KKR Twitter
T20

15 வருடத்திற்கு பிறகு KKR-க்கு 2வது சதம்! மெக்கல்லம்மை தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் செய்த சம்பவம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டாவது சதம் அடித்த வீரரானார் வெங்கடேஷ் ஐயர்.

Rishan Vengai

ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை தொடர்ந்து அதிக கோப்பைகளை வைத்திருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். IPL கோப்பைகளை பொறுத்தவரையில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதற்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 2 முறையும் வென்று, அதிக கோப்பைகளை வென்ற மூன்றாவது அணியாக இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த மூன்று அணிகளில் அடிக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கையானது, ஒப்பீட்டு அளவில் மிக அதிக வித்தியாசத்துடன் இருந்து வருகிறது.

IPL-ல் அதிக சதங்களை அடித்திருக்கும் அணிகள்!

ஐபிஎல் அணிகளை பொறுத்தவரையில் அதிக சதங்கள் அடிக்கப்பட்ட அணிகளின் பட்டியலில், 15 சதங்களுடன் கோப்பையே வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து கோப்பையே வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியும், முதல் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணியும் 13 சதங்களுடனும், டெல்லி கேபிடல்ஸ் 10, சென்னை சூப்பர் கிங்ஸ் 9 மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியானது 4 முறையும் ஐபிஎல் சதங்களை பதிவு செய்துள்ளன.

வெங்கடேஷ் ஐயர்

ஆனால் இந்த பட்டியலில் 2 முறை கோப்பை வென்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஒரே ஒரு முறை மட்டுமே ஐபிஎல்லில் சதத்தை பதிவு செய்திருந்தது. மாறாக அதிகமுறை எதிரணிகளுக்கு சதங்களை விட்டுக்கொடுத்த அணிகளின் பட்டியலில், 11 சதங்களை விட்டுக்கொடுத்து அதிக சதங்களை விட்டுக்கொடுத்த அணியாக முதலிடத்தில் இருந்துவருகிறது.

KKR அணிக்காக 2008-ல் முதல் சதம் விளாசிய ப்ரெண்டன் மெக்கல்லம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட முதல் ஐபிஎல் சதமானது, அந்த அணியின் அதிரடி வீரராக 2008-ல் களமிறங்கிய பிரெண்டன் மெக்கல்லம்மால் அடிக்கப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளாடிய மெக்கல்லம், 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருந்தார்.

Brendon McCullum

மெக்கல்லம் பங்குபெற்ற அந்த போட்டியானது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாகும். அதுமட்டுமல்லாமல் அவர் அடித்த அந்த சதம் தான், ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 வருடம் கழித்து KKR அணியின் 2ஆவது சதமடித்த வெங்கடேஷ் ஐயர்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில், KKR அணிக்காக 3ஆவது வீரராக களமிறங்கிய வெஙக்டேஷ் ஐயர், அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.

வெங்கடேஷ் ஐயர்

மைதானம் முழுக்க சிக்சர்களாக பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை விளாசி 49 பந்துகளுக்கு முதல் சதத்தை பதிவு செய்தார். 2008ஆம் ஆண்டு பிரெண்டன் மெக்கல்லம் அடித்த சதத்திற்கு பிறகு, 15 வருடங்கள் கழித்து KKR அணிக்கான இரண்டாவது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.