shreyas - gambhir - rana web
T20

IPL 2024 | KKR | ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்டார்க் வருகை - துவண்டு போயுள்ள KKR துள்ளி எழுமா?

சென்னை, மும்பைக்கு அடுத்தபடியாக அதிக முறை ஐ.பி.எல் கோப்பை வென்ற அணி... மும்பைக்கு அடுத்தபடியாக பைனலில் வெற்றி சதவீதம் அதிகம் வைத்திருக்கும் அணி என ஐ.பி.எல்லின் தவிர்க்கமுடியாத பெயர் கே.கே.ஆர்.! இந்த அணியின் பலம், பலவீனத்தை விரிவாக பார்க்கலாம்...

Nithish

(பிற அணிகளின் பலம் பலவீனம் குறித்து, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

பள்ளிக் கல்லூரிகளில் நம் எல்லாருடைய குழுவிலும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கும். கல்ச்சுரல்ஸோ, கலாட்டாவோ எல்லா இடத்திலும் கூட்டத்தோடு கூட்டமாக இருக்குமிடமே தெரியாமல் இருப்பார்கள். எக்ஸாமுக்கு முந்தைய நாள் வரை, ஏன் தேர்வு ஹாலுக்குள் நுழைவது வரைக்குமே 'எதுவுமே படிக்கலடா' என சோகப்பாட்டு பாடி சாதிப்பார்கள்.

ஆனால் உள்ளே நுழைந்தபின் சிந்துபாத் கதைக்கே சவால்விடுமளவிற்கு பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுவார்க்ள். எதிர்பார்த்தபடியே ரிசல்ட் வரும்போதும் டிஸ்டிங்ஷனில் பாஸானவர்கள் லிஸ்ட்டில் அந்தக் கேரக்டரின் பெயர் இருக்கும். ஐ.பி.எல்லில் அதுதான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்னை, மும்பைக்கு அடுத்தபடியாக அதிக முறை ஐ.பி.எல் கோப்பை வென்ற அணி. மும்பைக்கு அடுத்தபடியாக பைனலில் வெற்றி சதவீதம் அதிகம் வைத்திருக்கும் அணி என ஐ.பி.எல்லின் தவிர்க்கமுடியாத பெயர் கே.கே.ஆர்.

kkr

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை. ஸ்டார் பிளேயர்களான ரஸலும் நரைனும் ஃபார்ம் அவுட். சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அமையவில்லை. ஓபனிங் இணையே சில ஆட்டங்கள் கழித்துதான் செட்டானது. பவர்ப்ளேயிலும் டெத் ஓவர்களிலும் ரன்களை வாரிக் கொடுத்தார்கள் பவுலர்கள். பவர்ப்ளே பவுலிங் ஆவரேஜ் 56. டெத் ஓவர்களில் 38.20. கடந்த சீசனின் மிக மோசமான பவுலிங் ஆவரேஜ் கொல்கத்தாவினுடையதுதான். இப்படி ஏகப்பட்ட காரணங்களால் கடந்த முறை சுமாராகவே ஆடியது கொல்கத்தா. புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடம்.

அதனால் கோர் டீமை அப்படியே வைத்துக்கொண்டு பேக்கப் ஃபாரீன் பிளேயர்கள், பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் அனைவரையும் ஏலத்திற்கு முன்னால் கழற்றிவிட்டது அணி நிர்வாகம். அதில் ஒரே ஒரு ஆச்சர்யம், ஷர்துல் தாக்கூரை விடுவித்ததுதான். ஐ.பி.எல் அனுபவம் இருந்த ஒரே ஒரு மீடியம் பேஸர் அவர் மட்டும்தான். போன சீசனில் அவரின் மோசமான ஃபார்ம் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கும்.

32.70 கோடி என்கிற நல்ல பட்ஜெட்டோடு ஏலத்திற்கு வந்தார்கள். தொடக்கத்தில் வந்த சில வீரர்கள் மேல் ஆர்வமே காட்டவில்லை. அப்போதே யாருக்கோ காத்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. மிட்செல் ஸ்டார்க் பெயர் வந்தவுடன் மும்பையும் டெல்லியும் சகட்டுமேனிக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்க விலை பத்து கோடியைத் தாண்டியதும் ஜகா வாங்கியது மும்பை.

