suryakumar yadav cricinfo
T20

‘இதனால தான் நீங்க ஸ்பெசல்..’! இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றிய SKY! ஆப்கானுக்கு 182 இலக்கு!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான லீக் போட்டிகளை கடந்து முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. லீக் போட்டி முழுவதும் 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், அதில் “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா” முதலிய 8 அணிகள் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

லீக் போட்டிகள் முழுவதும் மழையின் குறுக்கீடு காரணமாகவும், லோ ஸ்கோரிங் மேட்ச் மற்றும் சிறிய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் காரணமாகவும், உண்மையில் உலக்க்கோப்பை தான் நடக்கிறதா என தோன்றுமளவு சற்று மந்தமாகவே இருந்துவந்தது.

wi vs eng

ஆனால் தற்போது சாம்பியன் அணிகளுக்கு இடையேயான மோதல்கள் என்பதால் சூப்பர் 8 சுற்றுகள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற குரூப் 2 அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்தும், அமெரிக்காவை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றன.

இந்நிலையில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

அபாரமாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான்.. திணறிய இந்தியா!

பார்படாஸில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கு எதிராகவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் பவுலர்கள் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கண்ட்ரோல் செய்தனர். ரோகித் 13 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேற, விராட் கோலி 21 பந்துக்கு 21 ரன்கள் என ஒரேஒரு சிக்சர் அடித்து வெளியேறினார்.

rashid khan

ரன்கள் வராமல் திணறிய போது களமிறங்கிய ரிஷப் பண்ட் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து மிரட்ட, அவரை அதிக நேரம் நிலைக்க விடாத ரசீத் கான் ரிஷப் பண்ட்டை 20 ரன்னில் வெளியேற்றினார். பின்னர் வந்த ஷிவம் துபேவும் ஒரு சிக்சருடன் வெளியேற 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

சரிவிலிருந்து காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்!

பெரிய ஸ்கோரை இந்திய அணி எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் போட்டியை பார்க்க, சரியான நேரத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 28 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அசத்தினார். உடன் ஹர்திக் பாண்டியாவும் தன்னுடைய பங்கிற்கு 32 ரன்கள் அடிக்க, இறுதியாக வந்த அக்சர் பட்டேல் 6 பந்துக்கு 12 ரன்கள் அடித்து மிரட்டினார்.

மிடில் ஆர்டர் வீரர்களின் அசத்தலான காம்போவால் 150 ரன்கள் கூட வருமா என்றிருந்த போட்டியில் இந்திய அணி 181 ரன்களை எடுத்துள்ளது. சிறந்த பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணி பவர் பிளேவின் 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பும்ரா 2, அக்சர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.