David warner Ricardo Mazalan
T20

"வார்னரின் இடத்தை இவர் நிச்சயம் நிரப்புவார்" யாரைச் சொல்கிறார் பான்டிங்..!

Viyan

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங். இந்த அணி பற்றியும், அணியின் வீரர்கள் பற்றியும் பேசிய அவர், வார்னரின் முக்கியத்துவத்தைப் பரைசாற்றினார். வார்னர் போன்ற ஒரு வீரர் வெளியேறும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எளிதில்லை என்று கூறினார் பான்டிங்.

"வார்னர் போன்ற ஒரு கேரக்டர் தான் உங்கள் அணிக்குத் தேவை. அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் வார்னர் போன்ற ஒருவர் தேவை. இயற்கையாகவே அவர் ஒரு வின்னர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமுமே வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையோடு தான் இருக்கும். அவர் களத்தில் காட்டும் ஆட்டிட்யூட், அவர் கிரிக்கெட் விளையாடும் விதமும் அதைத் தெளிவாகக் காட்டும்.

அதனால் வார்னர் வெளியேறும்போது உங்களுக்கு ரன்கள் மட்டுமே போகப் போவதில்லை. ஆனால் அவர் ஏற்படுத்தும் வெற்றிடத்தை நிரப்பக்கூடிய வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் போதுமான அளவுக்கான வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர் விட்டுப்போவது மிகப் பெரிய இடமாக இருக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த இடத்துக்கு ஆஸ்திரேலிய அணி பல வீரர்களைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஒருவேளை வார்னர் வெளியேறிய பிறகு அந்த இடத்துக்கு நேரடியாக ஃப்ரேஸர் மெக்கர்க் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் நான் ஆச்சர்யப்படுவேன். சில மாதங்களுக்கு முன்பு ஜேக் ஃப்ரேஸர் மெக்கர்க் ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனதைப் பார்த்தோம். அவருக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியில் பயிற்சி கொடுத்தது எனக்கான அதிர்ஷ்டம். அவர் அதீத திறமைகள் கொண்டவர்" என்று கூறினார் பான்டிங்.

மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட, அதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார் பான்டிங். "ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி இன்னும் அதிகம் பேசப்படும். வெளியே மட்டுமல்ல, உள்ளுக்குள்ளே கூட வீரர்கள் அவர்களுக்கான வாய்ப்புகளைப் புரிந்திருக்கிறார்கள். அந்த அணி எவ்வளவு ஸ்பெஷலானது என்பதைப் பற்றியும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு அணியில் நீங்கள் இருக்கும்போது ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இங்கே அவர்கள் அந்த டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. அவர்கள் நிச்சயம் இந்தக் கோப்பையை வெல்வதற்குத் தங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். நல்ல அனுபவம் கொண்ட வீரர்கள் நிறைய இருக்கிறார்கள்.

Mitchell Starc, right, talks to his captain Mitchell Marsh

அந்த அணியில் சில தலைவர்கள் இருக்கிறார்கள். மிட்செல் மார்ஷ் கேப்டனாக இருக்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் இந்த அணியில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நல்லபடியாக வழிநடத்தி வந்திருக்கிறார். அவர்கள் கோப்பை வெல்வதற்கு ஏற்றதுபோல் அனைத்து ஏரியாக்களையும் கவர் செய்திருக்கிறார்கள். ஒருசில வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பதால் அவர்கள் நிச்சயம் இந்த வாய்ப்பை தவறவிடமாட்டார்கள்" என்று கூறினார் பான்டிங்.

பான்டிங் சொன்னதைப் போலவே மிகவும் தீர்க்கமாகவே இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. ஓமனுக்கு எதிரான போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மிட்செல் மார்ஷின் அணி. முதலில் பேட்டிங் செய்து 164 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகவும் கடினமான ஆடுகளத்தில் ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சுமாரான நிலையில் தான் இருந்தது. 8.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், பான்டிங் சொன்னதுபோல் தன் அனுபவத்தைக் காட்டினார் வார்னர். நிதானமாக ஒரு முணையில் நிலைத்து நின்று ஆடினார். மறுபக்கம் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்ட, அந்த அணியின் ஸ்கோர் நல்லபடியாக உயர்ந்தது. இறுதியில் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் வார்னர். ஆஸ்திரேலிய அணி தங்கள் அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிராக சனிக்கிழமை விளையாடுகிறது.