வங்காள கரை ஓரத்திலே, வாலாஜா ரோடு சிக்னலிலே, சேப்பாக்கம் கோட்டையிலே, ஆயிரம் டீம் தங்கும். இந்த கோட்டைக்குள்ளே தலைவன்னா தோனினு ஒரு சிங்கம். பட்டப்பகலில், நட்ட நடுரோட்டில் சி.எஸ்.கே-வை தொட்டுப்பார்ப்பது சாதாரண விஷயமல்ல. மைதானத்தின் ஹாட்னஸும் தோனியின் கூல்னஸும் ஒன்றாய் சேர்ந்தால் எதிரணி பஞ்சராவது உறுதி. சமாளித்ததா பஞ்சாப்?
நேற்று மதியம் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ருத்து - கான்வே ஜோடி வழக்கம்போல் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசவந்தார் சிறுவர் சிங். ஓவரின் 2வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் கெய்க்வாட். 2வது ஓவர் வீசவந்த ரபாடாவை அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து கெத்து காட்டினார் கான்வே.
சிறுவர் சிங்கின் 3வது ஓவரில், ருத்து இரண்டு பவுண்டரிகளும் கான்வே ஒரு பவுண்டரியும் விரட்டினர். கடைகுட்டி சிங்கத்தை சென்னைக்கு எதிராக ஏவிவிட்டார் தவன். கரண் வீசிய 4வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. ராகுல் சாஹரின் 5வது ஓவரில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை பறக்கவிட்டார் ருத்து. மீண்டும் சாம் கரண் வர, இம்முறை கான்வே இரு பவுண்டரிகளும், ருத்து ஒரு பவுண்டரி என அடித்து விரட்டினர். பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57/0 என சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது சி.எஸ்.கே
ராகுல் `பாம்பு' சாஹரின் 7வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சுழற்பந்து மட்டுமே செல்லுபடியாகிறது என கண்டறிந்த தவன், அடுத்த ஓவரை வீச ரஸாவை அழைத்தார். கான்வே ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார். மீண்டும் வந்தார் பாம்பு. கான்வே ஒரு சிக்ஸரை தொட்டுவிட்டார். ரஸாவின் 10வது ஓவரை தொடர்ந்து இரு பவுண்டரிகள் அடித்து துவக்கிவைத்தார் கான்வே. ஓவரின், 4வது பந்தில் பஞ்சாப் முதல் பழத்தை ருசித்தது. ருத்துவின் விக்கெட் காலி! ரஸா வீசிய பந்தைப் பிடித்து ஸ்டெம்பிங் அடித்தார் ருத்து. 10 ஓவர் முடிவில் 90/1 என நிதானமாக ஆடியது சென்னை.
ரபாடா வீசிய 11வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. 12வது ஓவர் வீசவந்த ரஸாவை, ஒரு சிக்ஸர் அடித்து கான்வேயிடம் அனுப்பிவைத்தார் டூபே. கான்வே ஒரு பவுண்டரி அடித்து ரஸாவை கூப்புக்கு அனுப்பினார். ரபாடாவின் 13வது ஓவரை சிக்ஸருடன் துவங்கினார் டூபே. பவுண்டரியுடன் முடித்தார் கான்வே. சிறுவர் சிங்கிடம் 14வது ஓவரை கொடுத்தார் தவன். பவுண்டரியுடன் வரவேற்ற டூபே, கடைசிப்பந்தில், `வரட்டா மாமே' என கிளம்பினார். 17 பந்துகளில் 28 ரன்கள் எனும் நல்ல கேமியோ முடிவுக்கு வந்தது. 15வது ஓவரை வீசினார் லிவிங்ஸ்டோன். கான்வே இரு பவுண்டரிகளும், மொயின் அலி ஒரு பவுண்டரியும் விளாசினர். ஹர்ப்ரீத் ப்ரார் எனும் சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருப்பதை, அடிக்கும் வெயிலில் மறந்தே விட்டார் தவன். 16வது ஓவரை வீச மீண்டும் கரணை அழைத்தார். மொயின் அலி, கான்வே இருவருக்கும் ஒரு பவுண்டரி. 16 ஓவர் முடிவில் 158/2 எனும் நிலையிலிருந்து சென்னை, வேகம் காட்ட வேண்டிய நேரம் வந்தது.
