Chennai SUper Kings  Chennai SUper Kings
T20

IPL Auction | எத்தனை பழைய வீரர்களைத் தக்கவைக்கப் போகிறது சூப்பர் கிங்ஸ்..!

என்னதான் ருதுராஜ் அதிகம் ஸ்பின்னர்களை பயன்படுத்தவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இரண்டு ஸ்பின்னர்களாவது அணிக்குத் தேவை.

Viyan

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாம மெகா ஏலம் வரும் ஞாயிறு மற்றும் திங்கள் இரு தினங்களும் சவுதி அரேபியாவில் நடக்கிறது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் 10 அணிகள் தொடர்களாக மாறியபோது கடைசியாக மெகா ஏலம் நடந்தது. அது நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது அடுத்த 3 ஆண்டுகளுக்காக ஒவ்வொரு அணியும் புதியதொரு ஸ்குவாடை உருவாக்க முயற்சிப்பார்கள். இந்தக் கட்டுரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னென்ன திட்டங்களோடு வரும் என்பதைப் பார்ப்போம்.

இந்த ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வீரர்களை தக்கவைத்திருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, மஹேந்திர சிங் தோனி, மதீஷா பதிரானா ஆகியோரை அவர்கள் தக்கவைத்திருக்கிறார்கள். இதற்காக மொத்தம் 65 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது அந்த அணி. அதன்மூலம் ஏலத்தில் அவர்களுக்கு 55 கோடி ரூபாய் மீதமிருக்கும். போக, சூப்பர் கிங்ஸ் கையில் 1 RTM மீதமிருக்கும்.

இந்த ஏலத்துக்கு முன்பாக அனைவரும் யோசிக்கவேண்டிய விஷயம், இது யாருடைய அணியாக இருக்கப்போகிறது என்பது! இத்தனை ஆண்டுகள் தோனியின் அணியாக இருந்தது, அப்படியே தொடரப்போகிறதா இல்லை இது ருதுராஜ் கெய்க்வாடின் அணியாக இருக்கப்போகிறதா என்பது. ருதுராஜ் கேப்டனாக பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு ஏற்ற ஒரு அணியைக் கட்டமைப்பதுதான் சரியாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸும் அதையே செய்வதாகத்தான் தெரிகிறது. தற்போது சமூக வலைதளங்களில் கூட பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் உடன் ருதுராஜ் ஆலோசிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறது அந்த அணி. இது ஒரு நல்ல பாதையில் பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் தோனியின் அணியில் இருந்து, ருதுராஜின் அணி பெரிய அளவு மாறுபடவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், 'கோர்' வீரர்களைத் தக்கவைக்கவேண்டும் என்பதுதான் சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமாக இருந்திருக்கிறது. ருதுராஜும் நிச்சயம் அதைக் கடைப்பிடிக்கவே நினைப்பார்.

சரி, இப்போது வீரர்கள் பக்கம் வருவோம். முதலில், ஓப்பனர் ஸ்லாட்டுக்கு எப்படியும் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா இருவரில் ஒருவரை சூப்பர் கிங்ஸ் வாங்க விரும்பும். மீண்டும் ருதுராஜை கணக்கில் எடுக்கும்போது கான்வேவே சரியான தேர்வாக இருப்பார் என்று தோன்றுகிறது. கான்வே - ருதுராஜ் இணை 2023 சீசனில் ஒவ்வொரு அணியையும் பந்தாடியது. அதனால் தன்னுடைய சிறந்த பார்ட்னரை மீண்டும் அணிக்குள் கொண்டுவரவே விரும்புவார் கெய்க்வாட். அதுமட்டுமல்லாமல் ரச்சின் கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் தடம்பதிக்கத் தடுமாறினார். எனவே அந்த இடத்துக்கு கான்வேவை சூப்பர் கிங்ஸ் வாங்கும் என்பதை 75 சதவிகிதம் உறுதியாகக் கூறிவிடலாம்.

மிடில் ஆர்டருக்கான இந்திய பேட்டர் இடத்துக்கு நிச்சயம் சிறப்பாக ஸ்பின் ஆடக்கூடிய ஒரு வீரரை சூப்பர் கிங்ஸ் தேடும். நித்திஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் நல்ல தேர்வாக இருப்பார்கள். ஆனால், அது அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அணிக்குள் கொண்டுவந்துவிடும். ஏற்கெனவே தூபே, ஜடேஜா போன்றவர்கள் இருக்கும் நிலையில், கான்வேவையும் வாங்கிவிட்டு அதோடு சேர்த்து இன்னொரு இடது கை பேட்ஸ்மேனையும் டார்கெட் செய்யக்கூடாது. அதனால், மறுபடியும் சமீர் ரிஸ்வியை வாங்க நினைக்கலாம். இல்லையெனில், ஜித்தேஷ் ஷர்மா போன்ற ஒரு வீரர் கூட நல்ல தேர்வாக இருப்பார். தோனி கீப்பிங் பேக் அப்பாகவும் அவரால் செயல்பட முடியும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சூப்பர் கிங்ஸ் அதிகம் ஸ்பின்னர்கள் பக்கம் கவனம் செலுத்துமா என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு வழக்கத்தும் மாறாக குறைவாகவே ஸ்பின்னர்கள் சேப்பாக்கத்தில் பயன்படுத்தப்பட்டார்கள். காரணம் கேப்டன் ருதுராஜ்! அவர் வேகப்பந்துவீச்சாளர்களையே அதிகம் நம்புவதால் குறைந்தபட்சம் 2 இந்திய பௌலர்களிலாவது அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் துஷார் தேஷ்பாண்டே, தீபக் சஹார் இருவரையுமே வாங்க முயற்சிக்கலாம். இல்லை குறைந்தபட்சம் ஒருவரையாவது வாங்கலாம்.

என்னதான் ருதுராஜ் அதிகம் ஸ்பின்னர்களை பயன்படுத்தவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இரண்டு ஸ்பின்னர்களாவது அணிக்குத் தேவை. ஜடேஜாவுடன் மிடில் ஓவரில் மேஜிக் நிகழ்த்த நிச்சயம் அஷ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரையாவது சூப்பர் கிங்ஸ் குறிவைக்கவேண்டும். அதிக தொகை முதலீடு செய்ய முடிந்தால் வாஷிங்டன். இல்லையெனில் அஷ்வின். ஆனால், நிச்சயம் இருவருமே மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார்கள்.