தோனி ட்விட்டர்
T20

”சிறந்த வீரராக இருக்கலாம்; ஆனால்” - சாடிய தோனி.. நீக்கப்பட்ட அந்த வீரர்.. தேடிய CSK ரசிகர்கள்!

”எங்கள் அணியில் நாங்கள் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம். ஆனால், அவர் எங்கள் அணியின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாக இருந்தார்” என தோனி தெரிவித்திருக்கும் பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறி இருந்தாலும், அவ்வணி குறித்தும் தோனி குறித்தும் நாள்தோறும் சுவையான செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ’சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய வீரரை தேர்வு செய்ததாகவும், அவர் அணிக்காக விளையாடாமல், அவருக்கான தனிப்பட்ட ஆட்டத்தை ஆடுவதில் மட்டுமே தீவிரமாக இருந்ததாகவும், அவருக்காக பல அடிகள் இறங்கிச் சென்றும், அதை அவர் புரிந்துகொள்ளவில்லை என்றும் அதனால் அவரை அணியைவிட்டு நீக்க முடிவு செய்த’தாகவும் பேட்டி ஒன்றில் தோனி கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோனி

தோனி அளித்த அந்தப் பேட்டியில், ”எங்கள் அணியில் நாங்கள் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம். ஆனால், அவர் எங்கள் அணியின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாக இருந்தார். ஒட்டுமொத்த அணிக்காக இலக்கை நோக்கி ஆடச் சொன்னோம். அதற்காக நாங்கள் மூன்று அடிகூட, இறங்கிச் செல்ல தயாராக இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இதையடுத்து அவரிடம், ’அணியை பாதிக்காத வகையில் நீங்கள் செயல்படுங்கள்’ என்றோம். ஆனால், அதையும் செயல்படுத்தாதபோது, அவரை அணியிலிருந்து நீக்குவதுதானே நல்ல முடிவு” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே இருக்கு; இதெல்லாம் நடக்கும்” - இந்திய ஜோதிடர் கணிப்பு!

மேலும் அந்தப் பேட்டியில், “வியாபாரமோ, விளையாட்டோ எதுவாக இருந்தாலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். எங்கள் அணியின் இலக்கு என்பது ஒரு வீரரிடம் இருந்து அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான். அவர் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டால் நானே, அவரை அணியின் சொத்தாக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய முயற்சிப்பேன். ஆனால் அவர்களும் அதைப் புரிந்துகொண்டு அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அவர்கள் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவில்லை என்றால், இரண்டாவது வாய்ப்பை, நான்தான் எடுக்க முடியும்.

தோனி

ஒரு நபருக்காக ஒட்டுமொத்த அணியும் மாறுவதை நான் விரும்பவில்லை. அது மிகவும் தவறு. எனவே, அவரை அணியைவிட்டு அனுப்புவதுதான் ஒரே வழி. அவர் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும், அவரை அணியைவிட்டு நீக்கித்தான் ஆக வேண்டும். அவருடைய இடத்தை வேறு யாராவது வந்து நிரப்புவார்கள். அப்படி மாற்றாக வருபவர்கள் அந்த சிறந்த வீரருக்கு இணையாக செயல்படவில்லை என்றாலும் அணி சிறப்பாக செயல்பட உதவுவார்கள்” எனத் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி வருகிறது. எனினும் அந்தப் பேட்டியில், தோனி அந்த வீரரின் பெயரைக் குறிப்பிடவில்லை. மாறாக, அவர் கிரிக்கெட் உலகின் முக்கியமான வீரர் என்று மட்டும் சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார். தோனியின் இந்தப் பேட்டி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. பலரும் அந்த முக்கியமான வீரர் யாராக இருக்கும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகிய BCCI.. நிராகரிப்பதற்கு ரிக்கி பாண்டிங் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!