காவ்யா மாறன் x
T20

'KKR கோப்பை வென்றிருக்கலாம்.. ஆனால் நாம்தான்' தோற்ற SRH வீரர்களிடம் நம்பிக்கையாக பேசிய காவ்யா மாறன்!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரில் கோப்பையை தவறவிட்ட போதும், 2023 ஐபிஎல் தொடரிலிருந்து மேம்பட்ட ஒரு அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக முடித்தது. கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாத அந்த அணி, தங்களுடைய பயமேயில்லாத ஆட்டமுறையால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி மிரட்டிவிட்டது.

இதுவரை அசைக்கவே முடியாத அதிகபட்ச ரன்கள் ரெக்கார்டாக இருந்த ஆர்சிபியின் 263 ரன்கள் சாதனையை உடைத்த சன்ரைசர்ஸ் அணி, 287, 277, 266 ரன்கள் என மூன்றுமுறை 260 ரன்களுக்கு மேல் அடித்து வரலாறு படைத்தது.

srh

கொல்கத்தா அணியை வீழ்த்தும் ஒரு அணியாக நிச்சயம் SRH இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது, இறுதிப்போட்டியை ஒரு அரைநாளாக கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் அந்த அணி மறக்கமுடியாத ஒரு பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டுடன் தொடரை முடித்தது.

KKR கோப்பை வென்றாலும் நம்முடைய கிரிக்கெட் தான் பேசப்படுகிறது!

ஐபிஎல் கோப்பையை இழந்தது வருத்தமளித்தாலும் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தன்னுடைய நன்றியை தெரிவித்தார். போட்டியின் போது கண்ணீர் விட்ட அவரை ட்ரோல் செய்த ரசிகர்கள், தற்போது அவரின் சிறந்த அணுகுமுறையையும் பாராட்டி வருகின்றனர்.

காவ்யா மாறன் கண்ணீர்

கோப்பையை இழந்த பிறகு வீரர்களிடம் பேசிய காவ்யா மாறன், “நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இதுவரை இருந்த ஐபிஎல் தொடரின் பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டையே புதுமையாக மாற்றியுள்ளீர்கள், நம்முடைய அதிரடி ஆட்ட அணுகுமுறையைத்தான் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்று ஒருநாள் நமக்கு கூடிவரவில்லை, ஆனால் நீங்கள் தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டீர்கள். மிக்க நன்றி" என்று காவ்யா கூறினார்.

மேலும் பேசிய அவர், "கடந்த ஆண்டு நம்முடைய அணி கடைசி இடத்தைப் பிடித்திருந்தாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் உங்களிடம் இருந்த திறமையால் ரசிகர்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் நம்மை பின்தொடர்ந்தனர். KKR அணி கோப்பையை வென்றிருந்தாலும், அனைவரது பேச்சும் நம்மை பற்றியே இருந்துவருகிறது. அடுத்த தொடரிலும் நம்முடைய அதிரடி ஆட்டத்தை பற்றி பேசுவார்கள் என நம்புகிறேன். இன்று நடந்ததை மறந்துவிடுங்கள், மீண்டும் இதுபோலான ஒருநாளை நாம் பெறவேண்டிய நிலைவராது என நம்புகிறேன்” என்று காவ்யா மேலும் கூறினார்.