usa vs pak web
T20

“இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம்” - முன்னாள் PAK வீரர் வேதனை!

2024 டி20 உலகக்கோப்பையின் முதல் அதிர்ச்சி சம்பவமாக கத்துக்குட்டியான அமெரிக்கா அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

Rishan Vengai

டி20 உலகக்கோப்பையில் இதுவரை பல கத்துக்குட்டி அணிகள், கிரிக்கெட் பாரம்பரியமிக்க பெரிய நாடுகளை வீழ்த்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளன. அந்தப்பட்டியலில் நெதர்லாந்து, நமீபியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் முதலிய அணிகள் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்தி காட்டியுள்ளன.

அந்தவகையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் பெரிய அதிர்ச்சி சம்பவமாக, உலகக்கோப்பைகளை வென்று குவித்த ஒரு பாரம்பரியமிக்க கிரிக்கெட் நாடான பாகிஸ்தானை முதல்முறையாக எதிர்கொண்ட அமெரிக்கா அணி, அதனை வீழ்த்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

shaheen afridi

இதில் கொடுமை என்னவென்றால், ஷாஹீன் அப்ரிடி, அமீர், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா முதலிய 4 உலகத்தர பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருந்தது மட்டுமில்லாமல், சூப்பர் ஓவர் வரை சென்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான் அணி.

சூப்பர் ஓவரில் வீழ்ந்த பாகிஸ்தான்..

2024 டி20 உலகக்கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட அமெரிக்கா அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது மட்டுமில்லாமல் ஒரு மிரட்டலான பவுலிங்கால் பாகிஸ்தானை 159 ரன்களில் கட்டுப்படுத்தியது.

babar azam

160 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா அணியில், அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கத்தில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய அமெரிக்க அணியை, கடைசி 5 ஓவரில் இழுத்துப்பிடித்த பாகிஸ்தான் அணி அபாரமான பவுலிங்கை வெளிப்படுத்தியது. கடைசி 6 பந்துக்கு 15 ரன்கள் தேவையென போட்டி மாற, இறுதிஓவரில் 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்ட அமெரிக்க வீரர்கள் 14 ரன்கள் அடித்து போட்டியை சமனிற்கு எடுத்துச்சென்றனர்.

USA Beat Pakistan

எப்படியும் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான்தான் வெல்லப்போகிறது என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது, சூப்பர் ஓவரை வீசிய அனுபவம் வாய்ந்த அமீர் அழுத்தத்தில் அதிகப்படியான ஒய்டு பந்துகளை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய அமெரிக்கா அணி மிகப்பெரிய அப்செட்டை நிகழ்த்தியது.

இது எங்களுக்கு மிகப்பெரிய அவமானம்..

பாகிஸ்தான் அணியின் மிகமோசமான செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்த முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், பாகிஸ்தானின் இந்த தோல்வி எங்கள் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தோல்வி குறித்து பேசிய கம்ரான் அக்மல், “சூப்பர் ஓவர் வரை சென்று இப்படி மோசமான முறையில் ஆட்டத்தை இழந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானமாகும். இதைவிட பெரிய அவமானம் எப்போதும் இருக்க முடியாது. அமெரிக்கா சிறப்பாக விளையாடியது. அவர்கள் தரவரிசையில் குறைந்த அணியாக ஒருபோதும் செயல்படவில்லை. பாகிஸ்தானை விட பெரிய அணிபோலவே உணரவைத்தனர்.

babar azam

அவர்கள் எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியதால் அவர்களே வெற்றி பெற தகுதியானவர்கள். எங்கள் கிரிக்கெட்டின் உண்மை முகம் தெளிவாக வெளிப்பட்டது. பாகிஸ்தான் தங்களின் கிரிக்கெட்டை எந்தளவு மோசமாக முன்னோக்கி கொண்டு செல்கிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது” என்று வேதனை தெரிவித்தார்.

அணித்தேர்வை குற்றஞ்சாட்டிய கம்ரான் அக்மல்!

மேலும் அணியில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை குற்றஞ்சாட்டிய அவர், “இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக தோற்றால் பரவாயில்லை அல்லது அமெரிக்காவோடு கூட இறுதிவரை நன்றாக போராடி தோற்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்படியான முறையில் தோற்றது வெட்கமாக இருக்கிறது. இதில் மோசமானது என்னவென்றால், முதலில் ஆட்டத்தை டிரா செய்துவிட்டு சூப்பர் ஓவரில் தோற்றதுதான். இந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது.

pak

வீரர்கள் விருப்பு வெறுப்பின் படி தேர்ந்தெடுக்கப்படுவதுதான் இப்படியான தோல்விற்கு காரணம். கரீபியன் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர் அணியில் இடம்பெறவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை" என தன்னுடைய யூ-டியூப் சேனலில் குற்றஞ்சாட்டினார்.