Ind vs Aus pt desk
T20

பெண்கள் டி20: இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி... வலுக்கும் விமர்சனங்கள்

ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. பேட்டிங், ஃபீல்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலுமே ஒருசில வீராங்கனைகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

Viyan

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் போட்டியில் வென்று சரித்திரம் படைத்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளையும் தோற்று வைட் வாஷ் ஆனது. இதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது இந்திய அணி. இரண்டாவது போட்டி மும்பை DY பாடில் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Ind

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலீஸா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் எந்த மாற்றங்களும் செய்யாமல் அதே அணியைக் களமிறக்கின. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாறவே செய்தது. முதல் போட்டியில் நன்றாக ஆடியிருந்த ஷெஃபாலி, ஸ்மிரிதி இணை இம்முறை நல்ல தொடக்கம் கொடுக்கத் தவறியது. 6 பந்துகளில் ஒரேயொரு ரன் மட்டுமே எடுத்திருந்த ஷெஃபாலி வர்மா, கிம் கார்த் வீசிய இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார். தன்னுடைய அடுத்த ஓவரில் ஜெமிமா ராட்ரீக்ஸையும் வெளியேற்றி இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தார் கார்த்.

இந்திய வீராங்கனைகளால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய பௌலிங்கை சமாளித்து நல்லபடியாக ரன் சேர்க்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரின் ஃபார்ம் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தப் போட்டியில் 12 ரன்கள் அடித்திருந்த அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 10.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்தியா. அதன்பிறகு ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரிச்சா கோஷ் 23 ரன்களிலும், தீப்தி ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா.

Aus

அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி, அலீஸா ஹீலி இருவரும் இணைந்து நிதானமான தொடக்கம் கொடுத்தனர். 7 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்த அந்தக் கூட்டணியை எட்டாவது ஓவரின் முதல் பந்தில் உடைத்தார் தீப்தி ஷர்மா. அந்த ஓவரில் அலீஸா ஹீலியை வெளியேற்றிய அவர், தன் அடுத்த ஓவரிலேயே பெத் மூனியையும் அவுட் ஆக்கினார். அவ்வப்போது இந்திய அணி விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் எல்லிஸ் பெர்ரி உறுதியாக நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். தன்னுடைய 300வது சர்வதேச போட்டியில் விளையாடிய பெர்ரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 34 ரன்கள் எடுத்தார். 19வது ஓவரின் கடைசி பந்தில் ஷ்ரேயங்கா பாடில் ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் பெர்ரி. இதன்மூலம் இந்தத் தொடர் 1-1 என சமனிலையை அடைந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி என்பது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்றாலும் இந்திய அணியின் இந்த செயல்பாடு பல வகைகளில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக, கடைசி கட்டத்தில் நல்ல படியாக இன்னிங்ஸை இந்திய அணியால் முடிக்க முடிவதில்லை. தீப்தி ஷர்மா போன்ற ஒரு சீனியர் வீராங்கனையால் டெத் ஓவர்களில் நல்ல ரன்ரேட்டில் ஸ்கோர் செய்ய முடிவதில்லை. இந்தப் போட்டியில் கூட கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியால் 28 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சமீப காலமாக பூஜா வஸ்த்ரகரை மட்டுமே நம்பவேண்டியதாக இருக்கிறது. இது இந்திய அணி அடுத்த கட்டத்தை அடைய விடாமல் இழுத்துப் பிடிக்கிறது.

Aus vs Ind

அதேபோல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களாலும் ஒத்துழைப்பு கொடுக்காத ஆடுகளங்களில் தாக்கம் ஏற்படுத்த முடிவதில்லை. இந்தப் போட்டியில் ரேணுகா சிங், திதாஸ் சாது இருவராலும் விக்கெட் வீழ்த்தவே முடியவில்லை. ஸ்விங் ஆகாத ஆடுகளங்களில் அவர்களால் எதுவும் செய்ய முடியாததை குறிப்பிட்டு இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

அடுத்ததாக இந்திய ஃபீல்டிங். போட்டிக்கு குறைந்தபட்சம் ஒரு கேட்சாவது டிராப் செய்கிறார்கள். இந்தப் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஷ்ரேயாங்கா பாடில் ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதைக் குறிப்பிட்டார். அது சரியாக அடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று கூறினார். ஆனால் இப்போது இதுவே பெருமளவு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஐந்து போட்டிகளே விளையாடியிருக்கும் ஒரு இளம் வீராங்கனையை ஹர்மன்ப்ரீத் நேரடியாக விமர்சித்திருப்பதை அனைவருமே கடுமையாக சாடிவருகின்றனர்.

Ind

சமீப காலமாக ஹர்மன் பேசுவது, நடந்துகொள்வது என தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இது இன்னும் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவருகிறது. அனைத்துக்கும் மேலாக அவர் பேட்டிங் ஃபார்ம் பாதாளம் தொட்டுவிட்டது. அப்படியிருக்கையில் அவர் எப்படி ஒரு இளம் வீராங்கனையை குறை சொல்லலாம் என்று ரசிகர்கள் பொங்கியிருக்கிறார்கள். ஸ்மிரிதி, ஷெஃபாலி, ஹர்மன், தீப்தி என இந்திய அணியின் அனைத்து சீனியர் வீராங்கனைகளுமே தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருவது அதிர்ச்சிகரமாக விஷயமாக இருக்கிறது.