ஜெய் ஷா ட்விட்டர்
T20

"India Head Coachக்கு ஆஸ்திரேலிய வீரர்களா? புரளி கூறும் ஊடகங்கள்"- விளக்கமளித்த ஜெய் ஷா!

“தாமோ, பிசிசிஐயோ எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரிடமும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிங்கள் அனுப்பக்கோரி அணுகவில்லை” என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Prakash J

ஐபிஎல்லின் அடுத்த கோப்பையை வெல்லப்போவது யார் என ஒருபுறம் பேச்சுகள் இருந்தாலும், மறுபுறம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வரப் போகிறவர் யார் என்ற பேச்சுகளே உலா வருகின்றன. தற்போது அந்தப் பதவியில் இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.

பிசிசிஐ

இதையடுத்து அந்தப் பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அந்தப் பதவிக்கு நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், கெளதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: RR Vs SRH| IPL Finalக்குச் செல்வது யார்? கை ஓங்கியிருக்கும் RR.. கைப்பற்றத் துடிக்கும் SRH!

இதற்கிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை நிராகரித்ததாக, ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஜஸ்டின் லாங்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தது இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “தாமோ, பிசிசிஐயோ எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரிடமும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிங்கள் அனுப்பக்கோரி அணுகவில்லை. சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”சிறந்த வீரராக இருக்கலாம்; ஆனால்” - சாடிய தோனி.. நீக்கப்பட்ட அந்த வீரர்.. தேடிய CSK ரசிகர்கள்!

இதுகுறித்து அவர், ”இந்திய அணிக்குச் சரியான பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஒரு செயல்முறையை கடைபிடித்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டின் அமைப்பு குறித்து முழு அறிவு இருக்கும் நபர்களைத்தான் நாங்கள் தேடி வருகிறோம். நமது உள்நாட்டு கிரிக்கெட் எப்படி இருக்கின்றது என்ற அதீத புரிதல் இருந்தால் மட்டுமே இந்திய அணியை வேறொரு உயரத்திற்குக் கொண்டுசெல்ல முடியும்.

சர்வதேச கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிகவும் பெருமைமிக்க பதவியாகும். ஏனென்றால் உலக கிரிக்கெட்டிலே அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக இந்தியாதான் இருக்கிறது. நமது கிரிக்கெட் வரலாறும் மிகவும் பாரம்பரியமிக்கவை. எனவே, இந்த பதவிக்கு வரும் நபர்கள் சரியான நபராக இருக்க வேண்டும். இதற்கான பணியை பிசிசிஐ செய்து வருகின்றது. நாங்கள் சரியான நபரைத்தான் தேர்வுசெய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

jay shah

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் தேதி மே 27. மேலும், இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைப் பயிற்சியாளர் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை பணியாற்றலாம் எனவும், டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே இருக்கு; இதெல்லாம் நடக்கும்” - இந்திய ஜோதிடர் கணிப்பு!