நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு என 4 அணிகள் playoff சுற்றுக்கு சென்றுவிட்டன. சென்னை ரசிகர்கள், “அத ஏன் தம்பி ஞாபகப்படுத்துறீங்க? ஒரே துன்பமா இருக்கு” என கேட்கலாம். ஏனெனில் நேற்று நடந்த சம்பவங்கள், ‘நீங்க முடியுமா.. நினைவு தூங்குமா’ ரகங்கள். விடுங்கள்., நாம் இன்றைய போட்டிக்குள் போகலாம்.
ஒரு பக்கம் மூர்க்கமே உருவாக இருக்கும் ஹைதராபாத் அணி, மறுபக்கம் விளையாடிக் கொண்டிருந்த வீரர்களையும் சொந்த நாட்டிற்கு அனுப்பிவிட்டு கடைசி லீக்கில் களமிறங்கி இருக்கும் பஞ்சாப் அணி. இரு அணிகளும் மோதும் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் என்றே விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா... ஆமாம் பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் இவர் மூன்றாவது கேப்டன்.. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதனை அடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதர்வா டைட் மற்றும் ப்ரப்சிம்ரன் நிதானமாகவே ஆட்டத்தை ஆரம்பித்தனர். முதல் 5 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்களை எடுத்திருந்தது. ஓவருக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அல்லது இரண்டுமே வந்து கொண்டிருந்ததால் ரன்களை வேகமாகவே பஞ்சாப் வீரர்கள் குவித்து வந்தனர். ஆனால் பஞ்சாப் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி தன் பக்கம் ஆட்டத்தை திருப்பினார் நடராஜன். சிறப்பாக ஆடிய அதர்வா 46 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 1 விக்கெட்டை இழந்து 99 எடுத்தது.
பின் மீண்டும் தனது ஆக்ஸிலேட்டரை ஏற்றினார் ப்ரம்சிம்ரன். 12 ஆவது ஓவரை வீசிய நிதிஷ் ரெட்டி முதல் பந்தை நோ பாலாக வீச ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார் ரூசோ. அந்த ஓவரில் மட்டும் 20 ரன்களை விட்டுக்கொடுத்தார் நிதிஷ் ரெட்டி. அதிரடியாக விளையாடிய ப்ரப்சிம்ரன் 71 ரன்களில் ஆடியபோது விஜயகாந்த் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங் சிங் ரூசோவின் தவறால் தேவையில்லாமல் ரன் ஆவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரூசோவும் தொடர்ந்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்களை இழந்து 214 ரன்களை எடுத்தது.
215 ரன்கள் எனும் இமாலய இலக்குடன்., மன்னிக்கவும், ஹைதராபாத் அல்லவா பேட் செய்ய வருகிறது.. 215 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆனார் தல. அட அதாங்க நம்ம travis Headu. தொடர்ச்சியாக வந்த ராகுல் திரிப்பாதி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். பவர் ப்ளேவை பக்காவாக உபயோகித்த ராகுல் திரிப்பாதி மற்றும் அபிஷேக் ஷர்மா 5 ஓவர்களிலேயே 72 ரன்களை எடுத்தனர். ஆனால் 5ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ராகுல் திரிப்பாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 28 பந்துகளுக்கு 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா விட்ட அதிரடியை க்ளாசன் தொடர்ந்தார். ஆனால் நிதானமாக ஆடிய நிதிஷ் ரெட்டி 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த வீரர்களும் ஆட்டமிழந்தாலும் ஹைதராபாத் அணி வெற்றியை நோக்கி சென்றது. 19.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் நேற்று விராட் படைத்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் 37 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர்களை அடித்தவர்களது பட்டியலில் விராட் கோலி நேற்று முதலிடம் பிடித்தார். இந்நிலையில் அபிஷேக் சர்மா 41 சிக்சர்களை அடித்து விராட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ள நிலையில் ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது. இதன்காரணமாக ப்ளே ஆஃப் சுற்றில் Qualifier 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். ஆனால், என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.