kedar jadhav pt
T20

”தலைவன் எவ்வழியோ..” - தோனி ஸ்டைலில் எளிமையாக ஓய்வு அறிவிப்பு; கேதர் ஜாதவின் திறமை வீணாக போனதா?!

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்.

Rishan Vengai

இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் இல்லாதபோது அதற்கான இடத்தை நிரப்புவதற்கு பெரிய பங்காற்றியவர் கேதார் ஜாதவ், அவருடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன் மற்றும் திறமையான பேட்டிங் பர்ஃபாமென்ஸ் இந்திய அணி தேடிவந்த ஆல்ரவுண்டர்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாகவே கிடைத்தது.

கேதார் ஜாதவ்

இங்கிலாந்து அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 351 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இருந்தபோது விராட் கோலியுடன் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட கேதார் ஜாதவ், 120 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

kedar jadhav - virat kohli

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார் கேதார் ஜாதவ். டி20 அணியில் சிறந்த வீரராக ஜொலிக்க முடியாமல் போனதால், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தலைசிறந்த ஆட்டங்களையே கேதார் ஜாதவ் வழங்கியிருந்தார். இந்திய அணி தொடர்ந்து எந்தவீரர்களை எந்த வடிவத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் கோட்டைவிட்டுவரும் இடத்தில் வழி தவறிப்போனவர்களில் கேதார் ஜாதவும் ஒருவர்.

kedar jadhav

அவர் இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42.09 சராசரியில் 6 அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 1389 ரன்கள் குவித்துள்ளார் மற்றும் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பிப்ரவரி 8, 2020 அன்று அவர் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை இந்தியாவுக்காக விளையாடினார்.

தோனி வழியில் ஓய்வை அறிவித்த கேதார் ஜாதவ்!

இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்ட கேதார் ஜாதவ், பின்னர் தன்னுடைய ஃபார்ம் அவுட்டால் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்டார். ஆனால் உள்நாட்டு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை, ஆர்சிபி அணி 2023 ஐபிஎல் தொடரில் மீண்டும் அணிக்குள் எடுத்துவந்தது. ஆனால் அவரால் எந்த தாக்கத்தையும் வெளிப்படுத்த முடியாமல் போனது.

கேதார் ஜாதவ்

இந்நிலையில் தான் தன்னுடைய ஓய்வை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கும் கேதார் ஜாதவ், “எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பயணத்தில் உங்கள் அனைவரிடமும் இருந்து கிடைத்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி; 1500 மணி முதல் என்னை நீங்கள் ஓய்வு பெற்ற வீரராக கருதலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

தோனியின் வழியை பின்பற்றும் ஒருவராக இருந்த கேதார் ஜாதவ், எப்படி கடந்த 2020-ம் ஆண்டு தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தாரோ, அதேபோல தன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளார். அதாவது, “உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணி முதல் நான் ஓய்வு பெற்றுவிட்டதாக கருத்தில் கொள்ளுங்கள்” என இன்ஸ்டாகிராம் பதிவின் வழியே ஆகஸ்ட் 15, 2020-ல் தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 ஐபிஎல்லில், மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரில் கேதார் ஜாதவ் தேடிக்கொடுத்த வெற்றியானது எப்போதும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்துவருகிறது.