தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி டர்பனில் நடைபெற்ற நிலையில், 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 50 பந்தில் 107 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை 202 ரன்கள் டோட்டலுக்கு எடுத்துச்சென்றார். அதன்பிறகு விளையாடிய தென்னாப்பிரிக்கா 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி தென்னாப்பிரிக்காவின் க்கெபர்ஹா பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றுவருகிறது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. கடந்த போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சனை 0 ரன்னில் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்த யான்சன் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அதற்கு பிறகு வீசிய அனைத்து பவுலர்களும் டைட்டாக பந்துவீச, ரன்களை சேர்க்க முயன்ற இந்திய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
சஞ்சு சாம்சன் 0, அபிஷேக் சர்மா 4 மற்றும் சூர்யகுமார் 4 ரன்கள் என வெளியேற அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டிய அக்சர் பட்டேல் ரன்களை எடுத்துவந்தார். ஆனால் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அபாரமான ஃபீல்டிங் மற்றும் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டை எடுத்துவந்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை இழுத்து பிடித்தது.
ஹர்திக் பாண்டியா இறுதிவரை நிலைத்து நின்றாலும் அவரால் 45 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென்னாப்பிரிக்கா பவுலர்களில் ஒருவர் கூட 7 ரன்கள் என்ற எகானமியை எட்டாமல் பந்துவீசினர். 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.