பிற அணிகளின் பலம் பலவீனம் குறித்து, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...
'ஏன் எல்லா அதிசயங்களும் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன? ஏனென்றால் சீக்கிரம் முடிவுக்கு வந்தால் மட்டுமே அது அதிசயம். இல்லையெனில் அது ஒரு அன்றாட அலுவல்'
- ஆங்கிலத்தில் இப்படியொரு சொல்லாடல் உண்டு. கிட்டதட்ட இப்படியொரு மனநிலையில்தான் இருக்கிறார்கள் உலகமெங்கும் இருக்கும் சி.எஸ்.கே ரசிகர்களும் தோனி அபிமானிகளும். காரணம் நேற்று வெளியான ஒற்றை அறிவிப்பு. எதிர்பார்த்ததுதான் என்றாலும் தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு இப்படி நிலைமை மாறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
தோனி பேட்ஸ்மேனாக களத்தில் இறங்குவது இப்போதெல்லாம் ரொம்பவே குறைந்துவிட்டது. ஆனால் ஒரு கேப்டனாய் பி.ஜி.எம் அதிர டாஸ் போட களமிறங்குவதை, புயல் வேகத்தில் பீல்டிங் செட் செய்வதை, போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷனில் 'Definitely Not' எனச் சொல்வதை பார்ப்பதற்காகவே கூட்டம் வண்டிகட்டிக்கொண்டு வருகிறது.
இதில் பீல்ட் செட் செய்வதைத் தவிர மீதி அனைத்தையும் இந்த முறை மிஸ் செய்யப்போகிறோம் என்பதை நினைத்தால் கனத்துத்தான் போகிறது நெஞ்சம். 'எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றிக்கடனாக என்னால் செய்ய முடிவது இன்னொரு சீசன் ஆடுவதுதான். ஆடுவேன்' என்று கடந்த முறை கோப்பை வென்றபின் சொன்னார் தோனி. 'ஓபனிங், ஒன்டவுன், மிடில் ஆர்டர் எங்கேயாவது முன்னாடியே இறங்கி வின்டேஜ் இன்னிங்ஸ் ஆடி அந்த அன்பைத் திருப்பிக்கொடு தல' என்பது மட்டும்தான் ரசிகர்களின் இறுதி மன்றாடலாக இருக்கிறது.
சரி சி.எஸ்.கே ப்ரிவியூவிற்கு வரலாம். ஜடேஜா கேப்டன்சி என்கிற முயற்சி தோல்வியடைந்த நிமிடத்திலிருந்தே அடுத்த கேப்டனுக்கான தேடலை தொடங்கிவிட்டது அணி நிர்வாகம். அப்போதே பலமாக அடிபட்டது ருத்துராஜ் பெயர். அட்டாகிங் பேட்ஸ்மேன், தோனியைப் போன்றே அமைதியான பிரஷரைத் தாங்கும் மனவோட்டம் என்பதெல்லாம் இதன் காரணங்கள். அணியில் ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி ஆடப்போகும் வீரருக்கே நிறைய நேரம் கொடுத்துப் பார்ப்பார்கள் சி.எஸ்.கே நிர்வாகத்தினர்.
உலகின் மிகப்பெரிய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஜஸ்ட் லைக் தட் கொடுத்துவிடுவார்களா என்ன. கொஞ்சம் கொஞ்சமாய் ருத்துவுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்கள். கூடவே பென் ஸ்டோக்ஸ், ரஹானே போன்ற சீனியர்கள் வீரர்களின் பெயர்களையும் பேக்கப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் ஸ்டோக்ஸ் தொடர்ந்து எல்லா சீசன்களும் ஆடுவது சிக்கல் என்பது தெளிவான நிலையில் ருத்துராஜுக்கான ரூட் க்ளியரானது.
அதன் முதல் சமிக்ஞை இந்தமுறை சென்னை கையிலெடுத்த ஏல ஸ்ட்ராடிஜி. 'பயிற்சி கொடுக்கவெல்லாம் நேரம் இல்லை' என அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை ஏலத்தில் எடுப்பது. அவர்களை வைத்து அந்தந்த ஆண்டுக்கான கோப்பையை வெல்ல முனைவதுதான் கடந்த சில ஆண்டுகளாக சி.எஸ்.கேவின் திட்டமாக இருந்தது. இந்தமுறை ராபின் மின்ஸ், பேட் கம்மின்ஸ், ட்ராவிஸ் ஹெட், கோட்ஸீ, குமார் குஷாக்ரா என அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு நின்று ஆடக்கூடிய வீரர்களை குறிவைத்து போட்டி போட்டார்கள். அதில் வெற்றியும் கிடைத்தது.
