2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனும் தோற்றதால் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது. பந்துவீச்சில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினாலும், பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டுவருகின்றன.
பல முன்னாள் வீரர்கள் பாபர் அசாமிற்கு விருப்பமான வீரர்களும், சமீபமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை எல்லாம் அணிக்குள் எடுத்ததால்தான் பாகிஸ்தான் தோற்றதாகவும், பல திறமையான வீரர்கள் வெளியில் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இதற்கிடையில் முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல், டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை விட தன்னுடைய சகோதரர் உமர் அக்மல் சிறந்த நம்பர்களை வைத்திருந்ததாகவும், ஆனால் விராட் கோலி அளவு அவருடைய பெயர் வெளியில் தெரியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் விராட் கோலியின் நம்பர்கள் மற்றும் சராசரியை விட, பாகிஸ்தானின் உமர் அக்மல் சிறந்த ஸ்டேட்ஸை வைத்திருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியில் ஃபேவரிசம் நடக்கிறது என்று பேசிய அவர், தன்னுடைய சகோதரர் சிறப்பாக செயல்பட்ட போதும் அணியில் இல்லாமல் போய்விட்டார் என்ற வேதனையை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனது சகோதரரான உமர் அக்மல் குறித்து நான் சில கருத்துகளை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன். டி20 உலகக்கோப்பை தொடர்களில் விராட் கோலியை விட புள்ளி விவரங்களில் உமர் அக்மல் தான் சிறந்து விளங்குகிறார். கோலியின் அளவிற்கு சிறந்து விளங்கவில்லை என்றாலும், அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தனிநபர் அதிகபட்சம் ஆகியவற்றில் உமர் அக்மல் சிறந்த ஸ்டேட்ஸை வைத்துள்ளார்” என்று கம்ரான் கூறினார்.
டி20 உலகக்கோப்பையில் கோலியுடன் ஒப்பிடும்போது உண்மையில் உமர் அக்மல் சிறந்த ஸ்டேட்ஸையே வைத்துள்ளார். 132 ஸ்டிரைக்ரேட்டுடன், 2014-ல் 94 ரன்கள் மற்றும் 2016-ல் 89* ரன்களை உமர் அக்மல் பதிவுசெய்துள்ளார்.
இருப்பினும் கம்ரான் அக்மலின் கருத்திற்கு எதிராக விமர்சித்துவரும் இந்திய ரசிகர்கள், அப்படி பார்த்தால் “வசிம் அக்ரமை விட சிராஜ் சிறந்தவர்” என்றும், “5 வருடமா அணியிலேயே இல்லாத ஒருவரை எப்படி கோலியுடன் ஒப்பிடுவீர்கள்” என்றும் கேலி செய்துவருகின்றனர்.