kkr vs rr ipl
T20

'ராமநவமி' காரணமாக KKR vs RR மோதும் IPL போட்டி இடமாற்றம்? ஆலோசனையில் ஈடுபட்டுவரும் பிசிசிஐ! விவரம்!

எதிர்வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது, ராமநவமி கொண்டாட்டத்தால் வேறு தேதி அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது மக்களவைத் தேர்தல் காரணமாக முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் தான் நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வுபூர்வமான காரணத்தால் அதைத்தவிர்த்த பிசிசிஐ, 2024 ஐபிஎல் தொடர் முழுவதையும் இந்தியாவில் நடத்த உறுதியாக இருந்தது.

இருப்பினும் மக்களவைத்தேர்தல் நடைபெறும் தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருந்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம், முதலில் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே அறிவித்தது. பின்னர் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகே, மீதமுள்ள 53 போட்டிகளுக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டது.

KKR vs RR

இப்படி பாதுகாப்பான முறையில் அனைத்தையும் செய்தாலும், தற்போது ஐபிஎல் போட்டியை மாற்றுவதற்கான இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு ஐபிஎல் போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கு பரிசீலனையில் செய்துவருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணமாக ராமநவமி கொண்டாட்டமும், தேர்தல் தேதிகளும் கூறப்படுகின்றன.

KKR vs RR மோதும் ஐபிஎல் போட்டி மாற்றமா?

'Cricbuzz' வெளியிட்டிருக்கும் தகவலின் படி, "ஏப்ரல் 17ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியானது, அன்றைய நாளில் கொண்டாடப்படும் ராமநவமியால் தேதி மாற்றப்படவிருக்கிறது. நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையால் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதாக நிர்வாகத்திடம் கொல்கத்தா காவல்துறை தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் தொடங்கவிருப்பதும் காரணமாக கூறப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

KKR

இந்நிலையில், ஏப்ரல் 17ம் தேதி நடக்கவிருக்கும் KKR vs RR போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்படும், இல்லையேல் வேறு தேதிக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியிருக்கும் ஐபிஎல் அதிகாரி ஒருவர், "காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; விரைவில் முடிவு எடுப்போம்" என்று கூறியதாகவும் Cricbuzz மேற்கோள் காட்டியுள்ளது.

RR

தற்போதைய நிலவரப்படி இரண்டு போட்டிகளில் வென்றிருக்கும் கொல்கத்தா அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி 3வது இடத்திலும் புள்ளிப்பட்டியலில் நீடிக்கின்றன.