ind vs sl pt web
T20

மிடில் ஆர்டரை மொத்தமாக காலி செய்த பதிரானா... சொதப்பிய பாண்டியா, ரிங்கு, பராங்..

இலங்கை இந்தியா அணிகள் மோதிய டி20ன் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 213 ரன்களைக் குவித்தது.

Angeshwar G

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். ஓவருக்கு 2 பவுண்டரிகள் கிடைத்துக் கொண்டே இருந்தன. பவர் ப்ளேவிலேயே இந்திய அணி 74 ரன்களை எடுத்தது.

பவர் ப்ளேவின் இறுதிப் பந்தில் சுப்மன் கில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அவர் 34 ரன்களை எடுத்திருந்தார். பவர் ப்ளேவின் இறுதிப் பந்தில் சுப்மன் கில் வெளியேறினார் என்றால், அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் வெளியேறினார். 21 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தார்.

பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்த் ஆட்டத்தை கில், ஜெய்ஸ்வால் விட்ட இடத்தில் இருந்தே கொண்டு சென்றனர். சூர்யகுமார் தொடக்கத்தில் நிதானமாக தொடங்கினாலும், பின்னர் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தார். பந்த் சிங்கிள்களை எடுத்து அவருக்கு வாய்ப்புக் கொடுத்த நிலையில், அதை கச்சிதமாக உபயோகித்தார் சூர்யா. 26 பந்துகளில் 58 ரன்களை அடித்த நிலையில் அவர் வெளியேறினார்.

பின் வந்த பராங், பாண்டியா நிலைக்காத நிலையில், பந்தும் 49 ரன்களுக்கு வெளியேறினார். எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 1 ரன்னில் வெளியேற இன்னிங்ஸை சிக்சர் அடித்து முடித்து வைத்தார் அக்சர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 213 ரன்களை எடுத்திருந்தது.

இன்னிங்ஸின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். இலங்கை அணியில் பந்துவீச்சைப் பொறுத்தவரை பதிரானா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்தாலும், 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். சூர்யகுமார் யாதவ், பாண்டியா, பந்த், ரியான் பராங் என மிடில் ஆர்டரை மொத்தமாக காலி செய்தாலும் இந்திய அணி 213 ரன்களைக் குவித்துவிட்டது.