ஹர்மன்ப்ரீத் கவுர் web
T20

”100 போட்டியில் ஆடியிருந்தாலும் ZERO அனுபவம்” - ஸ்மிரிதி உள்ளிட்ட மூத்த வீரர்களை சாடிய இந்திய வீரர்!

Rishan Vengai

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பான தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணியும் 4 லீக் போட்டிகளில் விளையாடின. இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

women's t20 world cup

இந்நிலையில் இந்தியா இருக்கும் பிரிவில் ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளிலும் வென்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெறவேண்டுமானால் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். இல்லையென்றால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று, இந்தியா தொடரிலிருந்து வெளியேறும்.

kaur

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அடைந்த தோல்விக்கு மூத்தவீரர்களை குற்றஞ்சாட்டிய சக இந்திய வீரரான பூனம் ரவுத், 100 போட்டிகளில் விளையாடுவது முக்கியமில்லை, அந்த அனுபவத்தை முக்கியமான போட்டிகளில் கொண்டுவரவேண்டும் என விமர்சித்துள்ளார்.

100 matches experience = 0 experience..

இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டிய போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்தியாவிற்கான வாய்ப்பு பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியின் முடிவை பொறுத்து அமையவிருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஹர்மன்ப்ரீத் மற்றும் தீப்திஷர்மா இருவரும் விளையாடிய போது இந்தியா எளிதில் இலக்கை எட்டிவிடும் என்றே தோன்றியது. ஆனால் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு பிறகு தீப்தி ஷர்மா வெளியேறியதும், அதிரடி வீரர் ரிச்சா கோஸும் ரன் அவுட்டில் வெளியேறியது போட்டியை தலைகீழாக மாற்றியது. பின்னர் என்னதான் போராடினாலும் இந்தியாவால் வெற்றியைபெற முடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்காக மூத்தவீரர்களை சாடிய சகவீரரான பூனம் ரவுத், “100 போட்டிகளில் விளையாடி அனுபத்தை பெற்றபிறகு, அணிக்கு தேவையான முக்கியமான போட்டியில் அதை பயன்படுத்தவில்லை என்றால், அந்த அனுவபமானது பூஜ்ஜியமாக மாறிவிடுகிறது” என்று விமர்சித்துள்ளார். இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத், ஸ்மிரிதி, தீப்தி ஷர்மா முதலிய மூத்தவீரர்கள் 100 டி20 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.

பூனம் ரவுத்

பூனம் ரவுத் நான்கு டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், நான்கு சதங்கள் மற்றும் 15 அரை சதங்கள் உட்பட வடிவங்களில் 3282 ரன்களை அடித்துள்ளார். பகுதி நேர ஆஃப் ஸ்பின்னரான அவர் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவர் தனது கடைசி ஆட்டத்தை 2021-ல் இந்தியாவுக்காக விளையாடினார்.