கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியாக களம் கண்டது குஜராத் டைட்டன்ஸ். பெரிய அளவில் பேர்போன ஹிட்டர்கள் எல்லாம் இல்லை, அதிகளவு அனுபவம் வாய்ந்த வீரர்களும் இல்லை. இரண்டு மூன்று வீரர்களை தவிர அனைத்து வீரர்களும், இளம் வீரர்களாகவே தெரிந்தனர். இதனால் இந்த அணியெல்லாம் கோப்பையை நோக்கி செல்லுமா என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. “பார்ப்பதற்கே சப்ப அணியா இருக்கு, இது எப்படி பா கப்பெல்லாம் அடிக்கப்போகுது என்றும், ஏன் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த வேலை மும்பை இந்தியன்ஸ் அணிலயே இருந்திருக்கலாம் என்றும்” விமர்சனம் செய்யாத ரசிகர்களே இல்லை. ஆனால் இளம் கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளம்படை கொண்ட குஜராத் டைட்டன்ஸ் கடந்த ஐபிஎல்லில் நிகழ்த்தி காட்டியதெல்லாம் ஒரு மேஜிக் என்றே சொல்லலாம்.
இளம் வீரர்களை கொண்ட அணியாக தெரிந்தாலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு மேட்ச் வின்னர்களை வெளிக்கொண்டு வந்தது. ஒரு அணியாக சேர்ந்து வெற்றிக்காக போராடினால் எந்த வலுவான அணியையும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர் குஜராத் டைட்டன்ஸ் அணியினர். அதற்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் கடந்த ஐபிஎல்லில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸ் போட்டியை சொல்லலாம்.
196 ரன்கள் இலக்கை துரத்திய டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தாலும், அவரைத் தவிர அடுத்துவந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. கில், ஹர்திக் பாண்டியா, மில்லர் என அனைவரும் அவுட்டாகி வெளிவந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டிலேயே லெக்-பேடை கட்டியவாரே டென்சனோடு அமர்ந்திருப்பார். வெற்றிபெற கடைசி ஒரு ஓவருக்கு 22 ரன்கள் தேவை. அப்போதும் அனைத்து ரசிகர்களும் சன்ரைசர்ஸ் தான் வெற்றிபெற போகிறது என நினைத்திருந்திருப்பார்கள். ஏன் ஹர்திக் பாண்டியா கூட அதைத்தான் நினைத்திருப்பார்.
ஆனால் மாறாக ஆல்ரவுண்டர் திவேதியா முதல் பந்தில் ஒரு சிக்சரை விரட்ட, கடைசி 4 பந்துகளில் 3 சிக்சர்களை பறக்கவிடுவார் ரசீத் கான். கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்களை அடித்த இந்த ஜோடி டைட்டன்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். கேப்டன் ஹர்திக் பாண்டியா இப்போது என்ன நடந்தது போலான ரியாக்சனை கொடுத்து சிரித்தவாறே அமர்ந்திருப்பார். இந்த மேஜிக்கை தான் கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும் டைட்டன்ஸ் அணி வெளிப்படுத்தியது.
இலக்கை டிபஃண்ட் செய்வதை விட துரத்துவதில் வசதியாக இருக்கின்றனர் குஜராத் அணியினர். இதுவரை சேஸிங் செய்த 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றியை மட்டுமே சந்தித்துள்ளது டைட்டன்ஸ் அணி. மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியை சந்திந்திருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்த படை.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 3 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக ஒரு போட்டியிலும் சேஷஸிங்கில் வெற்றியை பெற்றுள்ளது குஜராத் அணி.
இதில் அதிக ரன் சேஷிங் போட்டிகளாக பார்த்தால் சிஎஸ்கே-வின் 170+ டோட்டலை 2 முறையும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 189, பஞ்சாப் கிங்ஸ் 190, சன்ரைசர்ஸ் 196 என பெரிய இலக்குகளை துரத்தி வெற்றிபெற்றுள்ளது. சேஸிங்கில் இவர்களின் ஆதிக்கம் ரிப்பீட் மோடிற்கு திரும்பியுள்ள நிலையில், கோப்பைக்கான ரேஸில் நாங்களும் இருக்கிறோம் என்று இந்த தொடரிலும் காட்டியுள்ளது குஜராத் டைட்டன்ஸ்.