சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ்  முகநூல்
T20

சரிந்த வீரர்கள்.. தனி ஒருவனாக அணியை காத்த நிதிஷ் ரெட்டி! ஷஷாங் போராட்டத்தால் கடைசி பந்துவரை த்ரில்!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதிய 23 ஆவது லீக் போட்டி, கடைசி பந்துவரை பரபரப்பாகவே சென்றது.

Rajakannan K

சுவாரஸ்யத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் நாள்தோறும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது நடப்பு ஐபிஎல் சீசன். இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதிய 23 ஆவது லீக் போட்டியும் கடைசி பந்துவரை பரபரப்பாகவே சென்றது.

5 கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்து வரலாறு படைத்த அணி, சன்ரைசர்ஸ் அணி. அதேபோல குஜராத் அணிக்கு எதிராக ஜெயிக்கவே முடியாது என நினைத்த ஒரு போட்டியை ஷஷாங் சிங்கின் அபார ஆட்டத்தால் வென்ற அணி, பஞ்சாப் அணி. இந்த சன்ரைசர்ஸும் பஞ்சாப்பும் ஒரு போட்டியில் மோதினால் எப்படி இருக்கும்...? அதேதான் நேற்று நடந்தது! இதனாலேயே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பயங்கரமாக இருந்தது.

28 ரன்களில் சன்ரைசர்ஸ் இரண்டு விக்கெட்...

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க்கரம், க்ளாசன் என பெரும் பேட்டிங் பட்டாளமே இருப்பதால் எப்படியும் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பஞ்சாப் அணியில் முதல் இரண்டு ஓவரை ரபாடாவும், அர்ஸ்தீப் சிங்கும் சிறப்பாக வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர்.

ஆனால், அடுத்த ஓவரில் இருந்து ரன் வேட்டையை தொடங்கினார் டிராவிஸ் ஹெட். ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார் ஹெட். ஆனால், நான்காவது ஓவரில் ஆட்டத்தையே மாற்றிப் போட்டார் அர்ஸ்தீப் சிங். அதிரடியை தொடங்கிய டிராவிஸ் ஹெட்டை 21 ரன்களிலும், அடுத்து வந்த மார்க்கரமை ரன் எதுமின்றியும் சாய்த்தார் அர்ஸ்தீப். அதனால், 28 ரன்களில் இரண்டு விக்கெட்டை இழந்தது சன்ரைசர்ஸ்.

‘277 ரன்கள் குவித்த அணியா இது?’

சாம் கர்ரன் விசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினாலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் அபிஷேக் ஷர்மா. 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ‘277 ரன்கள் குவித்த அணியா இது?’ என ஹைதராபாத் அணி பரிதாப நிலைக்கு சென்றது. அடுத்த சில ஓவர்களில் ரன்களே சுத்தமாக வரவில்லை. ரன்கள்தான் வரவில்லை என்று பார்த்தால் 11 ரன்னில் திரிபாதியும் நடையைக்கட்டிவிட்டார். 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை மட்டுமே எடுத்தது ஹைதராபாத்.

‘ஆட்டநாயகன்’ நிதிஷ் குமார் ரெட்டி!

நிதிஷ் குமார் ரெட்டி

200 ரன்கள் குவிப்பார்கள் என்ற நிலையில் இருந்து 150 ரன்களாவது எட்டுவார்களா என்ற நிலைக்கு வந்தது ஹைதராபாத். இப்படியான இக்கட்டான நிலையில்தான், களத்திற்கு வந்தார் நிதிஷ் குமார் ரெட்டி.

நிதிஷ் களத்திற்கு வந்தபிறகு ஆட்டத்தை அப்படியே மாற்றிப் போட்டார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ளாசன் 9 ரன்களில் நடையைக் கட்டியப் போதும் நிதிஷ் தன்னுடைய அதிரடியை நிறுத்தவில்லை.

நிதிஷ் குமார் ரெட்டி

ஹர்ப்ரீட் வீசிய 15 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். அப்துல் சமத்தும் சற்று நேரம் அதிரடி காட்டி 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதே ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டியும் 37 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும், சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் என்ற பார் ஸ்கோரை எட்டியது.

பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஸ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடக்கமே பஞ்சாப்புக்கு அதிர்ச்சி!

183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட் ஆகி வெளியேற, இம்பேக்ட் பிளேயராக வந்த பிரப்சிம்ரன் சிங்கும் 4 ரன்னில் நடையைக் கட்டினார். கேப்டன் ஷிகர் தவானும் 14 ரன்களில் ஸ்டம்பிங் ஆக, 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப். இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என சிறிது நேரம் அதிரடி காட்டிய சாம் கர்ரன் 29 ரன்னிலும், சிகந்தர் ரஸா 28 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி 58 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி இருந்த அதே நிலைக்கு வந்து சேர்ந்தது.

