india team x page
T20

IND W V SA W| 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.. சாதனை பட்டியலில் இணைந்த ஸ்மிருதி மந்தனா!

Prakash J

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணி, நம் நாட்டு மகளிர் அணியுடன் கூடிய கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. அடுத்து ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வென்றது.

தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டி கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில், 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, 3வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை முதல் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து அந்த அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது. என்றாலும் தாஷ்மின் பிரிட்ஸ் (20), மரிஷானே காப் (10), அனேக் போஷ் (17) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்ற வீராங்கனைகள் எல்லாம் ஒற்றை ரன் இலக்கத்தைத் தாண்டவில்லை. இதனால் அந்த அணி 17.1 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய பூஜா வஸ்டிராகர் 4 விக்கெட்களையும் ராதா யாதவ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதில் 3 ஓவர்கள் வீசிய ராதா யாதவ் அதில் 1 மெய்டன் ஓவருடன் வெறும் 6 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார்.

இதையும் படிக்க: INDIA Head Coach நியமனம்... கிரிக்கெட் வீரர் டு முன்னாள் பாஜக எம்பி.. யார் இந்த கவுதம் கம்பீர்?

இதைத்தொடர்ந்து மிகவும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இதனால் இந்திய அணி 10.5 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகளும் 2 சிகஸ்ர்களும் அடக்கம். மேலும், இந்த அரைசதம் மூலம் டி20 மகளிர் போட்டிகளில் அதிக அரைசதம் (24) அடித்த வீராங்கனைகள் பட்டியலிலும் 3வது இடம் பிடித்தார்.

முதல் இரண்டு இடங்களில் நியூசிலாந்து வீராங்கனை சூசி பேட்ஸ் (29), ஆஸ்திரேலியா வீராங்கனை பேத் மூனி (25) ஆகியோர் உள்ளனர். அவருக்குத் துணையாக ஆடிய ஷபாலி வர்மாவும் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையும் படிக்க: ”எனது கிரிக்கெட் மனைவி..” - ராகுல் டிராவிட் குறித்து உருக்கமான பதிவிட்ட ரோகித் சர்மா!