இளம் சென்சேஷனான ரச்சின் ரவீந்திரா, நாளாக நாளாக மெருகேறிக்கொண்டே இருக்கும் டேரல் மிட்செல், பயமறியா இளங்கன்று என முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் சிலாகிக்கப்படும் சமீர் ரிஸ்வி, சென்னையின் தத்துப்பிள்ளையாகிவிட்ட ஷர்துல் தாக்கூர் என அனைவரையும் உள்ளே கொண்டுவந்தார்கள்.
தோனி என்கிற ஆளுமையின் வெற்றிடத்தை ஓரளவு நிரப்பும் வகையிலும் இளம் கேப்டனான ருத்துவுக்கு கட்டுப்படும் வகையிலும் டிசைன் செய்யப்பட்ட டீமாக அன்று மாறியது சி.எஸ்.கே.
சி.எஸ்.கேவைப் பொறுத்தவரை முதல் பார்வைக்கு பலமாக இருக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் பொருட்டே இல்லை. சுமாரான அணியை வைத்தே கோப்பை வெல்வார் தோனி. ஆனால் இந்த முறை முடிவெடுக்கப்போவது ருத்துராஜ் என்பதால் அவருக்காக பேப்பரிலேயே பலமான அணியாக உருவாக்கியிருக்கிறார்கள். அப்போது பலவீனங்களே இல்லையா என்ன? பார்க்கலாம்.
ஐ.பி.எல் வரலாற்றில் அதிகக் கோப்பைகள் வென்ற கேப்டன், அதிக வெற்றிகள் பெற்றுள்ள கேப்டன் (226 போட்டிகளில் 133 வெற்றிகள்), அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கும் கேப்டன் (58.84), உலகின் தலைசிறந்த கிரிக்கெட் மூளைகளுள் ஒன்று... இவ்வளவு டேட்டாவும் சொல்வது ஒன்றுதான். அவரின் இருப்பு ஒன்றே போதும் அணிக்கு டன்கணக்கில் பாசிட்டிங் எனர்ஜியை, வென்றுவிடும் மனப்பான்மையைக் கொடுக்க. இதுதான் கடைசி சீசன் என கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் டி20 உலகக்கோப்பை வென்றதோடு தொடங்கிய கணக்கை ஐ.பி.எல் கோப்பையை ஆறாவது முறையாக வெல்வதோடு முடிக்கவே விரும்புவார் தோனி. ருத்து அண்ட் கோவிற்கு இவர் ஆயிரம் யானைகளின் பலம்.
கான்வே காயம் காரணமாக ஆடமாட்டார் என்பது ஒருவகையில் ரச்சின் ரவீந்திராவை பரிசோதித்துப் பார்க்க சாதகமாக அமைந்துவிட்டது. ஓபனிங் ருத்துராஜும் ரச்சினும். ஒன் டவுன் ரஹானே, மிடில் ஓவர் ஸ்பின்னை சமாளிக்க தூபே, டெத் ஓவர்களில் அடித்து நொறுக்க மிட்செல், ஜடேஜா, தோனி, சமீர் ரிஸ்வி, ஒருவேளை விக்கெட்கள் மளமளவென விழுந்தால் டெயில் எண்டில் சமாளிக்க தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என எப்படிப் பார்த்தாலும் பத்து பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் அணியில்.
விக்கெட்கள் எடுத்து எடுத்தே மாளவேண்டும் எதிரணிகள். எவ்வளவு மோசமாக ஆடினாலும் ஒவ்வொரு மேட்ச்சுக்கும் குறைந்தது 170 ரன்கள் எடுத்துவிடக்கூடிய பேட்டிங் லைன் அப் இது. ரஹானே, தூபே போன்றோரின் ஃபார்ம் பற்றிய கேள்விகள் இருக்கின்றனதான். ஆனால் அதுநாள் வரையில் ஃபார்ம் அவுட்டில் இருந்த வீரர்கள் சேப்பாக்கத்தில் கால்வைத்த நொடியில் சூப்பர்ஸ்டார்களாக மாறுவது சி.எஸ்.கேவில் புதிதா என்ன?
