Varun Chakaravarthy  Shailendra Bhojak
T20

வருண் சக்ரவர்த்தி ஏன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை? காரணம் சொன்ன அபிஷேக் நாயர்

Viyan

தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டு ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கு இந்திய அணியில் கடந்த 3 ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி பலரும் பல கட்டங்களில் பேசியிருந்த நிலையில், அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தற்போது கூறியிருக்கிறார்.

வருண் சக்ரவர்த்தி - தமிழகத்தைச் சேர்ந்த இந்த நட்சத்திர ஸ்பின்னர் கடைசியாக 2021ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 2021 உலகக் கோப்பையில் விளையாடிய அவர், அதன்பிறகு இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படவே இல்லை. அந்தத் தொடரில் 3 போட்டிகளில் ஆடிய அவர் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. சிக்கனமாகப் பந்துவீசியிருந்தாலும் (எகானமி: 6.45) 11 ஓவர்களில் அவரால் விக்கெட் வீழ்த்தவே முடியவில்லை. அது அப்போது விமர்சிக்கப்பட, அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் வருண் சக்ரவர்த்தி தொடர்ந்து தன் திறமையை நிரூபித்துக்கொண்டே இருந்தார். 2022 ஐபிஎல் தொடர் அவருக்கு அவ்வளவு சிறப்பாகச் செல்லவில்லை. ஆனால் அடுத்த இரு சீசன்களிலுமே அசத்தினார். 2023 சீசனில் 20 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர், 2024ல் 21 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தாலும், அதன்பிறகு எழுச்சி பெற்ற அவர் விக்கெட்டுகளை அள்ளினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசன் சாம்பியன் ஆவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தார் வருண். இருந்தாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் உடனே இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுவிடுகிறார்கள். ஆனால் வருண் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த உலகக் கோப்பைக்கான அணி அறிவிப்பதற்கு முன்பு கூட யாரும் அவ்வளவாக வருண் சக்ரவர்த்தியின் பெயரை பரிந்துரைக்கவில்லை. ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூட பேசப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கிய பின் வருண் அனைவரின் கவனத்தையும் பெற்றார். சொல்லப்போனால், பலரும் சீசனுக்கான தங்களின் சிறந்த அணியில் வருணின் பெயரை சேர்த்திருந்தனர். அப்படி இருக்கும்போது அவருக்கு ஏன் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமலேயே இருக்கிறது?

சமீபத்தில் ஒரு பேட்டியில் இதற்கான பதிலைக் கொடுத்திருக்கிறார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்திருக்கிறார். "வருண் சக்ரவர்த்தி ஒவ்வொரு வருடமும் நன்றாக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் அவரிடம் ஒருமுறை பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கை மேம்படுத்துமாறு கூறியது ஞாபகம் இருக்கிறது. அப்போது தான் அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதை நோக்கித்தான் வருணும் பயிற்சி செய்தார். விஜய் ஹசாரே டிராபியில் தான் ரன் அடித்த வீடியோக்களை எனக்கு அனுப்பினார். 2 சிக்ஸர்களோ, 40 ரன்களோ அடித்தேன் என்று சொல்லியிருந்தார். அதுதான் தேவை என்று அறிந்திருந்ததால் வருண் முழுமையாக தன்னை அதில் ஈடுபடுத்திக்கொண்டார். அவருடைய ஃபீல்டிங்கிலும் அவர் நன்கு முன்னேறியிருக்கிறார். ஏனெனில், இப்போதெல்லாம் மூன்று துறைகளிலும் நன்றாக செயல்படவேண்டும் என்பதை வீரர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்" என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் அபிஷேக் நாயர்.


டி20 போட்டிகளில் வருணின் ஸ்டிரைக் ரேட் 50 கூட இல்லை. அவருக்கு அதிகமாக பேட்டிங் வாய்ப்புமே கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில், தேர்வாளர்களை அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் நன்றாக பெர்ஃபார்ம் செய்யவேண்டும் என்று கூறியிருப்பதால் அடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

வருண் சக்ரவர்த்தியின் முன்னேற்றத்தில் அபிஷேக் நாயரின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அவரைக் கவனித்த அபிஷேக் ஐபிஎல் தொடரில் அவர் தேர்வாகக் காரணமாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் நைட் ரைடர்ஸ் அணியில் அவரோடு இணைந்து அவர் முன்னேற்றத்துக்குப் பங்களித்தார். இந்த ஐபிஎல் ஃபைனலை வென்ற பிறகு வருண், "இந்த வெற்றிக்கு பயிற்சியாளர்களை, கேப்டனை, யாரை வேண்டுமானாலும் காரணமாகக் காட்டலாம். ஆனால், இந்த அணியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஜொலிப்பதற்கு அபிஷேக் நாயர் தான் காரணம்" என்று கூறினார்.