கேப்பில் புகுந்தது கே.கே.ஆர். குஜராத் டைட்டன்ஸோடு இறுதிவரை மல்லுகட்டி 24.75 கோடிக்கு ஸ்டார்க்கைத் தட்டித்தூக்கினார்கள். ஐ.பி.எல்லில் ஒரு பிளேயருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச விலை இது. மீதி ஷாப்பிங் எல்லாம் பேக்கப் வீரர்களுக்கானது. அதிலும் இப்போது கடைசி நேர மாற்றங்களாக ஜேசன் ராய்க்கு பதில் பில் சால்ட்டும் கஸ் அட்கின்ஸனுக்கு பதில் இலங்கையின் துஷ்மந்த சமீராவும் இணைந்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டன் பொறுப்புக்கு திரும்பியிருக்கும் நிலையில் கடந்த சீசனைவிட பலமான அணியாகவே பேப்பரில் தெரிகிறது கொல்கத்தா. ஆனால் கோப்பையை தொடுமளவிற்கான பலமான அணியா?

shreyas iyer

பலம்:

இந்திய ஐவர்:

ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி என கேப்டன், மிடில் ஆர்டர், ஆல்ரவுண்டர், ஃபினிஷர், பவுலர் என டி20யின் ஐந்து பிரதான ரோல்களுக்கும் மேட் இன் இந்தியா தயாரிப்புகள் இருப்பது அணியின் பெரும்பலம். ஐவருமே பல சீசன்களாக ஒன்றாக பயணிப்பவர்கள் என்பதால் இவர்களை மையமாகக் கொண்டே அணியின் நகர்வு இருக்கும்.

ஸ்பின் ஸ்ட்ராங்:

ஈடன் கார்டன் ஸ்பின்னுக்கு சாதகமான விக்கெட், சென்னையும் அப்படியே. லக்னோவுமே ஸ்லோ பிட்ச்தான். எனவே கடந்தமுறை வருண், நரைன், சுயாஷ் மூன்று முழுநேர ஸ்பின்னர்களைக் களமிறக்கி எதிரணிகளுக்கு ஆட்டம் காட்டியது கொல்கத்தா. கடந்த சீசனில் ஃபாஸ்ட் பவுலிங்கை விட ஸ்பின் ஓவர்கள் அதிகம் போட்ட ஒரே அணி கொல்கத்தா தான். போதாதென இந்த முறை முஜிப் ரஹ்மானையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். எனவே இந்த முறையும் எதிரணிகள் ஒவ்வொரு மேட்ச்சிலும் 12 ஓவர்கள் ஸ்பின் ஆடப்போவது உறுதி.

gautam gambhir

கம்பீர் எனும் காரணி:

கொல்கத்தாவிற்கும் கம்பீருக்குமான பந்தம் காங்கிரஸும் கோஷ்டி சண்டையும் போல தொன்றுதொட்டு தொடர்வது. இரண்டு முறை கொல்கத்தாவை கோப்பை வெல்ல வைத்த சாம்பியன். அதன்பின் மென்டராக லக்னோ அணி தொடர்ந்து இரண்டு முறை ப்ளே ஆஃப் செல்லவும் ஒரு காரணமாக இருந்தார். அவர் இப்போது கொல்கத்தா முகாமுக்கே மென்டராக திரும்பியிருப்பது அணியில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம்.

பலவீனம் :

தந்தியடிக்கும் ஃபாஸ்ட் பவுலிங்:

ஸ்பின்னில் எவ்வளவுக்கு எவ்வளவு பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஃபாஸ்ட் பவுலிங்கில் தொய்வடைந்து போயிருக்கிறது கொல்கத்தா. முதன்மை இந்திய ஃபாஸ்ட் பவுலர்களான ஹர்ஷித் ராணாவும் வைபவ் அரோராவும் ஐ.பி.எல் களத்திற்கு புதியவர்கள். கொஞ்சம் சீனியரான சேத்தன் சக்காரியாவும் முதல் சீசனில் மட்டுமே நன்றாக ஆடினார்.

ஆக, வேகப்பந்துவீச்சு முழுக்க முழுக்க ஸ்டார்க்கை மட்டும் நம்பியே இருக்கப்போகிறது. ஆனால் ஸ்டார்க்குமே ஐ.பி.எல் ஆடி எட்டு ஆண்டுகள் ஆகிறது. 2021லிருந்து அவரின் டெத் ஓவர் சராசரி 11.29. கூடவே 24 கோடி கொடுத்து வாங்கப்பட்ட பிரஷரும் தலையை அழுத்தும். மற்றொரு டெத் ஓவர் ஆப்ஷனான ரஸல் பற்றி சொல்லவே வேண்டாம். எக்ஸ்ட்ரா போட்டே பத்து ரன்கள் அதிகம் கொடுத்துவிடுவார். எனவே இந்த ஏரியாவில் கொல்கத்தா தடுமாறவே வாய்ப்புகள் அதிகம்,

