ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, ரேனுகா சிங் pt web
T20

மகளிர் டி20 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி|இந்தியா பேட்டிங் தேர்வு..இமாலய சாதனை படைக்க இருக்கும் மந்தனா!

மகளிர் டி20 ஆசியக்கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

Angeshwar G

இலங்கை தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 மகளிர் ஆசியக்கோப்பை நடைபெறுகிறது. இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று கெத்தாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோத உள்ளன.

ஸ்மிருதி மந்தனா

இதுவரை 8 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடர்கள் நடந்துள்ளன. இதில் 8 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள இந்திய அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேசமயத்தில், 9 ஆவது முறையாக நடக்கும் தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மட்டும் 5 முறை இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. ஆனால், ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100ஆவது டி20 போட்டியில் ஜெமிமா

இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் சில சாதனைகள் படைக்க இருக்கின்றனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 100 ஆவது சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவிற்காக விளையாட உள்ளார். சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா 3500 ரன்களைக் கடக்க இன்னும் 67 ரன்களே அவருக்குத் தேவை. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கர் -க்கு இன்னும் 85 ரன்கள் தேவை. அதுமட்டுமின்றி ஸ்மிருதி மந்தனா 3500 ரன்களைக் கடந்தால் 3500 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை எனும் சிறப்பினையும் பெறுவார்.

சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிகரன்களை அடித்த வீராங்கனையாக சூசி பேட்ஸ் உள்ளார். 159 இன்னிங்ஸ்களில் விளையாடி 4348 ரன்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடத்தில் இந்திய வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா உள்ளார். இவர் 134 இன்னிங்ஸ்களில் 3433 ரன்களை எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஹர்மன்ப்ரீத் கர் உள்ளார். இவர் 152 இன்னிங்ஸ்களில் 3415 ரன்களை எடுத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.