ஷ்பாஃலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ட்விட்டர்
T20

வங்கதேச டி20 தொடர்| ஹாட்ரிக் வெற்றி.. சத்தமேயில்லாமல் கெத்துகாட்டிய இந்திய மகளிர் அணி!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று முன்னிலையில் இருப்பதுடன் தொடரையும் வென்றுள்ளது.

Prakash J

ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் டக்வொர்த் லீக் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய மகளிர் அணி, வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே 3வது போட்டி நேற்று (மே 2) நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை தில்ரா அக்தர் 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிக்க: நியாயமா இது! ரன் ஓடாமல் ’திரும்பிப் போ’ எனக் கத்திய தோனி.. நூலிழையில் தப்பித்த மிட்செல்! #ViralVideo

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனாவும், ஷபாஃலி வர்மாவும் வங்கதேச பந்துவீச்சை ஆரம்பம் முதலே சிதற அடித்தனர். அவர்களுடைய அதிரடியாலும் பின்னர் வந்த வீராங்கனைகளாலும் இந்திய அணி 18.3 ஓவர்களிலேயே 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியில் ஷபாஃலி வர்மா 51 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 47 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான கடைசி இரண்டு டி20 போட்டிகள் மே 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இதையும் படிக்க: 2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!