Mitchell Starc

படுத்தியெடுக்கும் காயம்:

தொடர் காயங்களால் அவதிப்பட்டு ஒரு இடைவேளைக்குப் பின் களம் காண்கிறார் ஸ்ரேயாஸ். கடந்த வாரம் நடந்த ரஞ்சிப்போட்டியின்போது கூட அவரை காயம் முழுவீச்சில் இயங்கவிடாமல் செய்வதைக் காண முடிந்தது. அதை சமாளித்து அவர் ஃபார்முக்குத் திரும்புவதும் அவசியம். அதேபோல ரஸல். இப்போதெல்லாம் இரண்டு ஓவர்கள் தொடர்ந்து பந்துவீசினாலே மூன்றாவது ஓவரில் அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட்டுவிடுகிறது. உலகக்கோப்பை டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கியத் தூண் ஸ்டார்க். களத்தில் அவர் அடிபட்ட வரலாறை பக்கம் பக்கமாக எழுதலாம். அதனால் உலகக்கோப்பை நெருக்கத்தில், ஸ்டார்க் சின்னதாக சிணுங்கினால் கூட ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரைத் திரும்பி அழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே பார்த்து பார்த்து ஆடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டார்க்.

ப்ளேயிங் லெவன்:

வெங்கடேஷ் ஐயர், குர்பாஸ், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ரஸல், ரமன்தீப் சிங், நரைன், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

இந்திய ஆடுகளங்களில் அதுவும் ஸ்பின் பிட்ச்களில் ஆடிப்பழக்கப்பட்ட குர்பாஸையே ஃபில் சால்ட்டைத் தாண்டி தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம். முதல் ஆறு பொசிஷன்களில் தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ஆல்ரவுண்டருக்கான ஏழாவது இடம் வீக்காக இருக்கிறது. பேட்டிங்கில் இப்போதெல்லாம் பெரிதாய் சோபிக்காத நரைனை அந்த இடத்தில் இறக்க வாய்ப்புகள் குறைவு. எனவே மும்பைக்கு ஒரு சீசன் ஆடிய ரமன்தீப்பை அங்கே இறக்கி, பவுலிங்கின்போது ஒன்றிரண்டு ஓவர்கள் அவரிடம் வாங்க வாய்ப்புகள் அதிகம்.

rinku singh - andre russell

இம்பேக்ட் பிளேயர்கள்:

சுயாஷ் - கடந்த சீசனில் சூப்பராக விளையாடினார் என்பதால் இவரை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கவே வாய்ப்புகள் அதிகம்.

வைபவ் அரோரா - அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா ஃபாஸ்ட் பவுலிங் ஆப்ஷன் தேவைப்படும்போது.

சேத்தன் சக்காரியா - எதிரணியில் வலதுகை ஆட்டக்காரர்கள் அதிகம் இருக்கும்போது ஒரு இடதுகை பந்துவீச்சாளராய் ஸ்டார்க்கிற்கு துணையாய் இவர் களமிறங்கக்கூடும்.

தனி ஒருவன்:

வேறு யாராய் இருக்கமுடியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கும் ரிங்கு சிங் தான். கடந்த இரண்டு சீசன்களாக ரிங்கு களத்தில் ஆடுவது ருத்ர தாண்டவம். அதுவும் போன சீசனில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 149.53. அதன்பின் இந்திய அணியின் கதவுகள் திறந்து அங்கும் சென்று வானவேடிக்கை காட்டிவிட்டார். இந்த ஒரு ஆண்டில் அவர் ஆடிய 11 சர்வதே டி20 இன்னிங்ஸ்களில் 356 ரன்கள். சராசரி 89. ஸ்ட்ரைக் ரேட் 176.23. இந்தமுறையும் காட்டு காட்டெனக் காட்டி உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆஸ்தான பினிஷராக உருவெடுப்பார் என நம்பலாம்.

kkr

முன்னாள் கேப்டன் கம்பீரின் கம்பேக், இந்நாள் கேப்டன் ஸ்ரேயாஸின் கம்பேக், உலகின் முன்னணி பவுலரான ஸ்டார்க்கின் கம்பேக் என கொல்கத்தா முகாமில் மட்டும் ஏகப்பட்ட கம்பேக்குகள். இப்படி மீண்டும் வந்திருக்கும் மீட்பர்களின் துணையோடு அணியும் கம்பேக் கொடுக்குமா? பார்க்கலாம்.