aus vs ind cricinfo
T20

மகளிர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் மீண்டும் ஆஸ்திரேலியா.. அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா தோல்வி!

மகளிர் டி20 உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற வேண்டிய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது.

Rishan Vengai

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9-வது பதிப்பானது அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 3 முதல் அக்டோபர் 20 வரை நடைபெறவிருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில், குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை முதலிய 5 அணிகளும், குரூப் பி-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா முதலிய 5 அணிகளும் இடம்பிடித்துள்ளன.

ind vs pak

இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட இந்திய மகளிர் அணி வெல்லாத நிலையில், இந்தமுறை அதிக நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த இந்திய அணி சொதப்பியது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்தது இந்தியா.

இந்நிலையில் கடைசி மற்றும் 4வது லீக் போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறலாம் என்ற நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது இந்தியா.

அரையிறுதி தகுதிக்கான போட்டியில் இந்தியா தோல்வி..

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் அனைத்து வீரர்களுமே தங்களுடைய பங்களிப்பை வழங்கிய நிலையில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் சிறப்பாக தொடங்கினார். ஆனால் மறுமுனையில் 12 பந்துக்கு 6 ரன்கள் என தடுமாறிய ஸ்மிரிதி அழுத்தம் கூட்டினார். அழுத்தத்தில் அடித்துக்கொண்டிருந்த ஷபாலியும் அவுட்டாகி வெளியேற, அடுத்தடுத்து ஸ்மிரிதி மற்றும் ஜெமிமா இருவரும் அவுட்டாகி வெளியேறினர்.

shafali

4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஹவுர் மற்றும் தீப்தி ஷர்மா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, இந்திய அணி வெற்றியின் பாதைக்கு திரும்பியது. ஆனால் முக்கியமான நேரத்தில் தீப்தி சர்மாவை வெளியேற்றிய ஆஸ்திரேலியா, அடுத்துவந்த ரிச்சா கோஸையும் ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

kaur

கடைசி 4 ஓவருக்கு 41 ரன்கள் தேவை என்ற இடத்தில் வெறும் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா அணி, இந்தியாவின் கைகளில் இருந்து போட்டியை தங்கள் பக்கம் இழுத்தது. பின்னர் ஒவ்வொரு ஓவருக்கும் 14 ரன்கள் தேவை என போட்டி மாற, இறுதி ஓவரில் 14 ரன்கள் அடிக்கும் முயற்சியில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

kaur

இதன்மூலம் 4 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா ஒரு தோல்வி கூட இல்லாமல் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.