நடப்பு ஐபிஎல் சீசனில் நேற்று (ஏப்ரல் 29) டெல்லி மைதானத்தில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் சந்தித்தன. அதன்படி, டாஸ் ஜெயித்த ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அது, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்கம் பேட்டர் அபிஷேக் ஷர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். மற்றொரு பேட்டரும் விக்கெட் கீப்பருமான கிளாசன் 53 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை மட்டுமே எடுத்து, 9 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியில் பேட்டரும் விக்கெட் கீப்பருமான பில் சால்ட் 59 ரன்கள் எடுத்தார். மற்றொரு பேட்டரான மிட்செல் மார்ஸ் 63 ரன்கள் குவித்தார். தொடக்க பேட்டர்கள் நிறைவான ஆட்டத்தைத் தந்தபோதும் டெல்லி அணி இறுதியில் பரிதாப தோல்வி அடைந்தது.
அதேசமயம், இந்தப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு இடையில், அடிதடி சண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் 4 பேர் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களின் சண்டைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதில் ஸ்டேடியத்திலிருந்த இருக்கைகள் சேதமடைந்தன. ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.