india-australia clash in T20 WC Cricinfo
T20

8 பவுலர்கள் வைத்து தோற்ற இந்தியா; 86ரன்னில் சுருண்ட ஆஸி! டி20 WC-ல் IND-AUS மோதிய சிறந்த 5போட்டிகள்!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, 7 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவிருக்கிறது.

ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக வந்து நிற்கும் ஆஸ்திரேலியா அணி, இந்தமுறை சூப்பர் 8 சுற்றில் மோதவிருக்கிறது. டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் 5 முறை மோதிய நிலையில், அதில் இந்தியா 3 முறையும் ஆஸ்திரேலியா 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளின் மோதலில் 2007 டி20 உலகக்கோப்பை ஒன்று மட்டுமே கடைசிவரை விறுவிறுப்பாக சென்ற போட்டியாக அமைந்தது. மற்ற 4 போட்டிகளும் இரண்டு அணிக்கும் ஒருபக்க போட்டியாகவே அமைந்தது.

rohit - cummins

இந்த இரண்டு அணிகளும் டி20 உலகக்கோப்பையில் பல மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளன..

யுவராஜ் சிங் பேட்டிங் மேஜிக்கால் வென்ற இந்தியா - 2007

2007-ல் முதல்முறையாக டி20 உலகக்கோப்பை அறிமுகமான போது, அறிவிக்கப்பட்ட அனைத்து அணிகளை விடவும் “கில்கிறிஸ்ட், ஹைடன், மைக் ஹஸ்ஸி, மைக்கேல் கிளார்க், சைமண்ட்ஸ், பிரெட் லீ, நாதன் பிராக்கன், மிட்செல் ஜான்சன்” முதலிய வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலியா அணியே பலம்வாய்ந்த அணியாக வலம்வந்தது.

yuvraj

இப்படியான பலமான அணியை எதிர்த்து அரையிறுதியில் மோதியது அனுபவமில்லாத கேப்டனான தோனி தலைமையிலான இந்திய அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 8 ஓவர் முடிவில் 41 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையிலேயே இருந்தது. அதற்குபிறகு 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய யுவராஜ் 30 பந்துகளில் 70 ரன்களை துவம்சம் செய்து இந்தியாவை 188 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். அதில் அவர் மட்டும் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசினார்.

ind vs aus

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இறுதிவரை போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியான பேட்டிங்கால் மிரட்டிய யுவராஜ் ஆட்டமும், அபாரமாக பந்துவீசி தொடக்க வீரர்கள் கில்கிறிஸ் மற்றும் ஹைடன் இருவரின் ஸ்டம்புகளையும் தகர்ந்தெறிந்த ஸ்ரீசாந்த் பவுலிங்கும் இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்கமுடியாத ஒன்றாக இருந்துவருகிறது.

வீணான ரோகித் சர்மா போராட்டம்.. பதிலடி கொடுத்த ஆஸி! - 2010

2007 உலகக்கோப்பையில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2010-ல் ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர்கள் ஷேன் வாட்சன் 54 ரன்கள், டேவிட் வார்னர் 72 ரன்கள், டேவிட் ஹஸ்ஸி 35 ரன்கள் என துவம்சம் செய்தனர். வார்னரின் அதிரடியால் 185 ரன்களை குவித்தது ஆஸி.

david warner

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மாவை தவிர வேறுஎந்த இந்திய வீரரும் சோபிக்கவில்லை. 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஹிட்மேன் 79 ரன்களுடன் நாட் அவுட்டில் களத்திலிருந்தார், ஆனால் மற்ற அனைத்து பேட்ஸ்மேனும் ஓரிலக்க ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

rohit sharma

ஒருவர் ரோகித்துடன் கைக்கோர்த்திருந்தால் அந்த போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றிருக்கும், மாறாக 17.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்னில் படுதோல்வியடைந்தது இந்திய அணி. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8 பவுலர்களை பயன்படுத்திய இந்தியா.. ஆஸி வெறியாட்டம்! - 2012

ஆஸ்திரேலியா அணி முழுமையாக டாமினேட் செய்து வென்ற ஒரு ஆட்டமாக இந்த உலகக்கோப்பை போட்டி அமைந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்குபிறகு ஆடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவுசெய்தது.

shane watson

தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 133 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்த இந்திய அணியில், “ரவிச்சந்திரன் அஸ்வின், ஜகீர் கான், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, இர்ஃபான் பதான்” முதலிய ஸ்டார் பவுலர்கள் 5 பேரும், “விராட் கோலி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா” முதலிய பார்ட் டைம் பவுலர் 3 பேரும் என மொத்தம் 8 பவுலர்களை பயன்படுத்தியது இந்திய அணி. ஆனால் 7 சிக்சர்களை பறக்கவிட்டு 72 ரன்கள் அடித்த வாட்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

watson - warner

இப்படியான ஒரு பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு இதுபோலான ஒரு தோல்வியை இந்தியா சந்திக்கும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

86 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா - 2014

தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பையில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவை 86 ரன்னில் சுருட்டி எறிந்த இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது.

ashwin

முதலில் ஆடிய இந்தியா யுவராஜ் சிங்கின் அதிரடியான 60 ரன்கள் ஆட்டத்தால் 159 ரன்கள் அடித்தது. அதற்குபிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சுழல் பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 86 ரன்னில் ஆல்வுட்டாக்கினார். 3 வீரர்களை தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் ஓரிலக்க ரன்களில் வெளியேறினர். 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விராட் கோலியின் மேஜிக்கால் வென்ற இந்தியா - 2016

49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இருந்த இந்திய அணியை தனியொரு ஆளாக மீட்டு எடுத்துவந்த விராட் கோலி வெற்றியை தேடித்தந்தார். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 160 ரன்கள் அடித்தது, அதற்குபிறகு ஆடிய இந்திய அணி 7.4 ஓவரில் 49 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

virat kohli

அதற்குபிறகு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 82 ரன்கள் அடித்தார். நாதன் குல்டர் நைல் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டிய விராட் கோலி ஆஸ்திரேலியாவை மிரட்டிவிட்டார். முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

virat kohli

2016-க்கு பிறகு 7 வருடங்களுக்கு பின் இவ்விரு அணிகள் மோதும் நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோலிவியடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்திய அணிக்கு நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டி அமைந்துள்ளது.