பவர்ப்ளேயில் பந்தை ஸ்விங் செய்ய தீபக் சஹார், அவருக்குத் துணையாக முகேஷ் செளத்ரி, மிடில் ஓவர்களில் லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களாக ரவீந்திரா அண்ட் ரவீந்திரா, பேக்கப்பாக சான்ட்னர், ஆஃப் ஸ்பின்னிங் ஆப்ஷனுக்கு மொயீன் அலி, பவர்ப்ளே, மிடில், டெத் என எல்லா இடங்களிலும் ரன்களே விட்டுத்தராமல் பந்தைச் சுழற்ற தீக்ஷனா, பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க ஆசை காட்டி விக்கெட்கள் வீழ்த்த ஷர்துல், துஷார் தேஷ்பாண்டே, டெத் ஓவர்களில் ஸ்லோ வேரியேஷன்கள் போட்டுக் கட்டுப்படுத்த முஷ்டஃபிஷுர் ரஹ்மான், நடுவே ஒன்றிரண்டு ஓவர்கள் போட மிட்செல், தூபே, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பேக்கப்பாக ஹங்கர்கேக்கர், சிமர்ஜித் என அணியில் முக்கால்வாசிப் பேர் பவுலிங் போடக்கூடியவர்கள். எனவே பிட்ச்சுக்கு ஏற்றபடி தேர்வு செய்ய ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன.
சென்னை அணி இதுவரை ஆடியுள்ள 14 சீசன்களில் 8 சீசன்களில் மட்டுமே சென்னையை ஹோம் க்ரவுண்டாகக் கொண்டு ஆடியுள்ளது. அத்தனை முறையும் ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றிருக்கிறது. அதில் மூன்று முறை சாம்பியனும் கூட. அந்தவகையில்
இதுவரை இங்கே ஆடியிருக்கும் 64 ஐ.பி.எல் போட்டிகளில் 45 போட்டிகளில் வெற்றி. வின்னிங் சதவீதம் 70.31. ஹோம் க்ரவுண்டில் அதிக வெற்றிகள் பெற்றிருக்கும் அணியாக இருப்பதால் இந்தமுறையும் எந்தக் குறுக்கீடுகளும் இல்லாமல் இங்கே ஏழு போட்டிகள் நடக்கும்பட்சத்தில் குறைந்தது ஐந்திலாவது வெற்றி பெற்றுவிடுவார்கள். ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளமும் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்களும் இதற்குக் கைகொடுப்பார்கள். பின், அவே மேட்ச்களில் மூன்று ஜெயித்தாலே போதும். ப்ளே ஆஃப் சீட் உறுதி.
தோனியின் இடம் முதல்வன் ரகுவரன் சொல்வதுபோல ஒரு முள்படுக்கை.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகள், அது உருவாக்கும் பிரஷர், தோற்றால் கல்லெறியத் தயாராய் இருக்கும் கைகள்... நினைத்தாலே தூக்கம் வராது. முன்பொருமுறை இப்படி ஒரு முடிவெடுத்தபோது ரிசல்ட் என்னவாக இருந்தது என எல்லாருக்கும் தெரியும். மீண்டுமொரு முறை அப்படி நடக்கக் கூடாது என்கிற அழுத்தம் வேறு. அடுத்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் தன் இடத்தைத் தக்கவைக்க ருத்துராஜ் தவறினால் அணி மாற்று ஆப்ஷன்களை பரிசீலிக்கக் கூடும். அதுவும் மனக்கண்ணில் வந்துபோகும் அவருக்கு. இதையெல்லாம் தாண்டி அணியை ருத்துராஜ் எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதில்தான் இருக்கிறது ப்ளே ஆஃப் வாய்ப்பு. ஏற்கனவே சையது முஷ்டாக் அலி தொடர், மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக், ஏசியன் கேம்ஸ் ஆகிய தொடர்களில் அணியை வழிநடத்திய அனுபவம் இருக்கிறது. அதுவும் தோனியின் வழிகாட்டுதலும் கைகொடுத்தால் மிளிர்வார்.
கான்வே கிட்டத்தட்ட தொடர் முழுக்கவே ஆடமாட்டார். தூபேவும் காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டிருக்கிறார். முஷ்டஃபிஷுரின் உடல்நிலையும் கடந்த சில வாரங்களாக இயல்பாக இல்லை. தோனி சர்ஜரிக்குப் பின் களமிறங்கும் முதல் தொடர் இது. முதல் போட்டி தொடங்கும் முன்பே இத்தனை இஞ்சுரி அப்டேட்களோடு களமிறங்குகிறது சென்னை. மிட் சீசனில் ஏதாவது ஒரு வீரர் காயமடைந்தால் அது அணியின் பேலன்ஸ், காம்பினேஷனை பாதிக்கக்கூடும். எனவே பார்த்துப் பார்த்து ஆடவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது சென்னை.
