Yash Dayal @kkriders| Insta
T20

மைதானத்தைத் தாண்டியும் கற்றுக்கொடுத்த கிரிக்கெட்! #Motivation

ரிங்கு சிங் சிக்ஸர்களை விளாசி, கொல்கத்தா அணி வெற்றிபெற்ற நொடியில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன!

Rajakannan K

நேற்று முன்தினம் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெர்சஸ் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி... எந்த அணியின் ரசிகர்களையும் வாவ் சொல்லவைத்த ஒரு போட்டி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 204 ரன்கள் எடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த இலக்கைத் துரத்துகிறது. கடைசி ஓவரின் 29 ரன்கள் தேவை. யஷ் தயாள் பந்துவீச, எதிர்கொண்ட உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுக்கிறார்.

KKR Players | Narine | Shardul
இப்போது யஷ் தயாளின் அடுத்த பந்தை எதிர்கொண்ட கிரீஸில் நின்றவர் ரிங்கு சிங். இருபத்தைந்து வயது இளஞ்சிறுத்தை!

அடுத்த ஐந்து பந்துகள், இந்த சீசனில் தன் பெயரை கிரிக்கெட் ரசிகர்களின் உதடுகளிலெல்லாம் உச்சரிக்க வைக்கவிருக்கிறது என்பது குறித்த எந்தத் தடயமுமில்லாமல் எதிர்கொள்கிறார். ஐந்து பந்துகளில் 28 ரன்கள் தேவை என்கிற நிலையில் அவர் ஆடியதுதான் ருத்ரதாண்டவம். ஐந்துமே சிக்ஸர்கள். ஆம்! இந்த ஆட்டம் நமக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடத்தை கொஞ்சம் பார்ப்போம்!

பேட்ஸ்மென் ஹேப்பி அண்ணாச்சி.. பவுலர்?

நான்கு சிக்ஸர்களைத் தொடர்ந்து, ரிங்கு சிங் பறக்கவிட்ட அந்த கடைசிப் பந்தும் சிக்ஸருக்கு பறந்ததுதான் தாமதம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ரானா உள்ளிட்ட அந்த அணியின் வீரர்கள் மைதானத்திற்குள் துள்ளிக் குதித்து ஓடி வந்தனர். கடைசி ஓவரில் முதல் பந்து சிங்கிள் என்றதும், மேட்ச் குஜராத் டைட்டன்ஸ் பக்கம்தான் என்று சூப்பர் சிங்கருக்கும், செய்தி சேனல்களுக்கும் தாவியவர்கள் 'ஐயையோ மிஸ் பண்ணிட்டோமே' என்று சமூக ஊடகங்களில் கதறி, ஹைலைட்ஸைத் தேடிக்கொண்டிருந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி காட்டிய மகிழ்ச்சியில் ரிங்கு சிங்கும் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்.
Rinku Singh

கரைபுரண்டு ஓடும் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கு காரணம், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை பலரும் நினைத்துக்கொண்டிருக்க, சம்மட்டி அடி அடித்ததுபோல், 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டு குஜராத் மண்ணிலேயே தன் வெற்றிக் கொடியை ரிங்கு சிங் நாட்டியதுதான்! இது நிஜமா, இல்லையா என மைதானத்தில் இருந்த கொல்கத்தா அணி ரசிகர்களும் ஒரு முறைக்கு பலமுறை தங்களை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.

கடைசி ஓவரில் 29 ரன்கள் அடித்து வெற்றி பெறுவது என்பதெல்லாம் இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே நடக்காத ஒன்று.

திரும்பத் திரும்ப இந்த கொண்டாட்டக் காட்சிகள் டிவியில் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்தக் கொண்டாட்டத்திற்கு நடுவே மைதானத்தில் இருந்த ஒரு ஜீவன் மட்டும் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டு மிகவும் வேதனையான அந்த நிமிடங்களை ஜீரணிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.

அது வேறு யாருமல்ல, அந்தக் கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள்தான்.
Yash Dayal

'நாம் எப்படி இப்படி மோசமாக செயல்பட்டோம்; எப்படியாவது இது நடக்காமல் இருந்திருக்கக்கூடாதா.. ஐந்தில் ஒரு பந்தை சரியாக வீசியிருந்தால்கூட வெற்றி நம் பக்கம் வந்திருக்குமே, தன்னை நம்பி கடைசி ஓவரை கொடுத்த கேப்டனுக்கு, தன்னை ஏலத்தில் எடுத்த அணி நிர்வாகத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்' என, பலநூறு கேள்விகள் யஷ் தயாளின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

கடந்த ஆண்டுதான் ஐபிஎல் சீசனில் அறிமுகமானார் யஷ் தயாள். அறிமுகமான முதல் சீசனிலேயே அவர் விளையாடிய, குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன். அதோடு நடப்பு சீசனில் அந்த அணி விளையாடியிருந்த கடந்த இரண்டு ஆட்டங்களை பார்த்தவர்களுக்கு, இந்த முறையும் இவர்கள்தான் சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறார்கள் என்ற கணிப்பு இருந்திருக்கும்.

Yash Dayal

அப்படியான ஒரு அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் தயாள், இந்த கடைசி ஓவர், சீசனிலேயே (இதுவரை) மோசமான பவுலிங் எகானமியைக் கொடுக்கும் ஓவராக இருக்குமென்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

ரிங்கு சிங் சிக்ஸர்களை விளாசி, கொல்கத்தா அணி வெற்றிபெற்ற நொடியில் இருந்து இரண்டு விஷயங்கள்... நாம் கற்றுக்கொள்ள ஏதோ உண்டு என்று நமக்குச் சொல்லும்.

