரகுவன்சி முதல் போட்டியிலேயே பிரம்மிக்க வைத்தார்.

suryakumar yadav

நேற்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணியின் வீரர்களுக்கு மறக்கமுடியாத ஒருநாளை கொடுக்க களமிறங்கியது கவுதம் கம்பீரின் KKR அணி.

85 ரன்கள் குவித்த சுனில் நரைன்!

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பினார். ஆரம்பத்தில் பல பந்துகளை அடிக்க முடியாமல் தடுமாறிய சுனில் நரைனுக்கு, அவருடைய பாசிட்டிவ் ஏரியாவில் பந்துவீசிய டெல்லி பவுலர்கள் சிக்கிக்கொண்டனர். முதல் ஹிட்டையே சிக்சராக பறக்கவிட்ட நரைன் அதற்குபிறகு திரும்பி பார்க்கவே இல்லை. 2 முறை கேட்ச் கொடுத்த வாய்ப்புகளை டெல்லி அணி கோட்டைவிட, 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என திரும்பிய பக்கமெல்லாம் சிக்சர் அடித்த சுனில் நரைன் டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கினார். அவர் தான் ஒருபுறமும் அடிக்கிறார் என்றால், தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கிய 18 வயது வீரர் ரகுவன்சி ஐபிஎல் ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.

sunil narine

சுனில் நரைன் 85 ரன்கள் அடித்து மிரட்டிவிட, முழுமையான கிரிக்கெட்டிங் ஷாட்டால் ஆச்சரியப்படுத்திய ரகுவன்சி 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 200 ஸ்டிரைக் ரேட்டில் அரைசதமடித்து அசத்தினார். இரண்டுபேரும் சேர்ந்து 13 ஓவரிலேயே 170 ரன்களை எடுத்துவர, மீதியை கடைசியாக களத்திற்கு வந்த ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் பார்த்துக்கொண்டனர். ஒருகட்டத்தில் 250 ரன்கள்தான் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 8 பந்தில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என ரிங்கு சிங் வானவேடிக்கை காட்ட, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்செய்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 19 ஓவர் முடிவில் கொல்கத்தா அணியை 264 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.

ரஸ்ஸல்

ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 277 ரன்கள் என்ற அதிகபட்ச டோட்டலை கொல்கத்தா அணி முறியடித்து புதிய சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 20வது ஓவரின் முதல் பந்தையே ஒரு அபாரமான யார்க்கராக வீசிய இஷாந்த் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை நிலைகுலைய வைத்தார். ஷார்ப்பான யார்க்கர் பந்தை எதிர்ப்பார்க்காத ரஸ்ஸல், ஸ்டம்ப் தெறிக்க தலைக்குப்புற கீழே விழுந்தார்.

விக்கெட்டை பறிகொடுத்த போதிலும் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த யார்க்கரை வீசிய இஷாந்த் சர்மாவை எழுந்துநின்று கைத்தட்டி பாராட்டினார் ரஸ்ஸல்.

கடைசி ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இஷாந்த் சர்மா, ஒரு மோசமான சாதனையை தடுத்து நிறுத்தினார். முடிவில் 272 ரன்கள் என்ற ஐபிஎல்லின் இரண்டாவது அதிகபட்ச டோட்டலை குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

பழைய ஆட்டத்தை கொண்டு வந்த பந்த்!

273 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் 10 மற்றும் 18 ரன்கள் என்ற சொற்ப்ப ரன்களில் வெளியேறினர். அடுத்தடுத்து வந்த மிட்செல் மார்ஸ் மற்றும் Porel இருவரும் 0 ரன்னில் வெளியேற 33 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி நிலைகுலைந்தது.

பண்ட்

அணியை சரிவிலிருந்து மீட்டுவர போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

வெங்கடேஷ் ஐயர் வீசிய ஓவரில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 28 ரன்களை எடுத்துவந்த ரிஷப் பண்ட், தன்னுடைய பழைய ஆட்டத்தை மீண்டும் எடுத்துவந்து மிரட்டிவிட்டார். அவருடைய புகழ்பெற்ற டிரேட் மார்க் ஷாட்டான நோ-லுக்கிங் ஃபிளிக் ஷாட் ஆடி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

பண்ட்

மிகப்பெரிய விபத்துக்கு பிறகு ஒரு வருடம் கழித்து வந்திருக்கும் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினார். ஆனால் முக்கியமான நேரத்தில் 55 ரன்னில் அவுட்டான பண்ட் சோகமுகத்துடன் வெளியேற, தொடர்ந்து போராடிய ஸ்டப்ஸ் 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என பறக்கவிட்டு அரைசதத்தை எடுத்துவந்தார். எப்படியும் 200 ரன்கள் வரை டெல்லியை எடுத்துச்சென்றுவிடுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், 54 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்டப்ஸ்.

ஸ்டப்ஸ்

அதற்கு பிறகு வந்த யாரும் சோபிக்காத நிலையில், 18வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை பதிவுசெய்தது. ஆட்டநாயகனாக சுனில் நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன்முறையாக சாதித்த KKR!

ஆட்டம் முடிந்தபிறகு போஸ்ட் மேட்ச் நிகழ்வில் பேசிய ரிஷப் பண்ட், மிகப்பெரிய தோல்விக்கு பின் கலங்கிய கண்களுடன் பேசினார். கடினமான ஷாட்கள் விளையாடிய போதெல்லாம் வலியுடன் விளையாடியது போல தோன்றிய ரிஷப் பண்ட்டிடம், உங்களுடைய உடம்பு எப்படியிருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு “கிரிக்கெட் ஃபீல்டில் என்னுடைய ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

gautam gambhir

17 வருட ஐபிஎல் சீசனில் முதன்றையாக தொடக்கத்தில் விளையாடிய 3 போட்டிகளையும் கொல்கத்தா அணி வென்றிருப்பதால், ரசிகர்கள் கவுதம் கம்பீரை பாராட்டி வருகின்றனர். பிரம்மாண்ட வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.