jayawardene - rohit sharma web
T20

இனி ரோகித்-ஹர்திக் பிரச்னை இருக்காது.. முடிவுக்குவரும் MI சர்ச்சைகள்! மீண்டும் ஜெயவர்தனே HEAD COACH!

Rishan Vengai

ஐபிஎல் தொடரின் கடப்பாரை அணி என வர்ணிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி “ 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020” என ஐந்துமுறை ஐபிஎல் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையையும் மும்பை இந்தியன்ஸ் அணி பதிவுசெய்தது.

இந்த 5 ஐபிஎல் கோப்பைகளில் 2017, 2019 மற்றும் 2020 ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் மஹேலா ஜெயவர்த்தனே.

jayawardene

இவர் 2020-க்கு பின் மற்ற லீக்குகளில் விளையாடும் அனைத்து மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் பல்வேறு லீக்குகளில் MI-ன் உலகளாவிய அணிகளின் ”MI (WPL), MI NY (MLC) மற்றும் MIE (ILT20)” விரிவாக்கத்தை மேற்பார்வையிட்டார், பயிற்சியாளர்களுடன் பணியாற்றினார்.

ஜெயவர்தனே

இதற்கிடையில் தாய் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டார்.

மார்க் பவுச்சர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி..

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற மார்க் பவுச்சர், குடும்பமாக இருக்கும் அணி குறித்து கவலை இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை நோக்கி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்.

அதாவது ஐந்து கோப்பைகளை வென்றபிறகு ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் ஆதரவு இனி மும்பை அணிக்கு தேவையில்லை, அவருடைய மாற்று கேப்டனாக மும்பை அணி வேறொருவருக்கு செல்லவேண்டிய காலம் வந்துவிட்டது என்ற முடிவை தன்னிச்சையாக எடுத்ததுதான் மிகப்பெரிய அடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விழுந்தது.

மார்க் பவுச்சர்

ரோகித் சர்மாவுடன் கலந்து ஆலோசிக்காமல் அவரிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மும்பை அணியின் இந்த முடிவை ரோகித் சர்மாவே எதிர்ப்பார்க்கவில்லை என்ற விபரம் அவரின் மனைவியின் எதிர்ப்புகள் மூலம் தெரியவந்தது.

மார்க் பவுச்சர் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய வீடியோவில் ரோகித் சர்மாவின் மனைவி கருத்திட்டிருந்தார். அந்த வீடியோ பின்பு நீக்கப்பட்டது, இந்த நிகழ்வுக்கு பிறகு எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பவர் என் மனைவி தான் என ரோகித் சர்மா இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா

தொடர்ந்து இந்த கேப்டன்சி மாற்றம் விவகாரமானது ஹர்திக் பாண்டியாவை மைதானத்திலேயே ரசிகர்கள் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்றது.

இந்நிலையில் மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே..

2025 ஐபிஎல் தொடரானது மிகப்பெரிய ஏலத்தை நோக்கி காத்திருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சரியான நேரத்தில் மிகப்பெரிய முடிவை கொண்டுவந்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதியதலைமை பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனேவை வரவேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்க் பவுச்சரின் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் எம்ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியிருக்கும் ஜெயவர்தனே, “எம்ஐ குடும்பத்திற்குள் எனது பயணம் எப்போதும் பரிணாம வளர்ச்சியின் போது இருந்துள்ளது. 2017ஆம் ஆண்டில், சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்கு திறமையான தனிநபர்களின் குழுவை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தினோம், அதன்படி நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம்.

தற்போது வரலாற்றில் அதேபோலான ஒரு தருணத்தில், எதிர்காலத்தை எதிர்நோக்கி, எம்ஐயின் அன்பை மேலும் வலுப்படுத்தவும், உரிமையாளர்களின் பார்வையை மேலும் வலுப்படுத்தவும், மும்பை இந்தியன்ஸின் வரலாற்றை தொடர்ந்து உயர்த்துவதற்கான வாய்ப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அற்புதமான சவாலை நான் எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

2025 மெகா ஏலத்திற்கு முன்பு ஜெயவர்தனே ஹெட் கோச்சாக பொறுப்பேற்றிருப்பது, ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்வார் என்ற சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றிப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.