ஒவ்வொருமுறை தோனி மற்றும் விராட் காம்போ இணைந்து களம் காணும்போதும், ‘அழிவின் சகோதரர்கள்’ ‘மஹிராட்’ (MAHI-viRAT), ‘ரன்மெஷின் VS பினிசர்’ (கோலி மற்றும் தோனி) என்றெல்லாம் கூறி சிலாகிப்பது ரசிகர்களின் வழக்கம்! அப்படித்தான் இன்றும் சிலாகித்தார்கள். ஆனால்... ஒரு ட்விஸ்ட் வைத்து! என்ன ட்விஸ்ட் தெரியுமா அது? தோனி - விராட் காம்போவின் கடைசி போட்டி இன்றுதான் என்கிறார்கள். இது உண்மையா? பார்ப்போம்!
தோனி - கோலி காம்போ குறித்து, ரசிகர்கள் சிலாகிக்கின்றனர் என்பதை தாண்டி, உண்மையிலேயே இந்த காம்போ ரொம்ப ஸ்பெஷல்தான்! ஏனெனில், கோலி மீது தோனியும், தோனி மீது கோலியும் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவென்பது அந்தளவுக்கு பெரியது. இருவருமே, ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துள்ள விதமும் அவ்வளவு அழகாகவும் ஆழமானதாகவும் இருக்கும். இதை நிரூபிக்கும்விதமாக பல மைதானங்களில், பல மேடைகளில் கோலி மற்றும் தோனி தங்கள் இணக்கத்தை வெளிப்படையாகவே காட்டியுள்ளனர்.
உதாரணத்துக்கு மைதானத்திலேயே தோனியின் வெறித்தனமான ரசிகராக கோலி மாறிய பல தருணங்களை சொல்லலாம்; அதேபோல விராட் கோலியின் பேட்டிங்கிற்கு தோனியும் பெரிய ரசிகர் என்பதையும் மறுக்கமுடியாது. அதற்கும் பல சம்பவங்கள் சாட்சியாக இருந்துள்ளன.
இப்படியான இந்த அதிரடி காம்போவை, ஒன்றாக களத்தில் பார்க்கப்போவது இன்றுதான் கடைசி என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோலி மற்றும் தோனி இருவரையும் ஒன்றாக களத்தில் பார்ப்பதற்கு, ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக தோனி எப்படி ஆர்சிபி அணிக்கு எதிராக திட்டம் தீட்டப்போகிறார் என்பதையும், அந்த திட்டத்தை உடைத்து விராட் கோலி எப்படி பேட்டிங் செய்யப்போகிறார் என்பதையும் பார்க்க பெரும் கூட்டமே காத்திருக்கிறது.
இதுவரை இரண்டு அணிகளும் மோதியுள்ள 30 போட்டிகளில் சிஎஸ்கே 19 போட்டிகளிலும், ஆர்சிபி 10 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், சென்னை அணிக்கு எதிராக விராட் கோலி 979 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதனாலேயே கோலி-தோனி ரசிகர்களுக்கு இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
சரி, விஷயத்துக்கு வருவோம். தோனி மற்றும் கோலி இருவரையும் களத்தில் ஒன்றாக பார்ப்பது இதுவே கடைசியான போட்டியாக அமையுமா என்றால்... வாய்ப்பிருக்கிறது என்பதே பதில்!
ஏனென்றால் இன்னும் 3 மாதங்களில் தோனி 42 வயதை எட்டவுள்ளார். என்னதான் தோனி ஃபிட்டாக தெரிந்தாலும் கடந்த போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட பிரச்சனையால், நடப்பதற்கே அவதிப்பட்டார். வயது மூப்பினால், இதுவே தோனிக்கு கடைசி ஐபிஎல்லாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஒருவேளை இந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளில், ஏதேனுமொரு ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை என்றால் தோனி மற்றும் கோலி களத்தில் சந்திப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும்.
“ஏபிடி வில்லியர்ஸ் போன்று வித்தியாசமான ஷாட்களை எல்லாம் விராட் கோலி ஆடுவதில்லை. ஆனால் அவரால் எப்படி அதிகப்படியான ரன்களை களத்தில் அடிக்க முடிகிறது என்பது, எனக்கு எப்போதும் ஆச்சரியான ஒன்றாகவே இருக்கும்”தோனி
“என்னை விட அவர் சிறந்த இந்திய கேப்டனாக இருப்பார். என் தலைமையில் வெற்றிபெற்றதை விட, கோலி தலைமையில் அதிகப்போட்டிகளில் இந்தியா வெற்றிபெறும்”
“எப்போதும் என் கேப்டன் எம் எஸ் தோனி தான். அவருக்கும் எனக்குமான பாண்டிங் என்பது எப்போதும் சிறப்பான ஒன்றாக இருக்கும். களத்தில் நாங்கள் ஒன்றாக விளையாடும் போது, அவர் 2 ரன்கள் என்றால், நான் கண்ணை மூடிக்கொண்டு முழுமையாக ஓட ஆரம்பித்து விடுவேன். அவருடைய முடிவு எப்போதும் தவறாக மாறவே மாறாது என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது.
என் கடினமான நேரங்களில், என் குடும்பத்தை தவிர்த்து என்னிடம் பேசியது எம்எஸ் தோனி ஒருவர் மட்டும் தான். ‘நீங்கள் நன்றாக தான் இருப்பீர்கள் என நம்பும் போது, எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மக்கள் மறந்துவிடுகிறார்கள்’ என தோனி கூறியது என் வாழ்க்கையில் நான் மீண்டுவர பெரிதும் உதவியது”
இப்படியான இந்த காம்போ, இன்றுதான் கடைசியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதால் இருவரின் ரசிகர்களுக்குமே இன்று செம எமோஷனலாக இருக்கிறார்கள்!