ஜோஸ் பட்லர் web
T20

”உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை..” - செய்தியாளரிடம் ஆவேசமாக பேசிய பட்லர்! என்ன நடந்தது?

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமாக செயல்பட்டதை ஒப்பிட்டு கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோவமாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தன் அமைதியை இழந்தார்.

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மிகமோசமான ரன்களை கொண்டிருந்த இங்கிலாந்து அணி, விளையாடிய 9 போட்டிகளில் 6 போட்டிகளில் படுதோல்வியடைந்து மூன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றது.

புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை மட்டுமே பிடித்த இங்கிலாந்து அணி, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து முதலிய பலமில்லாத அணிகளுக்கு இடையே மட்டுமே வெற்றியை பதிவுசெய்தது. நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய அணிகளுக்கு எதிராக படுதோல்விகளை சந்தித்தது.

england

என்னதான் 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பைகளை வென்றிருந்தாலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு இங்கிலாந்து கேப்டனிடம் கோவமாக வெளிப்பட்டது.

உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை..

2024 டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்த்து விளையாடவிருக்கிறது, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி. ஜோஸ் பட்லர், வில் ஜாக்ஸ், பிலிப் சால்ட் முதலிய வீரர்களின் அதிரடியான ஃபார்ம், ஜோஃப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்பியது என பல பாசிட்டாவான விசயங்கள் இங்கிலாந்து அணிக்கு திரும்பிய நிலையில், போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜோஸ் பட்லர்.

Jos Buttler

அணியின் பலம்-பலவீனங்களை பேசவந்த ஜோஸ் பட்லருக்கு, செய்தியாளரின் ஒரு கேள்வி கோவத்தை ஏற்படுத்தியது. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியாவிற்கு செல்வதற்கு முன்னதாக, இங்கிலாந்தின் முக்கிய நோக்கம் பட்டத்தைக் காப்பது அல்ல என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அவரின் அப்போதைய அழுத்தத்தை வெளிப்படுத்திய அந்த வார்த்தைகள், உண்மையிலேயே களத்தில் நடந்தேறின.

England Poor Run in 2023 World Cup

இந்நிலையில் கடந்த உலகக்கோப்பையை போன்றே ”பட்டத்தை தற்காத்து கொள்ளப்போவதில்லை” என்ற மனநிலையில் இருக்கிறீர்களா என செய்தியாளர் கேட்க, கொதித்து எழுந்த பட்லர், “உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று காட்டமாக பதில் கூறினார்.

செய்தியாளரின் கேள்விக்கு பதில் பேசிய அவர், “நாங்கள் எதையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. நான் இதை பலமுறை கூறிவிட்டேன், எங்களை தற்காப்பு சாம்பியன்களாக ஒருபோதும் பார்க்கவில்லை. இந்த தொடரில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம், அதை எதிர்ப்பார்த்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மாறாக நாங்கள் எப்படிப்பட்ட அணியாக இருக்கிறோம்? நாங்கள் ஒரு குழுவாக என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதையெல்லாம் இங்கே உட்கார்ந்து உங்களிடம் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று சண்டைக்கு செல்வது போல காட்டமாக பேசினார்.

buttler

செய்தியாளர் எழுப்பிய கோப்பையை வெல்வீர்களா என்ற கேள்விக்கு பதில் பேசிய அவர், “விளையாட்டு விளையாடுவதற்கு முன்பே நாங்கள் அதில் வெல்வோமா அல்லது தோற்போமே என்ற வார்த்தை விளையாட்டுகளை விளையாடாமல் இருக்க முயற்சிக்கிறோம். போட்டிக்கு முன்கூட்டியான யோசனைகளைக் கொண்டிருக்காமல் இருப்பதும், ஆடுகளம் ஒரு குறிப்பிட்ட வழியில் தான் விளையாடும் என்று கருதாமல் இருப்பதும் மிகவும் முக்கியம்” என்று பட்லர் முடித்தார்.