KKR Twitter
T20

3வது கோப்பையை எடுத்து வைங்க.. முதல் அணியாக Playoffs சென்றது KKR! நரைன்-வருண் சுழலில் வீழ்ந்த MI!

மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்களில் வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Rishan Vengai

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கவுதம் காம்பீர் காம்பினேசன், மீண்டும் ஒருமுறை அந்த அணிக்கு கோப்பையை வென்றுதரக்கூடிய ஒரு வெற்றி காம்பினேஷனாக அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டுவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் தரமாக விளையாடிவருகிறது.

KKR vs MI

நேற்றைய போட்டியில் வென்றால் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறலாம் என்பதால், சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது கொல்கத்தா அணி. ஆனால் போட்டிக்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் போட்டி நடைபெறுமா என்ற தடை கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டது. நீண்டநேர காத்திருப்பிற்கு பின் மழை நின்று வழிவிட, 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

குழுவாக இயங்கி போராடிய KKR!

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு, சால்ட்டை 6 ரன்னில் வெளியேற்றிய துஷாராவும், சுனில் நரைனை 0 ரன்னில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ராவும் அடிக்கு மேல் அடிகொடுத்தனர். உடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்னில் நடையை கட்ட, 4 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா அணி.

KKR vs MI

என்னதான் விரைவாகவே 3 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்து களத்திற்கு வந்த அனைத்து வீரர்களும் ஒரு அணியாக சேர்ந்து ரன்களை எடுத்துவர போராடினர். 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு கெத்துக்காட்டிய வெங்கடேஷ் ஐயர் தனியாளாக மும்பை பவுலர்களை சிதறடித்தார். உடன் களத்திற்கு வந்த நிதிஸ் ரானா 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாச, 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் கலக்கிப்போட்டார். இறுதியில் கடைசியாக வந்த ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் 3 சிக்சர்களை பறக்கவிட, 16 ஓவர் முடிவில் 157 ரன்கள் என்ற அபாரமான டோட்டலை எட்டியது கொல்கத்தா அணி.

கொல்கத்தா சுழலில் சிக்கிய MI!

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தார். 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன், முதல் 6 ஓவர்களில் 60 ரன்களுக்கு மும்பை அணியை எடுத்துச்சென்று நல்ல தொடக்கம் கொடுத்தார்.

KKR vs MI

ஆனால் அதற்கு பிறகு கொல்கத்தா அணியின் பிரைம் ஸ்பின்னரான சுனில் நரைன் பந்தை கையில் எடுக்க, 40 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இஷான் கிஷன். அதற்கு பிறகு சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் ரன்களை விட்டுக்கொடுக்காமல் டைட்டாக பந்துவீச, 80 ஸ்டிரைக்ரேட்டில் மோசமாக ஆடிய ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் இருவரும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

உடன் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா 2 ரன், டிம் டேவிட் 0 ரன், நேஹல் வதேரா 3 ரன் என அடுத்தடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற கொல்கத்தா அணி சம்பவம் செய்தது.

இறுதிவரை போராடிய திலக் வர்மா..

ஆனால் தனியாளாக களத்திலிருந்த திலக் வர்மா மட்டும் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் என பறக்கவிட்டு கொல்கத்தா அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். உடன் இறுதியாக வந்த நமன் திர்-ம் தன்னுடைய ஹிட்டிங் திறமையை வெளிக்காட்ட இறுதிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் போராடியது மும்பை அணி.

kkr

கடைசி 3 ஓவர்களுக்கு 57 ரன்கள் தேவையென போட்டி மாற, ஹர்சித் ரானா வீசிய ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட திலக்வர்மா 16 ரன்களை எடுத்துவர, அடுத்த ஓவரில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என மிரட்டிவிட்ட நமன் திர் 19 ரன்களை எடுத்துவந்து கலக்கிப்போட்டார். கடைசி 6 பந்துக்கு 22 ரன்கள் தேவையென போட்டி மாற, ஆட்டம் இந்த பக்கமா அந்த பக்கமா என்ற நிலைமைக்கே சென்றது. ஆனால் இறுதிஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதல் அணியாக Playoff சென்றது KKR!

இந்த அபாரமான வெற்றியின் மூலம் 2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

போட்டிக்கு பிறகு கம்பீருடன் மைதானத்தை வலம்வந்த கொல்கத்தா படை, ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தியது. “3வது கோப்பையை எடுத்துவைங்க, இது எங்க காலம்” என மாஸ்ஸாக பிளே ஆஃப்க்குள் காலடி எடுத்துவைத்துள்ளது கொல்கத்தா அணி.