INDvSA x page
T20

INDvSA|இந்தியாவுக்குப் பதிலடி.. இருவர் சதம்; கடைசி வரை திக் திக்.. நூலிழையில் தென்னாப்ரிக்கா தோல்வி!

Prakash J

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் இரு அணிகளுக்கு இடையே கடந்த ஜூன் 16ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (ஜூன் 19) பெங்களூருவில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ஷபாலி 20 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து தயாளன் ஹேமலதா களமிறங்கினார். ஆனால் அவரும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுர், மந்தனாவுக்கு கம்பெனி கொடுக்க ஆரம்பித்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், மேலும் விக்கெட்கள் விழாதவண்ணம் பார்த்துக்கொண்டனர்.

இதையும் படிக்க: ஊழியர்களுக்கு குறைவான சம்பளம்; வளர்ப்பு பிராணிகளுக்கு அதிக செலவு.. நீதிமன்றத்தில் ஹிந்துஜா குடும்பம்

தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, இந்தப் போட்டியிலும் சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 7வது சதம் இதுவாகும். மேலும், இந்த தொடரில் இரண்டு சதங்களைப் பதிவு செய்த மந்தனா, ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்திருந்த (7) இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜின் சாதனையை சமன் செய்தார். இறுதியில் அவர், 120 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.

மறுமுனையில் கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுரும் சதமடித்தார். குறிப்பாக கடைசி ஓவரில் சதம் விளாச 11 ரன்கள் தேவை என்ற நிலையில் 3வது பந்தில் பவுண்டரி, 4வது பந்தில் சிக்ஸர், 5வது பந்தில் பவுண்டரி அடித்து அசத்தலாக சதத்தை பதிவு செய்தார். அவர் 88 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 103 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தார். இவர்களின் அதிரடியால் இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிக்க: உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் செத்துப்போன தவளை.. உரிய பதிலளிக்காத நிறுவனம்.. புகாரளித்த நபர்!

பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் சோடை போகவில்லை. இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது. அதிலும் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய கேப்டன் லாரா வால்வாரட் மைதானத்தில் நாலாபுறம் பந்துகளைச் சிதறடித்தார். மந்தனாவின் சரவெடியைப் போலவே அவரது ஆட்டமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் 3 விக்கெட்களை அவ்வணி இழந்திருந்தாலும் பின்னர் களமிறங்கிய மரிசானே ஹாப், கேப்டன் லாராவுக்கு பக்கபலமாக நின்று ஆடினார். ஒருகட்டத்தில் இந்திய அணியைப்போலவே இவர்களும் சதம் அடித்து அசத்தினர்.

மரிசானே 94 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆனால், பின்னர் வந்த வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடவில்லை. அதேநேரத்தில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லாரா வால்வாரட், 135 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்ற முயன்றபோதிலும் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், வஸ்தராகர் வீசிய முதல் பந்தில் சிங்கில், இரண்டாவது பந்தில் பவுண்டரி என 5 ரன்கள் கிடைத்துவிட்டது. அதனால், 4 பந்துகளுக்கு வெறும் 6 ரன்கள் என்ற நிலை. அதனால் எளிதில் தென்னாப்ரிக்கா வென்றுவிடும் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்கும். அந்த இடத்தில்தான் மேஜிக் செய்தார் வஸ்தராகர். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சாய்த்தார். 2 பந்துகளில் 6 ரன்கள் என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. இறுதிவரை போட்டியில் திக் திக் என்ற நிலைதான்.

இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து 4 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 2-0 புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன் தொடரையும் வென்றுள்ளது. என்னதான் மந்தனா, கவுர் சதம் விளாசி இருந்தாலும் வஸ்தராகரின் கடைசி ஓவர் தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிக்க: நடந்துசென்ற இளம்பெண்.. கொள்ளையடிக்க முற்பட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. #ViralVideo