இந்திய அணி உலகக்கோப்பை வென்ற கையுடன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி தொடங்கும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய இளம் அணி ஏற்கெனவே இலங்கை சென்றுவிட்டது. புதிய பயிற்சியாளராக கம்பீர், புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் இந்த டி20 தொடர் பெற்றுள்ளது.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பை வென்றிருந்தது. அதேசமயத்தில் இலங்கை அணி எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் வெளியேறியது. ஆனாலும் கூட, இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடருக்கு புதிய அணியை கட்டமைப்பதற்கான தொடக்கம் என்பதால், இருதரப்புக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இரு அணிகளும் விளையாடும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. பல்லேகலேயில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இதுவரை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 29 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 19 டி20 போட்டிகளிலும், இலங்கை அணி 9 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளிலும், இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடைசியாக 2023 ஆம் ஆண்டு ராஜ்கோட் மைதானத்தில் நடந்த போட்டியில் கூட இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களைக் குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இலங்கைக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் 5 போட்டிகளில் விளையாடி 254 ரன்களை எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 411 ரன்களை எடுத்துள்ளார். எனவே இன்னும் 157 ரன்களை எடுத்தால், ரோகித் சர்மாவின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடிப்பார். 85 ரன்களை எடுத்தால் விராட் கோலியின் சாதனையையும் சூர்யகுமார் முறியடிக்க உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இலங்கை அணிக்கு எதிராக ரோகித்தின் சராசரி 24.17 என்பதும், விராட்டின் சராசரி 67.80 என்பதும், சூர்யாவின் சராசரி 63.50 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மண்ணில் கடைசியாக நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்று அதற்கு பதிலடி தர காத்திருக்கிறது. அதேவேளையில் இலங்கை அணி சொந்த மண்ணில் தனது ஆதிக்கத்தை தொடரவும் முயற்சிக்கிறது.
மதீஷா பதிரானா இலங்கை அணிக்கான துருப்புச் சீட்டாக கருதப்படுகிறார். இன்றைய போட்டியில் அவர் களமிறங்கினால், இந்திய அணிக்கெதிரான அவரது முதல் போட்டி இதுவாகும். அவர் இலங்கை அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.