பஞ்சாப் கிங்ஸ்

கடைசி 4 ஓவரில் தொற்றிக்கொண்ட பரபரப்பு...

பஞ்சாப்பின் இந்த இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வந்தார் ஷஷாங் சிங். கடந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ஒரு மேஜிக் நிகழ்த்தி வெற்றியை சாத்தியமாக்கியதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்ப அவரும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். ஜிதேஷ் ஷர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஷஷாங் சிங்குடன் அதிரடியில் இணைந்து கொண்டார் அஸுதோஷ் ஷர்மா.

கடைசி 4 ஓவர்களில் 67 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. 17 ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. 18 ஆவது ஓவரில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 11 ரன்களையும், 19 ஆவது ஓவரில் நடராஜன் 10 ரன்களையும் மட்டுமே விட்டுக் கொடுக்க ஆட்டம் ஹைதராபாத் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீச வந்தார் உனாட்கட்.

உனாட்கட் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே அஸுதோஷ் ஷர்மா சிக்ஸர் பறக்கவிட, ரசிகர்கள் இருக்கை நுனிக்கே வந்துவிட்டார்கள். முதல் பந்தே சிக்ஸர் சென்றதால் கடந்த ஆண்டு ரிங்கு சிங் நிகழ்த்தி காட்டிய அதே மேஜிக் மீண்டும் நிகழுமோ என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டது.

Ashutosh Sharma

சிக்ஸர் பறக்கவிட்ட அஸூதோஷ் ஷர்மா!

பதற்றம் தொற்றிக் கொண்டதால் அடுத்தடுத்து இரண்டு ஒயிடுகளை வீசினார் உனாட்கட். அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு பஞ்சாப் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அஸூதோஷ் ஷர்மா. முதல் இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர், 2 ஒயிடுகள் என 14 ரன்கள் வந்துவிட்டதால் அடுத்த 4 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் கொஞ்சம் திரும்பியது.

ஆனால், அடுத்த இரண்டு பந்துகளில் தலா இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஆட்டத்தை மீட்டுக் கொண்டுவந்தார் உனாட்கட். இரண்டு பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஒரு ஒயிடு வீசி பதற்றமாகத்தான் இருக்கிறேன் என்பதை உறுதி செய்தார் உனாட்கட். இப்போது இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை. ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தால் போதும்.

நூலிழையில் தவறவிட்ட பஞ்சாப்!

ஆனால், அஸுதோஷ் தூக்கி அடித்த ஐந்தாவது பந்தில் கேட்ச் டிராப் செய்யப்பட்ட போதிலும், ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஒரு ரன் மட்டுமே வந்ததால் பெருமூச்சுவிட்டார்கள் ஹைதராபாத் ரசிகர்கள். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததால் ஆட்டம் ஹைதராபாத் பக்கம் சென்றுவிட்டது. நோ பால் போடாமல் இருந்தாலே ஆட்டம் அவர்கள் பக்கம்தான்.

ஷஷாங் சிங் - அஸுதோஷ் ஷர்மா

கடைசி பந்தில் சிக்ஸர் விளாசினார் ஷஷாங் சிங். ஆனால், போன பந்திலேயே ஆட்டம் அவர்களின் கைகளை விட்டு சென்றுவிட்டது. இருப்பினும் 2 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் ஆட்டத்தை கோட்டைவிட்டது பஞ்சாப் அணி. ஷஷாங் சிங் 25 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள், அஸுதோஷ் ஷர்மா 15 பந்துகளில் இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த அவர்களின் போராட்டம் வீண் ஆனது.

5 ஆவது போட்டியில் விளையாடிய ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது மூன்றாவது வெற்றியையும், அதேபோல், 5 ஆவது போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் மூன்றாவது தோல்வியையும் சந்தித்தது.

முன்னணி வீரர்கள் சொதப்பி அணி இக்கட்டான நிலைக்கு சென்ற நிலையில் மீட்பராக வந்து 64 ரன்கள் குவித்த நிதிஷ் குமார் ரெட்டி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒவ்வொரு போட்டியிலும் யாரவது ஒரு வீரர் ஜொலித்து எல்லோர் மனதிலும் நிலைக்கு நிற்பார்கள். அப்படியான வீரராக இந்தப் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி மாறினார்.