பாம்பு வீசிய 17வது ஓவரின் முதல் பந்திலேயே மொயின் அலி கிளம்பினார். மீண்டும் ஒரு ஸ்டெம்பிங் செய்தார் ஜித்தேஷ் சர்மா. அந்த ஓவரை தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்து விட்டுக்கொடுக்காமல் ஆடினார் கான்வே. அர்ஷ்தீப் சிங், 18வது ஓவரை அருமையாக வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடித்து ஆட வேண்டிய ஜடேஜா, பந்தை அழகாக கேப்பில் தட்ட முயற்சித்து கொண்டிருந்தார். சென்னை ரசிகர்கள் வெறியானார்கள். ரபாடாவின் 19வது ஓவரிலும், கடைசிப்பந்தில்தான் ஒரு பவுண்டரி வந்தது. சென்னையின் 200, கான்வேயின் 100 இரண்டுக்கும் ஒரே நேரத்தில் குறுக்கே வந்த கௌசிக்காக பேட்டை சுழற்றிக்கொண்டிருந்தார் ஜடேஜா.
கடைசி ஓவரில் இயல்பு நிலைக்கு திரும்பி, முதல் பந்தை முதன்முறையாக தூக்கி அடிக்க முயற்சிக்க டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனார் ஜட்டு. கடைக்குட்டி சிங்கத்தை சந்திக்க களமிறங்கியது தலைமை சிங்கம். ஓவரின் 4வது பந்து, கான்வே தூக்கியடித்த பந்தை டீப் மிட் விக்கெட்டில் லிவிங்ஸ்டோன் கேட்ச் எடுத்தார். தரையோடு தரையாக பிடித்த கேட்சில், பந்தும் தரையை தொட்டிருக்க நாட்-அவுட் வழங்கப்பட்டது. அதேநேரம், கான்வேவின் சதம் அடிக்கும் வாய்ப்பும் கை நழுவிப்போனது! கடைசி இரண்டு பந்துகள். தோனியின் கைகளில். பாயின்ட் மீது அப்பர் கட்டில் ஒரு சிக்ஸர், டீப் மிட் விக்கெட்டில் 88 மீட்டருக்கு ஒரு சிக்ஸர். இரண்டு சிக்ஸர்களை வெளுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார். அணியின் ஸ்கோர் 200-ஐ தொட்டது.
ராயுடுவுக்கு பதிலாக ஆகாஷ் சிங்கை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது சென்னை. ரபாடாவுக்கு பதில் ப்ரப்சிம்ரனை உள்ளே கொண்டுவந்தது பஞ்சாப். 201 என மொய் வைத்தால் வெற்றியை ருசிக்கலாம் எனும் வெறியுடன், ப்ரப்சிம்ரனும் தவனும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசினார் ஆகாஷ் சிங். முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விரட்டி அட்டகாசமாக தொடங்கினார் கேப்டன் தவன். தேஷ்பாண்டேவின் 2வது ஓவரில், ப்ரப்சிம்ரன் ஒரு சிக்ஸர் வெளுத்தார். ஆகாஷ் சிங்கின் 3வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ரன்களை அள்ளினார் தவன். தீக்ஷானாவை அழைத்து வந்தார் தோனி. ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய ப்ரப்சிம்ரன், பவுண்டரியுடன் முடித்தார். தேஷ்பாண்டேவுக்கு மீண்டும் ஒரு ஓவரை கொடுத்தார் தோனி. முதல் பந்து பவுண்டரிக்கு பறந்தாலும், அடுத்த பந்தில் ஷார்ட் தேர்டில் நின்றுகொண்டிருந்த பதீரனாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் தவன். தீக்ஷானா வீசிய 6வது ஓவரில், ப்ரப்சிம்ரன் ஒரு பவுண்டரி அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62/1 என அட்டகாசமாக தொடங்கியிருந்தது பஞ்சாப்.
ஜடேஜாவை அழைத்துவந்தார் தோனி. ஒரு பவுண்டரியை விரட்டினார் ப்ரப்சிம்ரன். மொயின் அலி வீசிய 8வது ஓவரில், இறங்கிவந்து ஒரு சிக்ஸரை தூக்கிவிட்டார் ப்ரப்சிம்ரன். ஜடேஜாவின் 9வது ஓவரில், ப்ரப்சிம்ரன் அவுட். இம்முறை ஸ்டெம்பிங் அடித்தது தோனி. மைதானமே அலறியது. ஆகாஷ் சிங் வீசிய 10வது ஓவரில், லிவிங்ஸ்டோன் ஒரு சிக்ஸர் அடிக்க, 10 ஓவர் முடிவில் 94/2 என விரட்டிவந்தது பஞ்சாப்.
