இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் இரு அணிகளுக்கு இடையே கடந்த ஜூன் 16ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (ஜூன் 19) பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ஷபாலி 20 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து தயாளன் ஹேமலதா களமிறங்கினார். ஆனால் அவரும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுர், மந்தனாவுக்கு கம்பெனி கொடுக்க ஆரம்பித்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், மேலும் விக்கெட்கள் விழாதவண்ணம் பார்த்துக்கொண்டனர்.
இதையும் படிக்க: ”240 இடங்களுடன் நிறுத்தி மக்கள் பாஜவுக்கு பாடம் புகட்டிவிட்டனர்” - அசாதுதீன் ஒவைசி
தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, இந்தப் போட்டியிலும் சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இறுதியில் அவர், 120 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.
மறுமுனையில் கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுரும் சதமடித்தார். குறிப்பாக கடைசி ஓவரில் சதம் விளாச 11 ரன்கள் தேவை என்ற நிலையில் 3வது பந்தில் பவுண்டரி, 4வது பந்தில் சிக்ஸர், 5வது பந்தில் பவுண்டரி அடித்து அசத்தலாக சதத்தை பதிவு செய்தார். அவர் 88 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 103 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தார். இவர்களின் அதிரடியால் இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த தொடரில் இரண்டு சதங்களைப் பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா, இந்திய வீராங்கனைகளில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த மிதாலி ராஜூடன் இணைந்தார். இருவரும் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுர் 6 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் 3 சதங்களுடன் பூனம் ராவத் உள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த மகளிர் தொடக்க வீராங்கனைகள் பட்டியலிலும் ஸ்மிருதி இணைந்துள்ளார். அந்தப் பட்டியலில் இலங்கை வீராங்கனை சாமரி அதபத்து, தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஆகியோருடன் 3வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். மூவரும் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸும் (12 சதம்), 2வது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனைகளான டாமி பியூமண்ட் மற்றும் சார்லட் எட்வர்ட்ஸ் ஆகியோர் தலா 9 சதங்களுடனும் உள்ளனர். மேலும், மந்தனா ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக, கடந்த 2016-17இல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்து, ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் ஆசிய பெண்மணி என்ற பெயரை மந்தனா பெற்றிருந்தார்.