ஜெய்ஸ்வால் - கில் cricinfo
T20

93 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால்.. மிரண்ட ஜிம்பாப்வே! டி20 தொடரை வென்றது இந்தியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

Rishan Vengai

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற உலக சாம்பியன் அணியாக சென்ற இந்திய அணிக்கு, முதல் போட்டியில் 115 ரன்களை டிஃபண்ட் செய்து யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு வரலாற்று தோல்வியை வழங்கியது ஜிம்பாப்வே அணி.

முதல் போட்டிக்கு பிறகு கம்பேக் கொடுத்த இந்திய அணி அடுத்த 3 போட்டிகளையும் வரிசையாக வென்று 3-1 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

153 ரன்கள் அடித்த ஜிம்பாப்வே!

5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றதால் 4-வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களம்கண்டது ஜிம்பாப்வே அணி. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 63 ரன்னுக்கு தான் இந்திய அணியால் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடிந்தது.

சிக்கந்தர் ராஷா

எப்படியும் 170 ரன்களை நோக்கி ஜிம்பாப்வே செல்லும் என எதிர்ப்பார்த்தபோது தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக களத்திற்கு வந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஷா 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 153 ரன்களை எட்டியது ஜிம்பாப்வே அணி.

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் அடித்து அசத்த 15.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ஆட்டநாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.