SRH JAGRAN PRAKASHAN LIMITED
T20

IPL Auction | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தரமான அணியை உருவாக்க முடியுமா?

ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்டது. மெகா ஏலம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டதைத் தொடர்ந்து, 2025 சீசனுக்கான மெகா ஏலம் இந்த வாரம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது.

Viyan

ஒவ்வொரு அணியும் புதியதொரு டீமை உருவாக்க முயற்சி செய்வார்கள் என்பதால், இந்த ஏலத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

SRH

ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள 5 வீரர்கள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களுடைய அதிரடியான அணுகுமுறையின் காரணமாக கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது. அதற்கு மிகமுக்கியக் காரணமாக இருந்த கேப்டன் பேட் கம்மின்ஸ், ஓப்பனர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அதிரடி மன்னன் எய்ன்ரிச் கிளாசன், ஆல்ரவுண்டர் நித்தீஷ் குமார் ரெட்டி என ஐந்து பேரை ரீடெய்ன் செய்திருக்கிறது அந்த அணி. அதற்காக மொத்தம் 75 கோடி ரூபாய் அவர்கள் செலவு செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் 45 கோடி ரூபாயில் இனி ஒரு ஸ்குவாடை கட்டமைக்கவேண்டும்.

மாற்றி மாற்றி களமிறக்கப்பட்ட 4வது வீரர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கெனவே 3 வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்திருக்கிறது. அவர்கள் மூவருமே கடந்த ஆண்டு அந்த அணிக்கு மிகச் சிறந்த பங்களிப்பைக் கொடுத்தார்கள். ஆனால், அந்த நான்காவது வெளிநாட்டு வீரரால் நல்ல பங்களிப்பைக் கொடுக்க முடியவில்லை. அந்த இடத்துக்கு நிறைய வீரர்களை அவர்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஆனால், அது எதுவும் அவர்களுக்கு உதவவில்லை. மார்க்ரம், யான்சன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அவர்கள் மாற்றி மாற்றி களமிறக்கினார்கள்.

SRH

தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் யான்சனை மீண்டும் வாங்குவது நல்ல முடிவாக இருக்கும்:

வனிந்து ஹசரங்கா காயத்தால் வெளியேறாமல் இருந்திருந்தால் ஒருவேளை அந்தப் பிரச்சனை ஏற்படாமல் இருந்திருக்கலாம். குறைந்தபட்சம் இந்த முறை அவர்கள் அந்த நான்காவது வெளிநாட்டு வீரரை, அனைத்து போட்டிகளிலும் விளையாடக்கூடிய ஒருவரை வாங்கிடுவது நல்லது. அவர்கள் ரிலீஸ் செய்திருக்கும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் யான்சனை மீண்டும் வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். அவர் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நல்ல ஃபினிஷராகவும் அவரால் செயல்பட முடியும். கிளாசன் மீதான நெருக்கடியும் கூட அதனால் குறையும்.

வாஷிங்டன் சுந்தர் இப்போது இருக்கும் ஃபார்முக்கு அவரை புறக்கணிக்க முடியாது:

ஆல்ரவுண்டர்கள் என்று பேசும்போது அவர்கள் இந்திய ஆல்ரவுண்டர்கள் பக்கமும் கவனம் செலுத்தவேண்டும். யான்சனைப் போல், அவர்கள் ரிலீஸ் செய்த வாஷிங்டன் சுந்தரும் மிரட்டலாக செயல்பட்டுவருகிறார். அவர் அந்த அணிக்குப் பெரிய பங்களிப்பைக் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவர் இப்போது இருக்கும் ஃபார்முக்கு அவரைப் புறக்கணிக்க முடியாது. அதனால் ஒருவேளை அவர் குறைந்த தொகைக்குப் போவாரேயானால் அவரை அவர்கள் வாங்க முயற்சிப்பது நல்லது.

Natarajan

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் நம்பியிருக்கும் அணி:

அந்த அணிக்கு இருக்கும் அடுத்த முக்கிய இலக்கு, ஒரு நல்ல பௌலிங் படையை அமைப்பது. எப்போதுமே அந்த அணி இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் நம்பியிருக்கிறது. அவர்களும் அந்த அணிக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் மீண்டும் அப்படியொரு படையை சன்ரைசர்ஸ் உருவாக்கவேண்டும். ஆனால், அதற்கு அவர்கள் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்ற பெரிய கேள்வியும் இருக்கிறது.

குறைந்தபட்சம் இரண்டு தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர்களாவது அந்த அணிக்குத் தேவை. நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவரில் ஒருவரையாவது அவர்கள் மீண்டும் வாங்க முயற்சி செய்யவேண்டும். ஆகாஷ் மத்வால், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ராசிக் தார், வைபவ் அரோரா என பல இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை வாங்குவது அவர்கள் பந்துவீச்சை பலப்படுத்தும்.

இந்த இடங்களில் அவர்கள் கவனம் செலுத்திவிட்டு மீதமிருக்கும் தொகையில் அவர்கள் டாப் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தவேண்டும். அந்த 3 மற்றும் 4 இடங்கள். தங்கள் அணியில் நீண்ட காலமாக ஆடிக்கொண்டிருக்கும் அப்துல் சமாதை இந்த இடத்தில் ஆடவைத்தால் ஒருவேளை அவர் தன் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கலாம். அவர்களுக்கு இருக்கும் RTM கார்டை அன்கேப்ட் வீரருக்குத்தான் பயன்படுத்த முடியும் என்பதால் அதை இவருக்குப் பயன்படுத்தலாம். அதுபோக, நித்திஷ் ராணா, அபினவ் மனோஹர், அஷுதோஷ் ஷர்மா, அங்க்ரிஷ் ரகுவன்ஷி போன்ற இந்திய வீரர்களை வாங்கவும் முயற்சி செய்யலாம்.