"பயப்படாதே.... இது முதல்முறை அல்ல!"

மைதானத்தில் கலங்கி நின்ற யஷ் தயாளை பலரும் தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்தினர். ஆனால் எல்லாரையும் விட, யஷ் குறித்து கவலைப்பட்டது அவரது தந்தை சந்திரபால் தயாள்.

"நான் ஒரு கிரிக்கெட்டர்தான்.. ஆனாலும் ஒரு தந்தை என்பது முற்றிலும் வேறு கோணம். யஷ் ஒரு இன்ட்ரோவெர்ட். அதிகம் பேசாதவன். இந்த நிலையில் எப்படி மனம் கலங்கியிருப்பான் என்று நினைத்து நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்" என்கிறார் சந்திரபால் தயாள்.

Yash Dayal
1980-களில் விஸ்ஸி டிராபிகளில் (Vizzy Trophy) விளையாடி வந்தார் யஷ்ஷின் தந்தை, சந்திரபால். அது ஒரு செமி ஃபைனல் ஆட்டம். அந்தப் போட்டியில் சந்திரபாலின் ஓவரில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருக்கிறது எதிரணி. இதனால் அவரது அணியும் தோற்றுப் போயிருக்கிறது.

தானும் இதே போன்றதொரு சூழலை எதிர்கொண்டது நினைவுக்கு வந்திருக்கிறது. அவருக்குள் இருந்த கிரிக்கெட்டர் விழித்துக்கொள்ள, மைதானத்தில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த யஷ் தயாளின் அத்தை, மாமா, சகோதரி ஆகியோருக்கு ஃபோன் அடித்துள்ளார். “நீங்கள் உடனே யஷ் அருகில் சென்று அவருக்கு ஏதேனும் ஆறுதல் சொல்லுங்கள்; அழுத்தத்தில் இருந்து அவரை வெளிவர ஏதாவது செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார் சந்திரபால்.

அவர்கள் சென்று பேசி, கொஞ்சம் ஆற்றுப்படுத்திய பின், இவரே யஷ் தயாளுடன் பேசியிருக்கிறார். மகனை அவரது பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க ஒவ்வொரு வார்த்தையாக.. நிதானமாக அதே சமயம் அழுத்தமாக சொன்னார்.

“பயப்படத் தேவையில்லை யஷ். கிரிக்கெட்டில் இது ஒன்றும் முதல்முறை அல்ல. பந்துவீச்சை, பேட்ஸ்மென் அடித்து நொறுக்குவது வழக்கம்தான். பெரிய ஸ்டார் பந்துவீச்சாளர்களுக்கே இது நடந்திருக்கிறது. நீ உன்னுடைய கடினமான பயிற்சியை மேற்கொள். உன்னுடைய தவறு எந்த இடத்தில் நடந்தது என்பதை கண்டுபிடி. மலிங்கா, ஸ்டூவர்ட் பிராட் போன்ற பெரிய வீரர்களே இதுபோன்ற ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு,கடந்து வந்திருக்கிறார்கள்”
யஷ்ஷிடம் அவர் அப்பா சந்திரபால் கூறிய வார்த்தைகள்!

கடைசியாக, ‘அடுத்த போட்டி நமது மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. நிச்சயம் நான் அங்கு வருவேன். உன்னுடன் இருப்பேன்’ என்று கூறி முடித்திருக்கிறார் சந்திரபால்.

ஒரு தந்தை என்பதையும் தாண்டி தோல்வியின் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு எது தேவை என்பதைச் செய்தார் சந்திரபால். அவர் செய்தது நம்மைச் சுற்றி தோல்வியின் விரக்தியில் இருப்பவர்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று நமக்கும் ஒரு பாடம்.

சபாஷ் கேகேஆர்!

சக வீரர்கள், தந்தை, உறவினர்கள் என்று பலரும் யஷ்ஷுக்கு ஆறுதல் சொன்னார்கள். அது பெரிய விஷயமே இல்லை. நம் உடனிருப்பவர்களின் தோல்வியின்போது தோள் கொடுப்பது சகஜம்தான் என்று கடந்துவிடலாம். ஆனால் யஷ்ஷுக்கு, எதிரணியான கேகேஆர் அணி நேற்று செய்த ஒரு செயல், அவர்கள் பெற்ற வெற்றியைவிட அதிகம் பேசப்பட வேண்டியதாக ஆகிவிட்டது.

ஆம். போட்டி முடிந்ததும், யஷ்ஷின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்து "நம்பிக்கையாயிரு இளைஞனே. ஒரு மோசமான நாள் என்பது கிரிக்கெட்டில் நிகழ்வதுதானே! நீங்கள் ஒரு சாம்பியன் யஷ்.. நிச்சயம் இதைவிட ஸ்டிராங்காக திரும்ப வருவீர்கள்!" என்று போஸ்ட் செய்திருந்தார்கள். "இந்த மரியாதை என்பது பரஸ்பரமானது. நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் guys" என்று அதற்கு குஜராத் டைட்டன்ஸும் பதில் எழுதியிருந்தார்கள்.

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உரையாடல்கள் உறுதிப்படுத்தியது. மைதானத்தில் ஆட்டம் முடிந்தபின் நடந்த இவற்றின் மூலமும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!