ருத்துராஜ், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, தூபே, டேரல் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, தோனி, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், தீக்ஷனா, முஷ்டஃபிஷுர் ரஹ்மான்.
மொயின் அலி தோனியின் பேவரைட் ப்ளேயர்தான். ஆனால் இந்தமுறை மிட்செல் ஆடவே வாய்ப்புகள் அதிகம் எனத் தோன்றுகிறது. டெத் ஓவர்களை பதிரானா இல்லாத நிலையில் முஷ்டஃபிஷுரை வைத்தே சமாளிக்க வேண்டிய நிலை. எனவே இந்தக் காம்பினேஷனில்தான் பெரும்பாலும் ஆடுவார்கள்.
சமீர் ரிஸ்வி - மிடில் ஆர்டரில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவைப்படும்போது அதிரடி ஃபினிஷராய் சமீர் களமிறங்கலாம்.
முகேஷ் செளத்ரி - பவர்ப்ளேயில் ஒரு எக்ஸ்ட்ரா பவுலர் தேவைப்படும்போது.
துஷார் தேஷ்பாண்டே - கடந்த முறை சென்னைக்கு அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர். இந்தமுறையும் அப்படி ஒரு விக்கெட் டேக்கிங் பவுலர் எக்ஸ்ட்ரா தேவைப்பட்டால்!
கேப்டன் அறிவிப்பு வந்திருக்காவிட்டாலும் இந்தமுறை அதிக கவனம் பெரும் வீரர் ருத்துராஜாகவே இருந்திருப்பார். 52 போட்டிகளில் 1797 ரன்கள். தற்போது ஆடும் வீரர்களில் அதிக பேட்டிங் ஆவரேஜ் வைத்திருக்கும் வீரர்களுள் ஒருவர். இந்திய அணியின் எதிர்கால ஓபனிங் பேட்ஸ்மேனாக கணிக்கப்படுபவர். வழக்கமான ஓபனிங் பார்ட்னர் இல்லை, இப்போது கேப்டன் பொறுப்பும் வேறு. அவர் எப்படி ஆடப்போகிறார் என்பதைக் காண பல கோடிக்கண்கள் காத்திருக்கின்றன.
இந்தப் பட்டியலில் சமீர் ரிஸ்வியையும் வைக்கலாம்தான். அந்தளவுக்கு இந்த இளம் வீரரைப் பற்றிச் சொல்ல எல்லா மூத்த வீரர்களுக்கும் நல்ல விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் ப்ளேயிங் லெவனில் அவர் ஆடுவாரா, போதுமான வாய்ப்புகள் இந்த சீசனிலேயே வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் சென்னை முகாமிலிருந்து வெளிவரும் செய்திகளைப் பார்த்தால் ஒருவேளை போதிய வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் அடுத்த ஆண்டு ரீட்டெயின் செய்யப்படும் வீரர்களுள் ஒருவராக சமீர் இருக்கக் கூடும்.
'One Last Dance' ஆடத் தயாராகிறார் தல. அதில் ஒரு நொடியைக் கூட தவறவிடக்கூடாது என கண்ணிமைக்கக் கூடத் தயாராக இல்லை ரசிகர்கள்.
அதிசயத்திற்கான காலக்கெடு முடிவாகிவிட்டது. அது ஆறாவது முறை நிகழும் அதிசயமாக இருக்கவேண்டும் என்பதே அத்தனை பேரின் எதிர்பார்ப்பும்.
தொடங்கிய இடத்தில் முடிவதுதான் ஃபெர்பெக்ட் ஸ்கிரிப்ட் என்பார்கள் சினிமாவில். சொல்லப்போனால் வாழ்க்கையும் தொடங்கிய இடத்தில் முடிவதுதானே. தோனியின் கதையில் அவரே நாயகன், கதாசிரியர், இயக்குநர் எல்லாமும். அவரின் கிரிக்கெட் சகாப்தத்திற்கும் அப்படியொரு முடிவே பொருத்தமானதாய் இருக்கமுடியும். நம்புவோம்.