ஜெய்ஸ்வால், ஹர்திக் pt web
T20

“இதுவே எங்களது ஆட்டம்.. இதைத்தான் விரும்புகிறோம்” - இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்திய அணி!

Angeshwar G

டெத் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா

இந்தியா இலங்கை மோதிய இரண்டாவது டி20 போட்டி பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர்.

நிசங்கா நிலையான தொடக்கத்தைக் கொடுத்தாலும் விக்கெட் கீப்பரான குசால் மெண்டீஸ் 10 ரன்களில் வெளியேறினார். நடப்பு தொடரின் இரு டி20 போட்டிகளிலும் அர்ஷ்தீப் சிங்கே குசால் மெண்டீஸ் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்பின்னர் நிசங்கா உடன் இணைந்த பெரேரா பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்த்தார். பின் வந்த வீரர்கள் சோபிக்காத நிலையில், இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ரன்களை எடுத்தது.

பவர்ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் இலங்கை அணியின் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், டெத் ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கை அணியில், அதிகபட்சமாக பதும் நிசங்கா 32 ரன்களும், குஷல் பெரேரா 53 ரன்களும் அடித்தனர். இந்திய அணியில் பிஷ்னோய் 3 விக்கெட்களையும், அக்சர், அர்ஷ்தீப், ஹர்திக் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

குறுக்கிட்ட மழை.. குறைக்கப்பட்ட ஆட்டம்

162 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கிய போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டி20 போட்டிகளில் சுழலுக்கு எதிராக சஞ்சு சாம்சன் திணறியபடியேதான் இருந்துள்ளார். சுழலுக்கு எதிராக 132 பந்துகளை எதிர்க்கொண்டு 156 ரன்களை மட்டுமே எடுத்து 10 முறை தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்த சூர்யக்குமார் யாதவ் அதிரடியாக ஆடி வழக்கம் போல் தனது பாணியில் ரன்களைச் சேர்த்தார்.

பதிரானா வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸ் அடித்து தொடங்கிய அவர், அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். இறுதியில் ஹர்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். முன்னதாக ஆடிய ஜெய்ஸ்வால் 30 ரன்களும், சூர்ய குமார் 26 ரன்களும் சேர்த்திருந்தனர். 6.3 ஓவர்களில் 81 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரவி பிஷ்னாய் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இதுவே எங்களது ஆட்டம் - சூர்யா

போட்டி முடிந்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா, “டெத் ஓவர்களில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் ஏமாற்றம் அளிக்கிறது. மிடில் மற்றும் லோயர் பேட்டிங் ஆர்டர்களில் நாங்கள் முன்னேற வேண்டும். களத்தில் பந்து பழையதாகும்போது, பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கும். தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் 15 முதல் 18 ரன்கள் பின் தங்கி இருந்தோம்” என தெரிவித்திருந்தார்.

போட்டி முடிந்து பேசிய சூர்யகுமார் யாதவ், “இது மாதிரியான ஆட்டத்தைத்தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். எளிய இலக்கு அல்லது கடினமான இலக்கைத் துரத்தினாலும், இந்த டெம்ப்ளேட்டில்தான் நாங்கள் ஆட விரும்புகிறோம். மழை எங்களுக்கு உதவியது.

எங்கள் அணியின் பேட்டர்கள் பேட் செய்த விதம் அருமையாக இருந்தது. கடினமான சூழ்நிலைகளிலும், வீரர்கள் தங்களது திறமைகளை காட்டியவிதம் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.