11வது ஓவரில் டெய்டேவின் விக்கெட்டைத் தூக்கினார் ஜடேஜா. பந்து வீசிய அவரே, கேட்சையும் எடுத்தார். செல்லப்பிள்ளை பதீரனாவை இறக்கினார் தோனி. லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி அடித்தார். தீக்ஷானாவின் 13வது ஓவரில், 7 ரன்கள் கிடைத்தது. 14வது ஓவர் வீசிய பதீரனா பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் கொடுத்தார். தனது கடைசி ஓவரை வீசிய தீக்ஷானா, ஒரு பவுண்டரியுடன் சேர்த்து பத்து ரன்கள் கொடுத்தார். 10 ஓவர் முடிவில் 129/3 என சென்னை மீண்டும் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தது. 30 பந்துகளில் 72 ரன்கள் தேவை.
16வது ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. `நல்லாதானே போயிட்டு இருந்துச்சு' என சென்னை ரசிகர்கள் அதிர்ந்துபோனார்கள். அவர்கள் பயந்தது போலவே, முதல் இரண்டு பந்துகள் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் லிவிங்ஸ்டோன். அடுத்த பந்து, லெக் பைஸில் பவுண்டரி. அடுத்த பந்து மீண்டும் ஒரு சிக்ஸர். செய்த பாவங்களை, அடுத்த பந்தில் லிவிங்ஸ்டோனின் விக்கெட்டை எடுத்து கழுவினார் தேஷ்பாண்டே. ஒரே ஓவரில் 24 ரன்கள். ஜடேஜா வீசிய 17வது ஓவரில், 101 மீட்டர் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார் ஜித்தேஷ் சர்மா. சாம் கரணும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை வெளுத்தார்.
பதீரனாவின் 18வது ஓவரில் முதல் பந்திலேயே சாம் கரண் க்ளீன் போல்டு. அதே ஓவரில் ஜித்தேஷ் சர்மா ஒரு பவுண்டரி அடிக்க, 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை எனும் நிலை. மிக முக்கியமான 19வது ஓவரை வீச தேஷ்பாண்டேவை அழைத்தார் தோனி. சென்னை ரசிகர்கள் `வேணாம் தல' என கதறினார்கள். முதல் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஜித்தேஷ். 4வது பந்தை, லாங் ஆனில் தூக்கி அடித்தார் ஜித்தேஷ். சப்ஸ்டிட்யூட் ஃபீல்டரான ஷேக் ரசீத், பந்தைப் பிடித்து தடுமாறி பவுண்டரி லைன் அருகே விழுந்தார். அவரது உடல் எல்லைக்கோட்டை தொட்டுவிட்டதா என மூன்றாம் நடுவர் செக் செய்துவிட்டு `அவுட்' என தீர்ப்பு சொல்ல, பெருமூச்சு விட்டார்கள் சென்னை ரசிகர்கள். அடுத்து களமிறங்கிய ரஸா, முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 13 ரன்கள். இன்னும் 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை!
மைதானத்திற்குள் பி.பி மாத்திரை விற்பணை அமோகமாக நடந்தது. பதீரனா கடைசி ஓவரை வீசவந்தார். முதல் பந்து, ரஸாவுக்கு ஒரு சிங்கிள். இரண்டாவது பந்து லெக் பைஸில் இன்னொரு சிங்கிள். 3வது பந்து, ரன்கள் ஏதுமில்லை. 4வது பந்து, டீப் மிட் விக்கெட்டில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார்கள். 5வது பந்து, மீண்டும் 2 ரன்கள். 2 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர், 3 ரன்கள் எடுத்தால் வெற்றி. புத்திசாலித்தனமாக யோசித்து ஸ்கொயர் லெக் தலைக்கு மேல் பந்தை தூக்கியடித்து 3 ரன்களை அள்ளினார் ரஸா. 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை அதன் கோட்டையில் வைத்து வீழ்த்தியது பஞ்சாப். சிறப்பாக ஆடி தனது சதத்தை 8 ரன்களில் தவறவிட்டு, நாட் அவுட்டாக களத்தில் இருந்த கான்வேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.